இவ்வாரம் சம்பூர் கிராமத்தில் இடம்பெற்ற பாலகன் தருஷனின் மரணம் அக்கிராமத்தையே சோக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளிக்குப் போய் ஒரு மாதங்கூட ஆகவில்லை. படுகொலை செய்யப்பட்டானா? பரிதாபகரமாக இறந்தானா? தவறுதலாக விதியின் விளையாட்டா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மரணம் நிகழ்ந்து விட்டதாக சம்பூர் மக்கள் ஓலமிடுகிறார்கள்.
பட்ட காலிலேபடும் கெட்ட குடியே கெடும் என்பதுபோல் கடந்த 9 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு இடிக்குமேல் இடி விழுந்ததுபோல் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை (25.01.2016) மாலை நடந்துள்ளது.
7 ஆம் வட்டாரம் சம்பூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் குகதாஸ், ஜெயவாணி ஆகியோருக்கு மூன்றாவது புத்திரனாகப் பிறந்த தருஷன் விளையாடுவதற்காக மாலை தனது அண்ணனுடனும் அயல் வீட்டு நண்பனுடனும் சென்றுள்ளான்.
மாலை பட்டுப் போன நிலையில் தனது பிள்ளையைத் தேடியுள்ளார் தாய். அயல் வீட்டு நண்பன் வீடு சென்று விட்டான். உடன் பிறந்த அண்ணன் தனது தம்பியை விளையாட விட்டு வீடு சென்றுவிட்டான்.
தருஷன் தனது வீட்டுக்கு முன்னுள்ள தெரு வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான் தந்தை இதை அவதானித்திருக்கிறார்.
தருஷனுக்கு மூத்த சகோதரர்கள் இருவர். விதுஷன், வினோஜன். ஐந்து வயது பூர்த்தியாகிய நிலையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்பட்டு சுமார் இரு வாரங்களுக்கு முன்பிருந்துதான் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளான்.
தனது மகனைக் காணாத தாய் ஜெயவாணி மிக அருகிலுள்ள சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் பொலிஸார் மற்றும் உறவினர்கள் ஊரவர்களின் உதவியுடன் பிள்ளையை தேடியுள்ளார்.
மகனை எங்குமே காணாத நிலையில் சந்தேகம் கொண்ட நிலையில் தனது வீட்டுக்கு பின்புறமாக சுமார் 30 மீற்றர் தொலைவிலுள்ள பாவிக்கப்படாத பாதுகாப்பு அற்ற கிணற்றடிக்குச் சென்று ஊரவர், உறவினர், பொலிஸார் தேடியுள்ளனர்.
மாலை நேரமானபடியால் கிணறு தெளிவற்றுக் காணப்பட்ட நிலையில் ரோச்சின் உதவியுடன் தேடிய போது சிறுவன் அந்த பாழடைந்த கிணற்றில் குப்புற கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மிக நீண்டகாலமாக பாவிக்கப்படாமலும் பாதுகாப்பாக கட்டப்படாமலும் தரையோடு தரையாகவுள்ள இக்கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை மீட்பதற்கு சுழியோடி ஒருவரின் துணை வேண்டியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் இப்பகுதிக்குரிய மரண விசாரணை அதிகாரி ஏ.கே.ஏ. நூருள்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மரண விசாரணை அதிகாரி ஊடகவியலாளர் ஒருவருடன் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சுமார் இரவு 10.45 போல் வருகை தந்துள்ளார்.
சுழியோடி கிணற்றுக்குள் இறக்கப்பட்டார். பொலிஸார் மற்றும் பெருந்திரளான மக்கள் சூழ்ந்து நிற்க. சிறுவன் தருஷனின் உடல் மீட்கப்பட்டது. சுமார் நடுநிசி 12.10 போல் சடலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
ஊரவர்களுக்கும் பொலிஸாருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பாலகனின் வயிற்றுடன் சுமார் 3 கிலோவுக்கு மேற்பட்ட எடையுடன் கல்லொன்று பிணைக்கப்பட்டு அந்த பிணைப்புக்குரிய முடிச்சு முதுகுப்புறம் போடப்பட்டிருந்தது.
கல்லைப் பிணைப்பதற்கு பாவிக்கப்பட்ட கயிறு சப்பாத்து கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பலமுள்ள லேஸ் இந்த லேஸ் சாதாரண ஒரு நபர் பாவிக்கும் லேஸ் அல்ல என்ற கருத்தும் அவ்விடத்தில் பேசப்பட்டதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.
