தனது காலத்தில் ஒரளவு திருப்திகரமான அரசியல் தீர்வொன்றை காண முடியும் என்பதில் சம்பந்தன் உண்மையிலேயே நம்பிக் கொண்டிருந்தார்.
தனது அதீத நம்பிக்கையின் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் போது கூட எந்தவொரு உடன்பாடுமின்றி ஆட்சி மாற்றத்தை ஆதரித்து நின்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 2016 இல் தீர்வு நிச்சயம் என்று வழமைபோல் மேசைகளில் அடித்து, ஒலிவாங்கி அதிரும் வகையில் கூறிக் கொண்டிருந்தார்.
ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வேறு எவரும் அவ்வாறு கூறியிருக்கவில்லை.
சம்பந்தனது நடடிவக்கைகளுக்கு பக்கபலமாக இருந்துவரும் சுமந்திரன் கூட அவ்வாறு எங்குமே கூறியிருக்கவில்லை. ஆனால் சம்பந்தன் மைத்திரிபால சிறிசேனவின் மீது கொண்டிருந்த அளவு கடந்த நம்பிக்கையின் விளைவாகவே அவ்வாறானதொரு வாக்குறுதியை ஆணித்தரமாக வெளிப்படுத்தியிருந்தார்.
சிங்கள பெரும்பாண்மை வாதத்தால் இறுகிப் போயுள்ள தெற்கின் மேலாதிக்க மனோபாவத்தை ஒரு மைத்திரிபால சிறிசேனவினால் மாற்றிவிட முடியுமென்று சம்பந்தன் அப்பாவித் தனமாக நம்பியிருந்தாரா அல்லது உண்மையாகவே தன்னுடைய காலத்தில் எதையாவது தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டும் என்னும் உண்மையான ஈடுபாட்டின் விளைவாக கூறியிருந்தாரா?
இந்தப் பத்தி சம்பந்தன் உண்மையிலேயே தன்னுடைய காலத்தில் எதையாவது தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று நினைப்பதாகவே கருதுகிறது. ஆனால் தெற்கின் நிலைமை சம்பந்தன் நம்புவது போன்று அவ்வளவு எளிதாக இல்லை.
நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றுவதற்கான முன்மொழி இந்த மாதத்தின் அரம்பத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் அதற்கான ஆதரவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெற முடியவில்லை.
இந்த நிலையில்தான் அது பிற்போடப்பட்டது. அது ஏன் பிற்போடப்பட்டது? ரணில் மூன்று விடயங்களின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றுவதற்கான முன்மொழிவை சபையில் சமர்ப்பித்திருந்தார்.
ஒன்று, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது, இரண்டு, தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது, மூன்று, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, தேசியப் பிரச்சினை என்பதன் மூலம் அதனை இனப்பிரச்சினை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் முதலாவது விவாதத்தின் போதே, மகிந்த ஆதரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மைத்திரி ஆதரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்சி நிரலுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்சி நிரலிலிருந்து தேசியப் பிரச்சினை தொடர்பான விடத்தை நீக்குமாறு அவர்கள் வாதிட்டனர். அந்த விடயம் இருக்குமாயின் தங்களால் இதற்கு ஆதரவு வழங்க முடியாதென்று வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்தே, குறித்த அரசியல் நிர்ணய சபை விவகாரம் பிற்போடப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது குறித்த விடயம் நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
தற்போது வெளிவரும் தகவல்களின்படி, அதிருப்தியாளர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த தேசியப் பிரச்சினை விவகாரம் நிகழ்சி நிரலிலிருந்து நீக்கப்படவுள்ளது.
மேலும் சில சீர்திருத்தங்களும் குறித்த முனமொழிவில் இடம்பெறலாம் என்று கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம், குறித்த தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்னும் விடயத்தின் கீழ்தான் புதிய அசியல் யாப்பு விவகாரமும் உள்ளடங்கியிருக்கிறது.
அதாவது புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதன் ஊடாக, நாட்டில் புரையோடிப் போயுள்ள இன முரணண்பாட்டிற்கு தீர்வை காணுதல்.
