விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை, கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் கிளைமோர்கள், வெடிபொருட்கள் பரவலான கவனிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட, ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவரை வழக்கமாகவே இருந்து வந்துள்ளது, ஆனால், சாவகச்சேரி சம்பவம் அவற்றிலிருந்து வேறுபட்டதாகப் பார்க்கப்படுகிறது.
சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து செவ்வாய்க்கிழமை ஒரு தற்கொலைக் குண்டு அங்கி, மூன்று கிளைமோர்கள், 12 கிலோ சி-4 வெடிமருந்து, 9 மி.மீ துப்பாக்கி ரவைகள் 100, கிளைமோர்களை வெடிக்க வைப்பதற்கான பற்றரிகள்-2மற்றும் சில தொலைபேசி சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டன.
குறித்த வீட்டில் வசித்து வந்த, எட்வேர்ட் ஜூலியன் (32 வயது) என்பவரின் மனைவியே, தனது கணவருடன் முரண்பட்டுக் கொண்டு, அவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குத் தகவல் கொடுத்திருந்தார்.
மன்னாரில் இருந்து சிறிய ட்ரக் வாகனத்தில், வரும், எட்வேர்ட் ஜூலியனை, கஞ்சாவுடன் கையும் களவுமாக பிடிப்பதற்குக் காத்திருந்த பொலிஸார், அவர் வராததையடுத்து, வீட்டுக்குள் நுழைந்து தேடுதல் நடத்திய போது தான், அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு அவர்கள் எதிர்பாராத வெடிபொருட்கள் சிக்கியிருந்தன. அதனை சந்தேகநபரின் மனைவியும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாகவே மயங்கி வீழ்ந்தார்.
இதையடுத்து. உசார்ப்படுத்தப்பட்ட பொலிஸார், அடுத்த 12 மணிநேரத்துக்குள்ளாகவே, வன்னேரிக்குளத்தில் அமைக்கப்பட்ட திடீர் சோதனைச்சாவடியில் வைத்து, எட்வேர்ட் ஜூலியனைக் கைது செய்தனர்.
முருங்கனைச் சேர்ந்த அவர், 13 வயதில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து, நீண்டகாலம் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். இறுதிப்போர் காலத்தில் வவுனியாவில் இருந்து பின்னர், யாழ்ப்பாணத்திலுள்ள சுழிபுரத்துக்கு குடிபெயர்ந்திருந்தார்.
அங்கிருந்து மீசாலைப் பகுதிக்குச் சென்று வசித்த அவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே, மறவன்புலவு வீட்டில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது.
அவருடன் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் சாரதியாகப் பணியாற்றிய சிவதர்சன் என்பரே, அந்த வீட்டில் அவரைக் குடியமர்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிவதர்சனைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அவரது சகோதரர் ஒருவர், போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை இராணுவத்தில் இணைந்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இதனால், அவரை நோக்கியும் விசாரணைகள் திரும்பும் என்று கூறப்படுகிறது.
அதேவேளை ஆயுதக்கட்டளைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒருவருக்கும், எட்வேர்ட் ஜூலியனுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், இது அரசியலில் பெரும் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது.
கடந்த புதன்கிழமை காலை இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் கசியத் தொடங்கியதும், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆபத்தில் இருப்பது போல, மஹிந்த அணியினர் புலம்பத் தொடங்கி விட்டனர்.
புலிகள் மீண்டெழுகிறார்களா? என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பிய நாமல் ராஜபக்ஷ, நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைந்ததற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் பதிவிட்டார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இந்தக் குண்டு வெள்ளவத்தைக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டதா?, என்று கேள்வி எழுப்பியதுடன், அதுபற்றிய உண்மைகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றார்.
விமல் வீரவன்ஸவோ, பாதுகாப்பு நிலை மோசமடைந்து விட்டதாகவும், பாதுகாப்புச் செயலாளர் சரியாகச் செயற்படவில்லை என்றும் விசனம் வெளியிட்டார்.
