“நான் காதலித்த பெண்ணினால் என் மனம் காயப்பட்டுப் போனது. என்னுடைய காதல் தோல்வி என்னை எங்கோ, எப்படியெல்லாமோ வாழ வைத்துவிட்டது.
காதலியினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நான் என் சொந்த மண்ணையும், சொந்தங்களையும் விட்டு வெகு தூரம் வந்துசேர்ந்தேன்.
எனினும், அதற்குபிறகும் என்னுடைய பயணம் முட்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது. சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து செய்யக்கூடாத பெரும் தவறைச் செய்துவிட்டேன். அதனால் தான் எனக்கு இன்று இப்படியொரு தண்டனை.
இது கொலைக்குற்றத்துக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தன் விடுதலை நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தர்ஷனவின் புலம்பலாகும். அவன் மனம் திறந்து கூறுகையில்,
“நான் என் குடும்பத்தில் இளையவன். எனக்கு இரு சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருக்கின்றார்கள். சகோதரர்கள் இருவரும் திருமணம் முடித்து அயலூரில் வசித்து வருகின்றார்கள்.
என் தந்தை விவசாயி. நான் கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எழுதிய போதும் எனக்கு உயர்தரத்தை தொடரும் அளவுக்கு பெறுபேறுகள் அமையவில்லை.
எனவே, நான் எனது தந்தைக்கு உதவியாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். எனது வீட்டைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாருமே என் தந்தையின் உறவுக்காரர்கள்.
என் தந்தையின் சகோதரியின் வீடு எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தது. என் மாமிக்கு இரண்டு பெண்பிள்ளைகள். மூத்த மகள் என்னை விட பெரியவள். இரண்டாவது மகள் என்னை விட இளையவள்.
அவள் தான் மதுவந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். சிறுவயது முதலே மதுவந்தி என் மீது மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் இருப்பாள்.
அதுவே பருவ வயதை அடைந்தவுடன் காதலாக மாறியது. நானும் மதுவந்தியும் காதலித்தோம். அவள் என்னை உண்மையாக காதலித்தாள். எனினும், என் மாமிக்கு எங்கள் காதல் விவகாரம் பிடிக்கவில்லை.
“என் மகளை ஒரு விவசாயிக்கு திருமணம் செய்து வைக்க மாட்டேன்” என்று கூறி என்னைப் புறக்கணித்தார். அதுமட்டுமின்றி, ஊரிலுள்ள அனைவரிடமும் மாமி அப்படியே கூறியிருந்தார்.
எனவே எங்காவது போய் திருமணம் செய்துகொள்வோம் என்று மதுவந்தியை வீட்டை விட்டு வர சொன்னேன். எனினும், அவள் வர மறுத்து விட்டாள். பெற்றோருக்காக என் காதலை உதறித் தள்ள ஆரம்பித்தாள்.
மாமி அவளுக்கு நல்ல வசதியான வரன் ஒன்றை பார்த்தாள். மதுவந்திக்கு ஆரம்பத்தில் அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை.
இருப்பினும், மாமியின் கட்டாயத்தின் பேரில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாள். எனவே, என் கண்ணெதிரே நான் விரும்பிய ஒரு பெண் இன்னுமொருவரை திருமணம் செய்துகொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..
நான் அங்கிருந்தால் என்னை அறியாமல் மதுவந்திக்கும், மாமிக்கும் ஏதும் செய்துவிடுவேனோ. என்ற பயம் எனக்குள் இருந்தது.
என்னால் எல்லோரையும் போல் சகஜமாக இருக்க முடியவில்லை. எனவே, நான் ஊரை விட்டுச் செல்ல தீர்மானித்தேன்.
நான் அதிகாலை 4 மணிக்கு எங்கள் ஊரிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் பஸ்ஸில் ஏறி இரகசியமாக கொழும்பு வந்து சேர்ந்தேன். குறைந்த பட்சம் என்னுடைய தாய், தந்தை கூட அதை அறிந்திருக்கவில்லை.
நான் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இரவு எல்லோரும் நித்திரை கொள்வதற்கு முன்பே நான் நித்திரைக்கு சென்றேன்.
அதன்பின் எல்லோரும் நித்திரைக்கு சென்று ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் நேரத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.
எனக்கு வீட்டிலிருந்து எடுத்து வர பெரிதாக எதுவும் இருக்கவில்லை. இரண்டு மூன்று சேட், காற்சட்டைகளை மட்டுமே பையொன்றில் போட்டுக்கொண்டு வந்தேன்.