நாடாளுமன்றத்தில் தேசியப் பிரச்சினை தொடர்பில் விவாதிப்பதற்கே மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற முடியாதவொரு சூழலில் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் எங்கனம் பெரும்பாலானவர்களது ஆதரவை பெற முடியும்?
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவில்லாமல் சம்பந்தன் எதிர்பார்க்கும் தீர்வு எவ்வாறு சாத்தியமாகும்?
ஆட்சி மாற்றத்திற்கு சம்பந்தன் எந்தவொரு நிபந்தனையுமில்லாமல் ஆதரவு வழங்கியிருந்தார். ஒரு வேளை சம்பந்தனின் இடத்தில் அமிர்தலிங்கமோ அல்லது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் வேறு எந்தவொரு கட்சியின் தலைவரோ இருந்திருந்தால், நிச்சயம் அவ்வாறனதொரு முடிவை எடுத்திருக்க மாட்டார்கள்.
இதில் சம்பந்தன் சுமந்திரன் போன்றோர் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் சொற்படி இயங்கினர் என்று கூறுவதை ஒரு சரியான பார்வையாக இப்பத்தி கருதவில்லை.
அவ்வாறு அழுத்த வேண்டிய தேவையும் குறித்த நாடுகளுக்கு இல்லை. ஒரு கௌரவமான உரையாடலுக்குரிய அரசாங்கம் தேவை என்பதே சம்பந்தனின் முதலாவது தெரிவாக இருந்தது.
அவ்வாறானதொரு சூழலில் சில விடயங்களை சாதிக்கலாம் என்னும் நம்பிக்கை அவரிடம் இருந்திருக்கலாம். ஆனால் சம்பந்தன் போன்ற ஒரு தாராளவாத மிதவாதியைக் கூட தெற்கின் சிங்கள அரசியல் வாதிகள் ஏற்றுக் கொள்ளத் தயராக இல்லை என்பதையே தற்போதைய சூழல் கோடிகாட்டுகின்றது.
உண்மையில் இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் சேர்ந்து சம்பந்தனை பாதுகாத்திருக்க வேண்டும், சம்பந்தனின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக சம்பந்தனையும் ஏமாற்றும் வகையிலேயே அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
இவ்வாறானதொரு சூழலில் சம்பந்தன் முன்னாலுள்ள தெரிவுகள் என்ன? இந்த அரசாங்கமும் தேவை அதே வேளை தன்னுடைய காலத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்னும் முனைப்பும் இருக்கிறது. இரண்டையும் எவ்வாறு சமநிலைப்படுத்திக் கொண்டு பயணிப்பது?
ராஜபக்ச இருக்கின்ற போது சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இறங்கி வந்து செவிசாய்க்கும் நிலையில் அரசாங்கம் இருந்திருக்கவில்லை.
இப்போது இறங்கி வந்த செவிசாய்ப்பதற்கு ஆட்கள் இருக்கின்றனர் ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது.
ஏனெனில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த அணி, மைத்திரி அணி என்று பிரிந்து கிடக்கின்றது. ஒரு அணி ஆதரிப்பதை மற்றைய அணி எதிர்க்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இதனையும் மீறி சில விடயங்களை திணிக்க முற்பட்டால் அதனால் எங்கு ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்னும் பதட்டம் ஒரு புறம்.
ஆட்சியும் கவிழக் கூடாது அதே வேளை ஆட்சியையும் பலப்படுத்த வேண்டும் என்னும் ஒரு உபாயம் குறித்தே ரணில் வேலை செய்வதாக தெரிகிறது.
இந்த நிலைமையில் மேலும் நெருக்கடிகள் தோன்றினால் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்னும் விடயத்துடன் தமிழர் விவகாரம் மட்டுப்பட்டு விடலாம்.
அதில் கூட வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தனியலகு என்னும் அடிப்படையில் அது அமைந்திருக்கப் போவதில்லை. இதை முன்னரே அறிந்து கொண்டதால்தான் சம்பந்தன் அமைதி காக்கின்றாரா?