வழக்கத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்று புலம்பும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ, இந்த விடயத்தில் சற்று பொறுப்புடன் கருத்தை வெளிப்படுத்தியிருப்பது மற்றொரு ஆச்சரியம்.
இதுபற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், புனர்வாழ்வு அளிக்கப்படாத விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.
ஆனால் என்னவோ தெரியவில்லை. வழக்கமாக இத்தகைய சம்பவங்கள் வாய்த்தால் அரசாங்கத்தை விளாசித்தள்ளும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, இந்தப் பத்தியை எழுதும் வரை, சாவகச்சேரி விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை.
அரசாங்கத்தின் தற்போதைய பாதுகாப்புக் கொள்கையை, முன்னைய ஆட்சியாளர்களும், அதன் ஆதரவாளர்களும் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், இந்தச் சம்பவத்தை அவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை ஒன்றும் ஆச்சரியத்துடன் பார்க்க முடியவில்லை.
அதேவேளை சாவகச்சேரி வெடிபொருள் விவகாரத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெற்றியாராச்சி, இதனால் ஒன்றும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடவில்லை என்றும், தனித்ததொரு சம்பவமே என்றும், கூறியிருக்கிறார்.
எனினும், புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களால் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வரும் பெருந்தொகையான ஆயுதங்களின் வரிசையில், ஒன்றாக, சாவகச்சேரி சம்பவம் பார்க்கப்படவி்ல்லை.
ஏனென்றால், புலிகளால் கைவிட்டுச் செல்லப்பட்ட ஒரு இடத்தில் இவை இருக்கவில்லை. வேறொரு இடத்தில் இருந்தே கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
கிளைமோர்கள், மிகப்பழைமையான காகிதத்தினால் சுற்றப்பட்டிருந்தாலும், தற்கொலை அங்கி 2008 ஜனவரி 29ஆம் திகதிய சிங்கள நாளிதழினால் சுற்றப்பட்டிருந்தது. அது போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் வெளியான நாளிதழின் பிரதி.
அந்தக் காலகட்டத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சி்ங்கள நாளிதழ்கள் சென்றிருக்க வாய்ப்பில்லை. எனவே, புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பகுதியில் இருந்தே அவை கொண்டு வரப்பட்டிருக்கலாம்.
அதைவிட, வெடிபொருட்கள் சுற்றப்பட்டிருந்த பொலித்தீன் பைகள், திருகோணமலை மற்றும் கொழும்பு வர்த்தக நிலையங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்த வெடிபொருட்கள் எந்த நோக்கத்துக்காக சாவகச்சேரிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது பற்றி, தீவிரவாத விசாரணைப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதியை இலக்கு வைக்கவே இந்தக் குண்டுகள் கொண்டு வரப்பட்டதாக ஊகங்கள் வெளியான நிலையில், அதுபற்றிப் பதிலளிக்க பாதுகாப்புச் செயலர் மறுத்திருக்கிறார்.
ஆனால், ஜனாதிபதியின் யாழ்ப்பாண பயணத்தின் போது அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கப்படவிருந்ததாக முன்னர் வெளியான தகவல்களை அடுத்து, அவரது அண்மைய இரண்டு பயணங்களின் போது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தநிலையில், சாவகச்சேரி வெடிபொருள் விவகாரத்தையடுத்து, ஜனாதிபதிக்கான பாதுகாப்பு மேலும் இறுக்கமடையலாம்.
