தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது.
அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப். – சுரேஷ் அணி) தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவர்கள்.
இந்தப் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் சேர்த்துக் கொள்ளப்படக் கூடியவர்தான்.
ஆனால் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஏக நிலையிலிருந்து, தமிழரசுக் கட்சி என்கிற ஏக நிலையை நோக்கி நகர்ந்து செல்வதை விரும்புகின்றார்.
அதன்மூலம், தமிழ் அரசியல் பரப்பில் பங்காளிகள் அற்ற பிரதான கட்சி ஃ தரப்பு என்கிற நிலையை தமிழரசுக் கட்சி அடைய வேண்டும் என்று கருதுகின்றார்.
அப்படியான தருணமொன்றில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தினை அவர் அடைய நினைக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தனின் விரும்பமும் அதுவாகத்தான் இருக்கின்றது.
அதன்போக்கிலான அரசியல் நடவடிக்கைகளை மாவை சேனாதிராஜாவை முன்னிறுத்தி இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடியும்.
தமிழரசுக் கட்சி தன்னை மென்வலு சக்தியாக வெளிப்படுத்திக் கொள்வதில் தொடர்ச்சியான அக்கறை கொண்டு வந்துள்ளது.
ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்த தரப்பினர் என்கிற அடையாளம் தம்மீது கவிழ்வதை அந்தக் கட்சி பெரும்பாலும் விரும்பவில்லை.
வன்முறை ரீதியிலான போராட்டங்களில் ஈடுபாடற்ற புத்திஜீவிகள்- இராஜதந்திரிகள் அடையாளத்தினை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்புகின்றது.
முன்னாள் போராளிகளோ, கடும்போக்கு கொள்கையாளர்களோ தங்களை கேள்வி கேட்பதையோ, தம்முள் அழுத்தம் செலுத்துவதையோ விரும்பவில்லை.
இதுவே, விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலும் கூட அந்தக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. (அப்போது, தமிழர் விடுதலைக் கூட்டணி என்கிற பெயரோடு இருந்தாலும், தமிழரசுக் கட்சியே அங்கும் பிரதான தரப்பாக இருந்தது.)
அப்படியான சந்தர்ப்பமொன்றிலேயே, தேர்தல் வெற்றிகளுக்காக விடுதலைப் புலிகளின் தலைமையை வேண்டா வெறுப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அரசியல் ஒருங்கிணைவின் மூலம் ஏற்றுக் கொண்ட தமிழரசுக் கட்சி, தற்போது அந்த அடையாளத்திலிருந்து வெளிவர முயல்கின்றது.
அரச தொலைக்காட்சியொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் சில மாதத்துக்கு முன்னர் கலந்து கொண்டிருந்த இரா.சம்பந்தன், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை.
அப்படியான சம்பந்தம் இருப்பது ஏதும் தனக்கு தெரியாது.’ என்றார். இரா.சம்பந்தன் சாணக்கியம் மிக்க தலைவர் என்கிற உணர்நிலையொன்று அல்லது முன்வைப்பொன்று ஊடக உரையாடல் பரப்பில் இருக்கின்றது.
அதனை, குறிப்பிட்டளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியது சம்பந்தமில்லாதது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அடையாளத்தின் மீது விடுதலைப் புலிகளின் அபிமான நிழல் இன்னமும் படிந்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்த சிலர் இப்போது வெளிச் சென்று விட்டார்கள். இன்னும் சிலர் உள்வந்திருக்கின்றார்கள்.
வெளி சென்றவர்களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், உள்வந்தவர்களில் புளோட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் முக்கியமானவர்கள்.
இப்படியான சந்தர்ப்பமொன்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப். மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் சி.சிவமோகன், தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டமை முக்கியத்துவம் பெறுகின்றது.
அரசியல் கட்சிகளில் இணைவதும் விலகுவதும் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகின்றது. கொள்கை – கோட்பாட்டின் அடிப்படைகளைத் தாண்டி, பதவிகளும் அதிகாரங்களை நோக்கி நகர்வும் கூட வாக்கு- தேர்தல் அரசியலில் கட்சி தாவல்களில் அதிக பங்காற்றுகின்றது.
வைத்தியர் சி.சிவமோகன், வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி ஊடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
அதன்பின்னர், அந்தக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும் இருந்தவர். அத்தோடு, கடந்த பொதுத் தேர்தலிலும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர் பங்கீட்டின் கீழ் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் முன்னிறுத்தப்பட்டு வெற்றிபெற்றவர்.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிக்கு வழங்கப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் இடத்துக்கு அந்தக் கட்சி சுரேஷ் பிரேமச்சந்திரனையும், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனையும் முன்மொழிந்தது.
