இநந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்­மையில் கொழும்­புக்கு மேற்­கொண்ட பய­ணத்தை அடுத்து வெளி­யி­டப்­பட்ட கூட்­ட­றிக்­கையில், இலங்­கையில் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது தொடர்­பான விட­யங்கள் குறித்தோ எந்தக் கருத்தும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

இது இந்­திய ஊட­கங்கள் மத்­தியில், அதுவும் குறிப்­பாக புது­டில்­லியைத் தள­மாக கொண்ட ஆங்­கில ஊட­கங்கள் மத்­தியில் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஏனென்றால், எப்­போ­தெல்லாம், இலங்கை அர­சாங்கத் தலை­வர்­களை, இந்­திய அர­சாங்­கத்தின் தலை­வர்­களும், அமைச்சர்­களும் சந்­திக்­கின்­ற­னரோ, அது தொடர்­பாக வெளி­யி­டப்­படும் கூட்­ட­றிக்­கை­க­ளிலும், செய்­தி­யாளர் சந்திப்புகளிலும், இலங்கைத் தமிழர் விவ­காரம் தொடர்­பாக குறிப்­பிடத் தவ­ற­வி­டப்­ப­டு­வ­தில்லை.

13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும், அனைத்து இன மக்­களும் கெள­ர­வ­மா­கவும் நீதி­யா­கவும், சமத்­து­வ­மா­கவும் வாழும் நிலை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தையும் இந்­தியா தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்தி வந்திருக்­கி­றது.

இந்த நடை­முறை பல ஆண்­டு­க­ளா­கவே இருந்து வந்­தாலும், இம்­முறை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பய­ணத்தின் பின்னர் வெளி­யி­டப்­பட்ட கூட்­ட­றிக்­கையில் அது­பற்றி எது­வுமே குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. இலங்­கையில் அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க முயற்­சிகள் பற்­றியும் கூட அதில் ஏதும் கூறப்பட்டி­ருக்­க­வில்லை.

இதனால், இலங்­கையின் தேசியப் பிரச்­சினை, போருடன் தொடர்­பு­டைய மற்றும் போருக்குப் பிந்­திய விவ­கா­ரங்கள், தமிழர்­களின் உரி­மை­யுடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களில் இருந்து இந்­தியா ஒதுங்­கிக்­கொள்ள முனை­கி­றதா? என்ற கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்­கைக்கு இம்­முறை மேற்­கொண்ட பய­ணத்தின் போது, சில விட­யங்கள் திட்­ட­மிட்டோ எதேச்­சை­யா­கவோ தவிர்க்­கப்­பட்­டன என்­பது உண்மை.

சுஷ்மா சுவராஜ். இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டதன் பிர­தான நோக்கம், ஒன்­ப­தா­வது இந்­திய –இலங்கை கூட்டு ஆணைக்­குழுக் கூட்­டத்தில் பங்­கேற்­பது தான்.

ஆனாலும், அவர் அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கும் யாழ்ப்­பாணம் செல்­வ­தற்கும் முன்­ன­தாகத் திட்­ட­மிட்­டி­ருந்தார்.

யாழ்ப்­பா­ணத்தில் இந்­தி­யாவின் உத­வி­யுடன் புன­ர­மைக்­கப்­படும் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கை, அதி­கா­ர­பூர்­வ­மாக கைய­ளிக்கும் நிகழ்வில் சுஷ்மா சுவராஜ் பங்­கேற்பார் என்று கூறப்­பட்­டது.

அதற்­காக, அவ­சர அவ­ச­ர­மாக விளை­யாட்­ட­ரங்கைப் புதுப்­பித்தல் பணி­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால், கடைசியில் சுஷ்மா சுவராஜ் யாழ்ப்­பாணப் பயணத்திட்­டத்தை கைவிட்டார்.

வடக்கு, கிழக்கு, மலை­யக, அர­சியல் பிர­தி­நி­தி­க­ளு­டனும் சுஷ்மா சுவராஜ் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்த போதிலும், கூட்ட­றிக்­கையில் தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்த எந்தக் கருத்தும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இந்த இரண்டு விட­யங்­களும் தவிர்க்­கப்­பட்­ட­தற்கு ஏதேனும் உள்­ளக கார­ணங்கள் இருக்­க­லாமோ? என்ற வினாக்கள் இருக்­கவே செய்­கின்­றன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் சுஷ்மா சுவராஜ் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தார். அதில் அவர் பல்­வேறு விட­யங்கள் குறித்துப் பேசப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யான போதிலும், விரி­வான எந்த தக­வல்­களும் கசிய விடப்­ப­ட­வில்லை.

IN1இந்­தியா நினைத்தால் எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­காண முடியும் என்று மொட்­டை­யான ஒரு கருத்தைக் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன்.