மரண விசாரணை அதிகாரிக்கு சிறுவனின் மரணத்தின் மீது ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை சந்தேகங்களும் ஊகங்களும் பலவாக இருந்த காரணத்தினால் மரண விசாரணை அதிகாரி பொலிஸாரின் உதவியுடன் மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.ரிஸ்வானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறுவர் துஷ்பிரயோகம், படுகொலைகள் பாலியல் வன்மங்கள் பெரியளவில் காணப்படாத மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்ற போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பது மறுப்பதற்கு இல்லையென்றே கூறவேண்டும்.
ஞாபகத்துக்கு எட்டிய வகையில் சுமார் 45 வருடங்களுக்குமுன் புறநகர் பகுதியான ஜமாலியா கிராமத்தில் நடந்த அலிகரன் படுகொலை, 2009 இல் பாலையூற்று ஜூட் ரெஜிவர்ஷா படுகொலை, 2014 ஆம் ஆண்டில் குச்சவெளிப் பிரதேசத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சிறுமி துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் திருகோணமலைப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களாகும்.
தருஷனின் படுகொலையானது சம்பூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள அதேநேரம், இக்கொலை ஏன் செய்யப்பட்டது? யாரால் செய்யப்பட்டது? கொலை செய்யப்பட்ட பின் சிறுவன் கல்லுக்கட்டி கிணற்றுக்குள் போடப்பட்டானா?
அல்லது உயிருடன் கிணற்றுக்குள் போடப்பட்டதனால் மூச்சுத்திணறி உயிர் இழந்தானா? இதன் சூத்திரதாரிகள் யார் என்ற சந்தேகங்களும் மர்மங்களும் பொலிஸாரை மாத்திரமல்ல பெற்றோரையும் கிராமத்தைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
மரண விசாரணை அதிகாரி, நீதிவான் ஆகியோரின் ஆலோசனைக்கும் அறிவுறுத்தலுக்கும் அமைய சிறுவனின் சடலம் செவ்வாய்க்கிழமை (26.01.2016) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் சம்பூர் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல திருகோணமலை மாவட்டம் முழுவதுமே பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட சம்பூர் பிரதேசத்திலுள்ள மக்கள் இன்னும் குடியேற்றப்படாத குறைநிலை காணப்படுகிறது. 818 ஏக்கர் நிலம் அண்மையில் விடுவிக்கப்பட்டபோதும் இம்மக்கள் குடியேற்றத்தில் இன்னும் காலதாமத நிலைகள் காணப்படுகின்றது.
பூரண பிரதேச குடியேற்றம் இடம்பெறவேண்டுமாயின் அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், போக்குவரத்து, பாடசாலை, முன்பள்ளி, குடிநீர் விநியோகம், பொது வசதிகள் இன்னும் செய்யப்பட வேண்டுமென மக்கள் தமது அதிருப்திகளை தெரிவித்து வருகின்றார்கள்.
இது தவிர இன்னும் விடுவிக்கப்படாத 237 ஏக்கர் நிலப்பரப்பில் தான் சம்பூர் மக்களின் பூர்வீக வாழ்க்கை முறைகள் அமைந்ததாக கூறப்படுகிறது.
விடுவிக்கப்படாத பகுதியில் இரு பாடசாலைகள், கூட்டுறவு சங்கம், சனசமூக நிலையம், பொது மண்டபம் என ஏகப்பட்ட மக்களின் பாவனைக்கு வேண்டிய வசதிகள் இருப்பதாகவும், இவை விடுவிக்கப்படுகிற போதே சம்பூர் மக்களின் பூரண மீள்குடியேற்றம் இடம்பெற்றதாக கருதமுடியுமென சம்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கு.நாகேஸ்வரன் தெரிவித்தார்.
இவை ஒருபுறமிருக்க சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் அம்மக்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கைகள் அதிகமானவையாகும்.
இந்திய அரசு நிர்மாணிக்க இருக்கும் அனல் மின்நிலையத்தினால் அங்கு வாழும் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் விபரிக்க முடியாத பாதிப்புக்கள் ஏற்படும், இதனால் சம்பூர் கிராமத்தில் தொடர்ந்தும் மக்கள் வாழமுடியாத ஆபத்து நிலையொன்றே ஏற்படும்.
அரசாங்கம் சம்பூரை விடுவித்த போதும் அனல் மின்நிலையம் நிர்மாணம் எதிர்கால தம் வாழ்வியலுக்கு பெரும் சவாலாகவே இருக்கப் போகிறது என்ற அவநம்பிக்கை கொண்டவர்களாகவே சம்பூர் மக்கள் விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறி வருகின்றார்கள்.
இவற்றுக்கு மேலாக ஜப்பான் நாட்டு தனியார் நிறுவனமொன்றும் அனல்மின் நிலையமொன்றை இப்பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது என்ற வதந்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கிற நிலையில் தான் இச்சிறுவனுக்கு இப்படியொரு ஆபத்தும் நேர்ந்துள்ளது.