சந்தியில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ்ஸிலிருந்தவர்கள் யாரும் என்னை அடையாளம் காணவில்லை. எனினும், பஸ் சாரதியும், பஸ் நடத்துநரும் என்னை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டார்கள்.
அவர்கள் என்னிடம் “நீ குணபாலின் மகன் தானே? எங்க தம்பி இந்த அதிகாலையில் போகின்றீர்கள்?” என்று வினவினார்கள்.
அதற்கு நான் “இல்லை அங்கிள் கொழும்பிலிருக்கும் மாமியின் வீட்டுக்கு போகின்றேன் ” என்று பதிலளித்து, எனக்குரிய யன்னல் ஓரத்திலுள்ள ஆசனத்தில் அமர்ந்துகொண்டேன். அதன்பின் பஸ் வண்டி அதன் பயணத்தை ஆரம்பித்தது.
அதிகாலையில் வீசும் சில்லென்ற தென்றல் காற்று என் மனதுக்கு இதமாக இருந்ததுடன், என்னைப் பலவாறு சிந்திக்கவும் வைத்தது.
அந்த நேரம் வரை எனது பயணத்தின் நோக்கம் எனக்கே தெரியாது. அன்றைய நிலையில் எனக்கு ஊரை விட்டுப்போனால் போதும் என்பது மட்டுமே என் சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தது. நான் ஒருவழியாய் கொழும்பு வந்துசேர்ந்தேன்.
கொழும்புக்கு வந்தவுடன், எனக்கு தங்குவதற்கு என்று ஒரு இடம் இருக்கவில்லை. பாதைகளும் சரியாக தெரியாது. பல நாள் கொழும்பில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தேன்.
இறுதியில் கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக இரவு நேரங்களில் ஒரு பிச்சைக்காரனைப் போல் உறங்கி வந்தேன்.
அந்த நாட்கள் மிகவும் கொடூரமானவை. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் தான் புகையிரத நிலையத்துக்கு முன்பாக வைத்து முதலாளியொருவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது..
அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு ,“நீ பல நாள் இந்த இடத்தில் இருப்பதை அவதானித்திருக்கின்றேன். நீ வா என்னோடு போகலாம் ” என்று அழைத்தார்.
நானும் செல்வதற்கு இடம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்ததால் அவருடன் செல்ல சம்மதித்தேன். அதன்பின் அவர் என்னை காரில் ஏற்றி அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
விசாலமான காணி பரப்பில் ஓங்கி வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுக்கு நடுவே அவருடைய சொகுசு வீடு அமைந்திருந்தது..
ஒரு நிமிடம் எனக்கு பிரமிப்பாகவிருந்தது. என்னுடைய வாழ்நாளில் அப்படியொரு வீட்டை நான் நேரில் கண்டது கிடையாது.
அவர் வீட்டுக்குள் அழைத்துச் சென்று எனக்கென்று தனியான அறையொன்றை ஒதுக்கிக் கொடுத்தார். அதன்பின் எனக்கு வயிறு நிறைய உண்ண உணவு கொடுத்து ஓய்வு எடுக்கச் சொன்னார்.
நன்றாக சாப்பிட்டு முழு நாளும் நித்திரைகொண்டேன். அதற்கு பிறகு தான் எனக்கு புது தெம்பொன்று வந்தது. மறுநாள் காலை முதலாளி என்னை அவருடைய காரில் வெளியில் அழைத்துச் சென்றார். அப்படி போகும் வழியில் தான் அவர் என்னைப் பற்றிய விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.
நான் என்னுடைய காதல் விவகாரம் எல்லாவற்றையும் அவரிடம் மறைக்காது கூறினேன். அவை எல்லாவற்றையும் கேட்டறிந்த அவர், “தம்பி இந்த கொழும்பு நகரில் ஒன்றுக்கு இரண்டு பெண்பிள்ளைகளை பார்க்கமுடியும்.
அதை எல்லாம் நினைத்து கவலைப்படாதே.. நான் உனக்கு சம்பளமொன்று தருகின்றேன்.. நீ நான் சொல்வது போல் இந்த வீட்டில் எனக்கு விசுவாசமாக இருந்தால் போதும். ” என்று கூறினார்.
அதன் பிறகு நான் அந்த வீட்டில் இருந்தேன். அங்கு எனக்கென்று பெரிதாக வேலைகள் எதுவும் இருக்கவில்லை. முதலாளியின் வீட்டில் அவரும், சமையல் வேலைகளை பார்ப்பதற்கு என்று ஒரு வயதான பெரியவருமே இருந்தார்கள்.
மனைவி, பிள்ளைகள் என்று யாரும் இருக்கவில்லை. நான் அது தொடர்பாக தேடி பார்க்கவும் விரும்பவில்லை. முதலாளி வீட்டில் இருப்பது குறைவு.