ஆனால், அப்போது அதில் தலையிட்ட தமிழரசுக் கட்சித் தலைவரான மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சி உறுப்பினரான அனந்தி சசிதரன் மீது கட்சி ஒழுங்காற்று நடவடிக்கையை முன்னெடுத்திருக்கின்றது.
அப்படியான சந்தர்ப்பத்தில், மாற்றுக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்., கூட்டணி தர்மங்களை மீறி வேட்பாளர் அந்தஸ்தினை வழங்குவது முரண்பாடானது.
அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்த வல்லது என்று வாதிட்டார். அதன்பின்னர், அனந்தி சசிதரனுக்குப் பதிலாக, வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக முன்னர் பதவி வகித்த ந.அனந்தராஜ் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கடந்த தேர்தலில் தோற்றுப் போனதற்கான காரணங்களில் அனந்தி சசிதரனுக்கான வேட்பாளர் நியமனம் மறுப்பும் ஒன்று என்று அந்தக் கட்சி கருதுகின்றது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் பரந்துபட்ட ரீதியில் வாக்குப் பெற்றவர்களில் அனந்தி சசிதரன் முக்கியமானவர்.
அவருக்கு போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால், அதன் மூலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வாக்குகள் கிடைத்திருக்கும் என்பது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய காரணம் தான்.
தேர்தலின் பின்னரான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எப்படியாவது ஒரு உறுப்பினர் பதவியைப் பெற்று அதனூடு மீண்டும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்கிற முனைப்பினை சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கொண்டார்.
அதற்கு இன்னொரு கூட்டணிக் கட்சியான புளோட்டும் ஆதரவு தெரிவித்திருந்தது. எனினும், ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த டொலோ, தமிழரசுக் கட்சியின் சில தலையீடுகளை அடுத்து அதிலிருந்து பின்வாங்கியது. அதனால், சுரேஷ் பிரேமச்சந்திரனின் தேசியப்பட்டியல் எண்ணமும் வீணாகியது.
இதன்மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் ஏக நிலைப்பாட்டுக்கு இடைக்கிடை முட்டுக்கட்டை போடும் அல்லது அடங்க மறுக்கும் கூட்டணித் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனை அகற்ற முடிந்தது.
அதனை, இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும், எம்.ஏ.சுமந்திரனும் குறிப்பிட்டளவான விமர்சனங்ளை மீறி செய்திருந்தனர்.
அதனூடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஏக நிலையிலிருந்து தமிழரசுக் கட்சி என்கிற ஏக நிலையை நோக்கி நகர்வதற்கான பெரும் தடைகளில் ஒன்றைக் கடந்தார்கள் என்று கொள்ள முடியும்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக ஊடாடலில் தமிழரசுக் கட்சித் தலைவர்களை குறிப்பிட்டளவு விமர்சித்து வந்திருக்கின்றார்.
அந்த விமர்சனங்களில் குறிப்பிட்டளவானவை எம்.ஏ.சுமந்திரனை நோக்கியதாகவும் இருந்தது. தொடர்ச்சியாக ஒரு தனி நபருக்கு எதிரான விமர்சனத்தை முன்வைக்கச் செய்து அதிலிருந்து அவரை இலகுவாக அகற்றம் செய்ய வேண்டும். மக்களிடம் அவரின் மீதான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது.
இன்றைக்கு பதவிகள் அற்ற நிலையில், அவரின் கட்சிக்கான அங்கீகாரத்தினையும் அகற்றும் வேலைத்திட்டங்களில் தமிழரசுக் கட்சி செயலாற்றுகின்றது.
கூட்டணி தர்மங்களைக் காட்டி அனந்தி சசிதரனுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என்று அன்று எதிர்த்த மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சி.சிவமோகனுக்கு தமிழரசுக் கட்சியில் இணைவதற்கான பத்திரத்தை வழங்குகின்றார்.
இது, முரண்பாடுகளின் மீதான மோசமான அரசியல் நகர்வு. புளோட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூட இந்த நகர்வினை விமர்சித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் தமிழ்த் தரப்புக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சி, இன்றைக்கு தன்னுடைய ஏக நிலைக்கான நகர்வில் மும்முரமாக இருக்கின்றது.
இது, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழ்த் தேசிய அரசியல் இன்னும் விரைவான மாற்றங்களை வரும் காலங்களில் காணும். அது, நல்லதா- கெட்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-புருஜோத்மன் தங்கமயில்-