மாவத்தகம – தல்கஸ்பிட்டியவில் 13 வயது சிறுமி காளிதாஸ் விஜயகுமாரி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமியின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன.
சடலம் நேற்று (29) நள்ளிரவு அவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதுடன், இன்று காலை முதல் பிரதேசவாசிகள் சிறுமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இறுதிக்கிரியைகளின் பின்னர் சிறுமியின் சடலம் இன்று மாலை பொது மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது, கொலையுண்ட சிறுமிக்கு நியாயம் கோரி அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் பிரதேசவாசிகள் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இறுதிக்கிரியைகள் மாவத்தகம, சீராதுன்ன பொது மயானத்தில் இடம்பெற்றன.
மாவத்தகமயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை: சந்தேகநபர் விளக்கமறியலில்- (வீடியோ)
மாவத்தகம – தல்கஸ்பிட்டிய பகுதியில் 13 வயதான விஜயகுமாரி எனும் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேகநபரை பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பால் சேகரிக்கும் நிலையத்திற்கு நேற்று காலை 8 மணியளவில் 13 வயதான காளிதாஸ் வியஜகுமாரி வழமைபோன்று சென்றிருந்தார்.
எனினும், இது சிறுமியின் இறுதிப் பயணம் என்பதை அவர்களது உறவினர்கள் அறிந்திருக்கவில்லை.
பல மணி நேரம் கடந்தும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் பெற்றோருடன் இணைந்து கிராம மக்கள் கிராமம் முழுவதும் சிறுமியைத் தேட ஆரம்பித்தனர்.
இதன்போது சிறுமியின் வீட்டிற்கு சற்றுத் தொலைவிலுள்ள மற்றுமொரு வீட்டில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் காமுகனால் இந்த சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதை அடுத்தே ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபரும் அதே தோட்டத்தைச் சேர்ந்தர் என பொஸார் தெரிவித்தனர்.