ஏனெனில் புதிய அரசியல் யாப்பு எனின், அதற்கு பொதுசன வாக்கெடுப்பு அவசியம். நான் முன்னைய பத்திகளில் குறிப்பிட்டவாறு, அரசாங்கம் அதில் வெற்றிபெற வேண்டும். தோல்வியடைந்தால், அத்துடன் ஆட்சி மாற்றம் முடிவுக்கு வரும்.
அவ்வாறானதொரு நிலைமையை இலங்கையின் மீது மிகுந்த கரிசனை கொண்டிருக்கும் அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பாது.
எனவே தற்போதைய சூழலில் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயம் என்றால் அது தமிழர் விவகாரம் ஒன்றுதான்.
எனவே நிலைமையை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், தமிழர்கள் அமைதியாக இருக்க வேண்டும். இதுதான் இறுதியில் தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ள போதனையாக இருக்கப் போகிறது.
வேண்டுமானால் இந்த போதனைகளுக்கு சிரம் தாழ்த்திக் கொண்டே, மறு புறமாக தமிழ் மக்கள் முன்னால் வீர வசனங்களை அடுக்கிக் கொண்டிருக்கலாம்.
தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசியல் வாதிகளை கோடம்பாக்க சினிமா நடிகர்கள் போல் கருதும் ஒரு பெரும் பிரிவனர் உண்டு.
அவ்வாறான வீர வனங்களை அவர்கள் நிஜயம் என்று நம்புவதற்கு ஒரு போதுமே பின்நின்றதில்லை. அப்படியான அப்பாவி மக்கள் இருக்கும் வரை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிதாக மீசை வைத்துக் கொண்டு தாங்களும் பிரபாகரன்தான் என்று தாரளமாக சொல்லிக் கொள்ளலாம்.
சம்பந்தன் ஒரு அரசியல் தீர்வை பெறாது போனாலும் அவரை ஒரளவிற்கு மேல் விமர்சிக்க முடியுமென்று இப்பத்தி கருதவில்லை.
சம்பந்தன் ஒரு தோல்விச் சூழலை கையாள வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும் ஒரு தலைவர். எனவே அவரால் ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியாது.
சம்பந்தனால் முடியாது ஆனால் எங்களால் முடியுமென்று சொல்லி, தங்களின் சொல்லை செயலில் நிரூபிக்கக் கூடிய வேறு எவரும் வடக்கு கிழக்கில் இல்லை.
ஆனால் இப்பத்தி சம்பந்தன் மீது முன்னர் முன்வைத்த அதே விமாசனத்தைத்தான் தற்போதும், முன்வைக்கின்றது. அதாவது, இன்றைய நிலைமை பற்றி தமிழ் மக்களுக்கு கற்பனையின்றி சம்பந்தன் எடுத்துரைக்க வேண்டும்.
இதன் பொருட்டு ஆற்றலும் அனுபவமுள்ள கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். சித்தார்த்தன் சுமந்திரன் போன்றவர்கள் கூட்டாக இந்த விடயங்களை முன்னெடுக்க முடியும்.
இலங்கையின் அரசியல் சூழலில் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இந்த நிலைமையை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பதற்கு முதலில் வடக்கு கிழக்கை மையப்படுத்தியிருக்கும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு உரையாடல் அவசியம்.
சம்பந்தனோடு பேசுவதற்கு எவருமே பிற்நிற்க மாட்டார்கள் ஆனால் சம்பந்தன்தான் தன்னுடைய பெறுமதியை உணராதவாக இருக்கிறார்.
சம்பந்தன் ஒரு அழைப்பு விட்டால் நிச்சயம் அனைவரும் அதற்கு மதிப்பளிப்பர். இன்றைய சூழலில் தொடர்பில் ஒரு தெளிவான உரையாடல் அவசியம்.
இதுதான் நிலைமை என்றால் அதற்குள் பயணிப்பதை தவிர வேறு தெரிவுகள் இருக்கப் போவதில்லை.