எப்போதாவது தான் வீட்டிற்கு வருவார். அதுவும், சில நாட்களில் நள்ளிரவில் வேனில் வந்து ஏதோ பொருட்களை இறக்குவார்.
அதுமட்டுமின்றி, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முதலாளியுடன் யாராவது ஒரு பெண் வீட்டுக்கு வந்து போவார்கள்.
முதலாளி ஒரு நாள் என்னிடம் வந்து லேனர்ஸுக்கு சென்று டிரைவிங் பயிற்சி எடுக்குமாறு கூறி பணம் கொடுத்தார். அதன்படி நானும் லேனர்ஸுக்கு சென்று பயிற்சி பெற்று சாரதி அனுமதி பத்திரத்தைப் பெற்றுக்கொண்டேன். அதன்பின் முதலாளி அவருடைய காரை எனக்கு கொடுத்து ஓட்டச் சொன்னார்.
இதற்கிடையில், ஒரு நாள் முதலாளியை தேடி பெண்ணொருவர் வீட்டுக்கு வந்தார். அவர் பார்க்க அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்சியளித்தார்.
நான் உடனே யாருக்கும் தெரியாமல் முதலாளியின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி விடயத்தை சொன்னேன். அதன்பின் முதலாளி உடனடியாக வீட்டுக்கு வந்தார்.
அப்போது தான் அவர் முதலாளியின் மனைவி என்பதை நான் அறிந்துகொண்டேன்.. அவர் ஒரு வாரம் வரை வீட்டிலிருந்தார்.
அந்த நாட்களில் முதலாளி மிகுந்த பொறுப்புடன் நடந்துகொண்டார். முதலாளியின் மனைவி என்னிடமும் வந்து முதலாளி தொடர்பாக கேட்டார்.
நான் முதலாளியை தேடி வீட்டுக்கு வரும் பெண்கள் தொடர்பாக எதுவுமே சொல்ல போகவில்லை. முதலாளி தொடர்பாக அவரிடம் நல்லவிதமாக தான் சொன்னேன். அவர் ஒரு வாரத்துக்கு பின்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
அதற்கு பிறகு முதலாளியின் மனைவி எந்த நேரத்திலும் வீட்டுக்கு வரலாம் என்ற அச்சத்தில் முதலாளி மிகுந்த அவதானத்துடன் இருந்தார்.
அதுமட்டுமின்றி, அடிக்கடி வீட்டைச் சுற்றி பொலிஸாரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதை நான் பல நாள் அவதானித்தேன்.
எனினும், ஏன்? எதற்கு? என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இது தொடர்பாக நான் முதலாளியிடமும் சொன்னேன். அதற்கு அவர் என்னையும், சமையல் வேலை செய்யும் அங்கிளையும் கவனமாக வீட்டில் இருக்குமாறு கூறினார்.
இதனிடையே ஒருநாள் இதற்கு முதல் வீட்டிற்கு வராத பெண் ஒருவருடன் முதலாளி வீட்டுக்கு வந்தார். அதன்பின் சிறிது நேரத்தில் முதலாளிக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
அறைக்குள் இருவரும் தகாத வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டார்கள்.. எனக்கும் அங்கிளுக்கும் ஒன்றுமே புரியவில்லை.
முதலாளி அறையிலிருந்து வெளியே வந்து சிறிது நேரத்துக்கு என்னையும் அங்கிளையும் தோட்டத்தில் சென்று இருக்குமாறு கூறினார். எனவே, நாங்கள் இருவரும் தோட்டத்திற்கு சென்று வெகு நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம்..
அதன்பின் சிறிது நேரத்தில் நாங்கள் இருவரும் மீண்டும் வீட்டுக்குள் சென்றோம். அப்போது எந்தவித சத்தமும் இருக்கவில்லை.
முதலாளியின் அறைக் கதவு மூடப்பட்டிருந்தது. எனவே அந்தப் பெண்ணும் முதலாளியும் நித்திரை கொண்டிருப்பார்கள். என்று நினைத்து நாங்கள் இருவரும் நித்திரைக்குச் சென்றோம்.
மறுநாள் நான் நித்திரையிலிருந்து எழுந்து எனது அறையிலிருந்து வெளியில் வரும் போது முதலாளி வீட்டிலிருந்து சென்றிருந்தார்.
அவருடைய கார் அங்கிருக்கவில்லை. அதன்பின் சிறிது நேரத்தில் நான் வழமைபோல் முதலாளியின் அறையை சுத்தம் செய்ய சென்றேன். அப்போது அந்த பெண் நித்திரையிலிருந்தார்.