அவர் அவ்­வாறு கூறி­யதன் அர்த்தம், இந்­தியா இன்­னமும் அத்­த­கை­ய­தொரு முயற்­சியில் இறங்­க­வில்லை என்­ப­தையா அல்­லது இந்­தியா மனது வைத்தால் எல்லாம் நடந்து விடும் என்­ப­தையா? என்ற கேள்வி இருக்­கி­றது.

எவ்­வா­றா­யினும், எதற்­காக தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் கூட்­ட­றிக்­கையில் வலியுறுத்­தப்­ப­ட­வில்லை? என்ற கேள்­வி­யுடன் தொடர்­பு­ப­டுத்திப் பார்க்­கப்­படும் போது, இரா.சம்­பந்­தனின் இந்தக் கருத்தை சாதா­ர­ண­மா­ன­தொன்­றாகப் புறக்­க­ணிக்க முடி­ய­வில்லை.

 

இந்தச் சூழலில், இந்­தியா இப்­போது இலங்­கை­யிலும் இலங்­கை­யி­டமும் எதனை எதிர்­பார்க்­கி­றது? என்றக் கேள்­விக்­கான விடை தேடல் ஒரு வேளை சுஸ்மா சுவ­ராஜின் பய­ணத்தின் மௌனத்­துக்­கான கார­ணத்தை புலப்­ப­டுத்தக் கூடும்.

சுஸ்மா சுவராஜ், இலங்­கைக்கு மேற்­கொண்ட பய­ணத்தின் முக்­கிய நோக்கம் இரு­த­ரப்பு உற­வு­களை இன்­னொரு தளத்துக்கு கொண்டு செல்­வ­தாகும்.

சீனா­வுடன் மீண்டும் உற­வு­களை வலுப்­ப­டுத்த எத்­த­னிக்கும் கொழும்பை தன்­பக்கம் இழுத்து வைத்துக் கொள்­வது தான் புது­டில்­லியின் இப்­போ­தைய முதற்­தெ­ரி­வாக இருக்­கி­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரைவில் சீனா­வுக்குச் செல்­ல­வுள்ளார். அதை­விட அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ர­மவும் சீனா செல்­ல­வுள்ளார்.

இதற்குப் பின்னர், கொழும்புத் துறை­முக நகரத் திட்டம் உள்­ளிட்ட சீனாவின் திட்­டங்கள் அனைத்தும் மீளத் தொடங்கப்பட­வுள்­ளன.

அதை­விட சீனாவின் புதிய முத­லீ­டுகள், திட்­டங்கள் குறித்தும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

சீனாவின் உத­வி­களைப் புறக்­க­ணித்துச் செயற்­பட முடி­யாது என்­பதை இலங்கை அர­சாங்கம் உணர்ந்து கொண்­டுள்ள நிலையில் தான், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்த பயணம் இடம்­பெ­ற­வுள்­ளது.

அதை­விட, அண்­மையில் இலங்­கையின் சுதந்­திர தினத்­துக்கு சீன ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் வாழ்த்­துக்­களைக் கூறி­யி­ருந்­தனர்.

அதிலும் இரு­த­ரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வதில் விருப்பம் வெளி­யிட்­டி­ருந்­தனர்..

இவ்­வா­றாக, சீனா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான பொரு­ளா­தார உற­வு­களும் ஏனைய உற­வு­களும் மீண்டும் வலுப்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புகள் உரு­வாகி வரு­கின்ற சூழலில் தான், சுஸ்மா சுவ­ராஜின் பயணம் இடம்­பெற்­றி­ருந்­தது.

சுஸ்மா சுவ­ராஜின் இந்தப் பய­ணத்தின் போது, முக்­கி­ய­மான இலங்கை இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவின் 9ஆவது கூட்டத்தில் அவர் பங்­கேற்­றி­ருந்தார். அதில் இரு­த­ரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்தும் 27 விட­யங்கள் குறித்து ஆராயப்பட்டன.

பாது­காப்பு ஒத்­து­ழைப்புத் தொடக்கம், முத­லீடு, வர்த்­தகம், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, விஞ்­ஞான தொழில்­நுட்பம், கல்வி, கலா­சாரம், உத­விகள் என்று பரந்­து­பட்ட ரீதியில் இந்தக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டன.

கூட்­டத்தின் முடிவின் இரண்டு உடன்­ப­டிக்­கைகள் செய்து கொள்­ளப்­பட்­டன. அதில் ஒன்று, வடக்கில் 27 பாட­சா­லை­களை புன­ர­மைப்­ப­தற்­கான உத­வியை வழங்­கு­வது. இரண்­டா­வது, மட்­டக்­க­ளப்பில் போதனா வைத்­தி­ய­சா­லையின் சத்திரசிகிச்சைக் கூடத்­துக்குத் தேவை­யான கரு­வி­களை வழங்­கு­வது.