இந்தச் சம்பவங்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி, மீண்டும் புலிகள் மீண்டெழுவதாக பிரசாரம் செய்யும் முயற்சிகளில் முன்னைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த 2014ஆம் ஆண்டு, புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முயன்றவர்கள் என்று குற்றம்சாட்டி, மூன்று பேர் நெடுங்கேணிக் காட்டுக்குள் வைத்து, படையினரால் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
மீண்டும் அதேபொன்றதொரு சூழலை பரபரப்பாக்கவே முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
விடுதலைப் புலிகள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை நடத்தும் சூழல் எதுவும் இல்லாத நிலையில், ஆயுதங்களை மௌனிப்பதாக, புலிகளின் தலைமை, 2009 மே 16ஆம் திகதி அறிவித்த பின்னர், தலைமைக்குக் கட்டுப்பட்ட உறுப்பினர்கள் எவரும் அந்த உத்தரவை மீறத் துணியமாட்டார்கள் என்ற அடிப்படையில், பார்க்கும் போது, இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் புலிகள் இயக்கத்தின் உண்மையான உறுப்பினர்கள் இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம்.
அதேவேளை, புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்த பலரை போரின் முடிவுக்கு முன்னரும், பின்னரும், அரச புலனாய்வுப் பிரிவுகள் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்திருப்பதும் பல சம்பவங்களி்ல் வெளிச்சமாகியிருக்கிறது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை போன்ற சம்பவங்களில், அரச படைகளில் இருந்தவர்களால் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர், புலிகளின் நீண்டகால உறுப்பினராக இருந்த போதும், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை. எவ்வாறு அவர் படையினரின் கண்களில் இருந்து தப்பித்தார் என்ற கேள்வியும் உள்ளது.
முன்னைய அரசாங்கத்துடன், இணைந்திருந்த கருணா, பிள்ளையான் போன்ற முன்னாள் புலிகள் தான் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாமல் தப்பித்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
இப்போதைய நிலையில், நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் சூழலைக் குழப்பும் முயற்சிகளில் பல்வேறு தரப்புகள் ஈடுபட்டுள்ளன.
முன்னைய ஆட்சியாளர்களான அரசியல்வாதிகள் மட்டுமன்றி, அவர்களுக்கு ஆதரவான அரசாங்க அதிகாரிகள், இராணுவத்தினர் கூட, இந்த முயற்சிகளைக் குழப்ப எத்தனிக்கிறார்கள்.
எனவே, இந்த விவகாரத்தில், அரசாங்கத்துக்குள் அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்குள் இருப்பவர்கள் கூட இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் இருந்திருக்கலாம்.
எவ்வாறாயினும் விசாரணைகளின் முடிவில் தான், இதன் சூத்திரதாரிகள் யார் என்பது தெரியவரும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்தச் சம்பவங்களை ஊதிப் பெருப்பிக்க விரும்பவில்லை. அது நல்லிணக்க முயற்சிகளை குழப்ப முனையும் சக்திகளுக்கு சாதகமாகி விடும் என்று அஞ்சுகிறது.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக இராணுவத்தினரின் கையில் விசாரணைகளை ஒப்படைக்கவும் அரசாங்கம் தயாராக இல்லை.
பொலிஸ் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதற்கு, இந்த விவகாரம் திசை திருப்பப்பட்டு விடக் கூடாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்தச் சம்பவம், வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவமய நீக்க நடவடிக்கைகளைப் பாதிக்கலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்ட போதிலும், அவ்வாறு ஏற்படாது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறியிருக்கிறார்.
எனினும், வடக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாம்களை விலக்கியதால், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது, தேசிய பாதகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று புலம்பித் திரிந்த மஹிந்த ஆதரவு அணியினருக்கு, இந்தச் சம்பவம் இன்னும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இதனையும் மீறி, வடக்கில் இராணுவமய நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்துக்கு சிக்கலாகவே இருக்கலாம்.
அந்தவகையில் பார்க்கும் போது, அரசாங்கத்தை இக்கட்டில் மாட்டுவதோ- இராணுவ மயநீக்கத்தை தடுப்பதோ கூட இத்தகைய சம்பவங்களின் பின்னணியாக இருக்கக் கூடும்.
-சுபத்திரா-