எனவே, நான் அறையை சுத்தம் செய்யாது வந்துவிட்டேன். அதன்பின் சிறிது நேரத்தில் அவர் நித்திரையிலிருந்து எழுந்திருப்பார் என்று நினைத்து தேநீரையும் எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் சென்றேன்.
எனினும், அப்போதும் அவர் நித்திரையிலேயே இருந்தார். எனவே, எனக்கு அது சந்தேகத்தை உண்டுபண்ணியது. அவரை எழுப்ப முயற்சித்தேன்.
பலமுறை கூப்பிட்டு பார்த்தேன். அவர் எழுப்பவில்லை. அதன்பின் நான் அவருடைய உடம்பில் கை வைத்து பார்த்தேன். அப்போது உடம்பு குளிர்ச்சியாகவிருந்தது.
நான் அரை மணித்தியாலத்திற்கு மேல் அவரை எழுப்ப முயற்சித்தேன். எனினும் அவர் எழும்பவில்லை. அதன்பின் நான் அறையிலிருந்து வெளியில் வந்து அங்கிளிடம் விடயத்தைக் கூறினேன்.
அதன்பின் அவரும் வந்து பார்த்துவிட்டு அவர் இறந்திருக்க வேண்டும் . நாங்கள் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிப்போம் என்று கூறினார்.
அதன்படி நாங்கள் மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினோம். எனினும், துரதிஷ்டவசமாக பொலிஸார் என்னையும் அங்கிளையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தார்கள்.
முதலாளி அதற்குபிறகு எங்கு சென்றார், என்ன ஆனார் என்று ஒன்றுமே தெரியாத நிலையில். அவர் எங்கோ தலைமறைவாகியிருந்தார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.. அதன் முடிவுகளின்படி அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது உறுதிசெய்யப்பட்டது..அதன்பின் பொலிஸார் அங்கிளை ஒருவாறுவிடுதலை செய்த போதும் சந்தேகத்தின்பேரில் என்னை பல நாள் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்தார்கள்.
எனினும் அவ்விசாரணைகளின் அடிப்படையில் இக்கொலையுடன் எனக்கு தொடர்பில்லை என்பது உறுதியானது. அதன்பின்னரே என்னை விடுதலை செய்தார்கள்.
ஆயினும், நான் விளக்கமறியலில் இருந்த அந்த நாட்களில் உடல், உளரீதியில் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானேன்.
எனவே, முதலாளியை எப்படியாவது கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரம் எனக்குள் இருந்தது. முதலாளியை அங்குமிங்கும் தேடித் திரிந்தேன். அவரைத் தெரிந்தவர்களிடம் அவரை பற்றி விசாரித்தேன்.
அப்போது தான் முதலாளி ஒரு போதைப்பொருள் வியாபாரி என்பதை நான் அறிந்துகொண்டேன். எனினும், அந்த பாவப்பட்ட பணத்தில் தான் நானும் இத்தனை நாள் வாழ்ந்திருக்கின்றேன். என்பதை நினைக்கும்போது தர்மசங்கடமாகவிருந்தது.
அதன் பின்னர் நான் எந்த தவறான தொழிலிலும் ஈடுபடவில்லை. எனது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக நேர்மையான முறையில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டேன்.
எனக்கு கஷ்டம் என்று நினைத்து எப்போதுமே மீண்டும் ஊருக்கு செல்ல நினைக்கவில்லை. தனிமையிலேயே என்னுடைய பொழுதுகள் கழிந்தன.
இதனிடையே, ஒருநாள் எதேச்சையாக முதலாளியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நான் ஒரு பழக்கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். முதலாளி நான் யார் என்று அடையாளம் காணவில்லை.
எனினும், எனக்கு அவரை கண்டவுடன் கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் பீரிட்டு வந்தது. நான் கையிலிருந்த கத்தியை எடுத்து “நீ தானே கொலையை செய்துவிட்டு என்னை மாட்டிவிட்டவன்” என்று கூறிக்கொண்டே முதலாளியை சரமாரியாக கத்தியால் குத்தினேன்.. முதலாளி துடிதுடித்து நிலத்தில் சாய்ந்தார்.
அவருடைய உயிர் பிரிந்தது. அதன்பின்னரே பொலிஸார் என்னை கைது செய்தனர். அன்று நான் செய்யாத குற்றத்துக்காக சிறைக்கு வந்து தண்டனை அனுபவித்தேன். இன்று செய்த குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கின்றேன். இது தான் என் தலை விதி.
மூலம்: சிங்கள நாளேடு