சம்பூர் மக்களின் வாழ்வியலைப் பொறுத்தவரை அவர்களின் அடிப்படைக் கட்டுமானங்கள் உடைந்துபோன நிலையில் தான் 9 வருடங்களுக்குப் பிறகு மீள்குடியேறிவருகின்றார்கள். போதிய பிழைப்புக்கள் இல்லை.
விவசாயமும் மீன்பிடியும் பழைய நிலைக்கு மீள்எழுச்சி பெறுவதற்குரிய பொருளாதார வள பற்றாக்குறையுடன் அரசாங்கத்தின் உதவியென்பது ஆனைப்பசிக்கு சோளப்பொரிபோட்ட கதையாகவேயிருக்கின்றது.
இவை அனைத்துக்கும் மத்தியில் தான் தாங்கள் சொந்த மண்ணில் குடியேறிவிடுவோமென்ற ஆர்வத்துடனும் ஆதங்கத்துடனும் சம்பூர் மக்கள் குடியேறிவருகின்றார்கள்.
குடியேறும் அந்த மக்களுக்குத்தான் சாண் ஏற முழம் சறுக்குவதுபோல் இவ்வகைக்கெடுதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. சிறுவனுக்கு நேர்ந்த இச்சம்பவத்தின் பின்னணியில் எவ்வகைச் சூத்திரம் இருக்கிறது என கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் சம்பூர் மக்கள்.
இச்சிறுவனின் படுகொலை அல்லது மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றார்கள். அச்சிறுவனின் உறவினர்களும், ஊர்மக்களும், விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை யார் அழைத்துச் சென்றார்கள் என்ற விடயம் கண்டறியப்படவில்லை என்றும் இதுவிடயம் தொடர்பில் பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முடக்கி விடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலையாளி சிறுவனின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு மறைப்பதற்காக கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் போட்டிருக்கலாமென ஒரு சாராரின் சந்தேகமும் சிறுவன் எதையாவது கண்டுவிட்டான்.
அந்த உண்மையை தெரியப்படுத்தி விடுவான் என்ற பயத்தின் காரணமாக இது நடந்திருக்கலாமென இன்னொருசாராரும் இவ்வாறு சந்தேகங்களும் ஊகங்களும் வளர்ந்து கொண்டே போகிறது.
இனி பிரேதப் பரிசோதனை அறிக்கை எதைத் தெரிவிக்கிறது எனப் பார்ப்போம். திருகோணமலை பொது வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.கே.எஸ். ராஜபக் ஷவே மேற்படி சிறுவனின் பிரேத பரிசோதனைகளை செய்துள்ளார்.
அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது சிறுவனின் மரணம் சந்தேகத்துக்கு இடமானதுதான் இயற்கையாக ஏற்பட்ட மரணமாக இருக்க முடியாது.
மரணத்துக்கான காரணங்களை மருத்துவ முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஆதாரங்களை பரிசீலித்து வருகிறோம்.
உரிய காலத்தில் மருத்துவ அறிக்கை வழங்கப்படுமென சுருக்கமாக தெரிவித்தார். நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணத்துக்கு காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.
சிறுவனின் ஊரவர்கள் சிலர் இப்படியொரு சந்தேகத்தையும் வெளியிட்டார்கள். சிறுவன் உயிருடன் கல்லில் கட்டி கிணற்றில் இறக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவன் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம்.
இல்லையாயின் அரைகுறை உயிருடன் கிணற்றுக்குள் போடப்பட்டிருக்கலாம். ஆழமான கிணறு அவனுக்கு எமனாக மாறியிருக்கலாமென பல்வேறு சந்தேகங்களைத் தெரிவிக்கின்றனர்.
பொதுவாகவே மீள்குடியேறிய மக்கள் பயத்துடனும் பீதியுடனுமே இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். மீள்குடியேறிய இடத்திலிருந்து தற்பொழுது இயங்கி வரும் பாடசாலைகளுக்கு நூற்றுக் கணக்கான மாணவ மாணவிகள் நடந்தே சென்று கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் பிள்ளைகளுக்கு மீண்டுமொரு ஆபத்து இப்படி ஏற்பட்டு விடக்கூடாது என அஞ்சுகின்றனர். எப்படியிருந்த போதிலும் இச்சிறுவனின் மரணம் மூதூரை பீதி கொள்ள வைத்திருக்கிறது என்பதேயுண்மை.
பாடசாலைக்கு இந்தப் பாலகன் போய் மூன்று வாரம் கூட ஆகாத நிலையில் இவனின் மரணம் சோகத்தையும் பீதியையும் சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது என்பதேயுண்மை.
-திருமலை நவம்-