இவை­யி­ரண்டும் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­காக அவர்­களின் நலன்­க­ளுக்­காக வழங்­கப்­பட்ட உத­விகள் போலவே தெரியும். தமிழ் மக்­களின் நலன்­களின் மீது இந்­தியா அக்­கறை கொண்­டி­ருக்­கி­றது என்­பது போலவே, இந்த உத­விகள் வெளிக்­காட்­டி­யி­ருந்­தன.

ஆனால், இந்த கூட்­டத்தில் இரண்டு நாடு­களின் நலன்­க­ளையும் உறு­திப்­ப­டுத்­து­வது குறித்தே பிர­தா­ன­மாக ஆராயப்பட்டது. முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன.

மிகக்­க­வ­ன­மாக, இந்­தி­யாவின் உத­வி­களைப் பெற்றுக் கொள்­வதில் இலங்­கையும், இலங்கை மீதான பிடியை விட்டு விடக்­கூ­டாது என்­ப­தற்­காக இந்­தி­யாவும் இந்த விட­யத்தில் இணைந்­தி­ருந்­தன.

திரு­கோ­ண­ம­லையில், பொரு­ளா­தார முத­லீட்டு வலயம், காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்தி, பலாலி விமான நிலைய அபி­வி­ருத்தி என்று வடக்கு கிழக்கின் கேந்­திர முக்­கி­யத்­து­வ­மிக்க இடங்­களைச் சுற்றி இந்­தி­யாவின் நலன்­களை உறு­திப்­ப­டுத்தும் முடி­வுகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவை அனைத்தும் இரு­நா­டு­க­ளி­னதும் வர்த்­தக, பொரு­ளா­தார, பாது­காப்பு நலன்­க­ளையும் வாய்ப்­பு­க­ளையும் மையப்­படுத்­தி­ய­தா­கவே இருந்­தன.

இப்­ப­டி­யா­ன­தொரு நிலையில், இரு­த­ரப்பு உற­வு­க­ளுக்குள் சிக்­க­லான விவ­கா­ரங்­களை செருகிக் கொள்­வ­தற்கு இந்­தியா விரும்­ப­வில்லை போலவே தெரி­கி­றது.

தமிழ்­நாட்டில் மே மாதம் வரப்­போகும் தேர்­தலை முன்­னி­றுத்தி பா.ஜ.க. அர­சாங்கம் காய்­களை நகர்த்தும் வாய்ப்புகளுக்கும் அப்பால், இலங்­கையை கைக்குள் வைத்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­பு­க­ளுக்கே புது­டில்லி முன்­னு­ரிமை கொடுத்­தி­ருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது.

இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், தமிழர் பிரச்­சினை விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் குரலின் வீரியம் தொடர்ச்­சி­யா­கவே குறைந்து வந்து கொண்­டி­ருப்­பதை அனை­வ­ராலும் அவ­தா­னித்­தி­ருக்க முடியும்.

முன்னர், மஹந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் அடிக்­கடி தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதை­யா­வது வலி­யு­றுத்தி வந்த புது­டில்­லி­யிடம் இருந்து இப்­போது அப்­ப­டி­யான கருத்­துகள் வெளி­யா­வதே அரி­தாக உள்­ளது.

சுஸ்மா சுவ­ராஜின் பய­ணத்தின் பின்னர் வெளி­யி­டப்­பட்ட கூட்டறிக்கையில் கூட, இந்த விவகாரம் மிக நாசூக்காக தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றே புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.

அதாவது இலங்கை அரசாங்கத்துக்கு சங்கடம் ஏற்படுத்திக் கொள்ளாமல் தனது நலன்களை அடைய முனைகிறது இந்தியா.

“முன்னாள் ஆட்சியாளர்களைப் போலல்லாது, இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான தனது பொருளாதார உறவை தமிழர் பிரச்சினை என்ற குறுகிய அலைக்கற்றையின் வழியாக நோக்கவில்லை” என்று அண்மைய கட்டுரை ஒன்றில், கேணல் ஹரிகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது இந்தியாவுக்குப் பிரதானமாகத் தேவைப்படுவது தமிழர் பிரச்சினைக்கான தீர்வல்ல.

இலங்கையுடனான நிலையான உறவும், இலங்கை மூலம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களையும் வர்த்தக, பொருளாதார நலன்களையும் உறுதிப்படுத்திக் கொள்வது தான்.

அந்த இலக்கை சுஸ்மா சுவராஜின் பயணம் எட்டியிருப்பதாகவே தெரிகிறது.

அதனால் தான், இதற்கு முன்னர் இந்தியா முன்னுரிமை கொடுத்த, தமிழர் பிரச்சினை சார்ந்த விடயங்கள் இப்போது மறைநிலைக்கு வந்திருக்கின்றன.

Share.
Leave A Reply