இலங்கை மிக விரைவில் தனது மூன்றாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றவிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பு நீண்டகாலம் அமுலில் இருக்கவில்லை.
அவ்வரசியலமைப்பை திருத்தி மீண்டும் 1978ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த இரண்டாவது அரசியலமைப்பு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேல் அமுலில் இருந்தது.
இன்றும் அவ்வரசியலமைப்பே அமுலில் இருக்கிறது. ஆயினும் அவ்வரசியல் அமைப்பிற்கு கிட்டத்தட்ட 19 திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போதும் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாமல் போய்விட்டது.
தற்போது யுத்தத்தால் பிரச்சினையை தீர்க்கலாம் என்ற எண்ணம் மழுங்கிப் போய்விட்டது.
அதற்குப் பதிலாக இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் வலுவடையத்தொடங்கியதால் பெரும்பான்மை, சிறுபான்மை மற்றும் இன மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து யுத்தத்தால் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று கருதியவர்களின் ஆட்சியை மாற்றி சமாதானமான வழியில் இப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற ஏகோபித்த முடிவில் தமது வாக்குரிமையை பாவித்து புதியதொரு அரசை நிறுவியுள்ளனர்.
இப்புதிய அரசு நிறுவப்படுவதற்கு எந்தவொரு தனி இனமோ மதமோ அல்லது மற்றும் இலச்சணங்களை கொண்டவைகளோ தனியாக உரிமைகொண்டாட முடியாது.
இலங்கையர் சகலருக்கும் அவ்வுரிமையுரியது. இதனாலேயே இன்று இலங்கையில் சர்வகட்சி விசேடமாக அரசாங்க கட்சி, எதிர்க்கட்சி என்று கட்சிகள் பிளவுபட்டு நின்று நாட்டை ஆட்சிபுரியாமல் கூட்டாக ஆட்சிபுரிகின்றன. உலக நாடுகளும் இதனை போற்றுகின்றன.
இவ்விரு வருட காலத்திலும் மக்கள் உணர்ந்த உண்மைகளில் ஒன்று சகலரும் இணைந்து நாம் இலங்கையர் என்ற எண்ணத்தில் வாழ்வோமானால் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்பதேயாகும்.
இதற்கு மாறான கருத்துக்களை கொண்டவர்கள் இன்று இல்லாமல் இல்லை. அவர்கள் தமது சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் அத்தவறான கருத்தை வளர்த்து வர முயற்சிக்கின்றனர்.
ஆனால் அம்முயற்சி பலிக்காமல் இருக்க வேண்டுமானால் புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு முடிவுகட்ட முயற்சிக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது.
இன்று அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முயற்சிப்பது இனப்பிரச்சினையை தீர்க்க என்ன செய்யவேண்டும் என்பதற்குரிய அடிப்படை கருத்தை மக்களிடம் இருந்துபெற்று அதன்படி தீர்க்க வேண்டும் என்றாகும். அதனை அரசியலமைப்பு மாற்றத்தின் மூலமே செய்யலாமே தவிர வேறு வழியில் செய்யமுடியாது என்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.
தற்போதைய அரசியலமைப்பு இதற்கு இடம் கொடுக்குமா?
இன்றைய அரசியல் அமைப்பு மேற்படி எண்ணக்கருவை செயல்படுத்த இடம்கொடுக்குமா? என்பதை பார்க்க முதலில் இன்றைய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறது என அறிந்து கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பை திருத்துதல் பற்றி அத்தியாயம் XII இன் கீழ் உள்ள உறுப்புரைகள் பின்வருமாறு கூறுகின்றன.”
82 (1) அரசியலமைப்பின் ஏற்பாட்டை திருத்துவதற்கான சட்ட மூலம் (bill) எதுவும் அவ்வாறு நீக்கப்படுவதற்கான திருத்தப்படுவதற்கான அல்லது சேர்க்கப்படுவதற்கான ஏற்பாடும் விளைவாந்தன்மையினவான திருத்தங்களும் (Consequential Amendments) அச்சட்ட மூலத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு அந்த சட்டமூலமானது அரசியலமைப்பைத் திருத்துவதற்கான ஒரு சட்டம் என அதன் விரிவுப் பெயரில் (Long Title) விபரிக்கப்பட்டும் இருந்தால் ஒழிய பாராளுமன்ற நிகழ்ச்சிதாளில் (Order paper of parliament) இடம்பெறல் ஆகாது.
82 (3) சபாநாயகரின் அபிப்பிராயப்படி ஒரு சட்டமூலம் மேற்படி உறுப்புரை (1) பந்தியின் தேவைப்பாடுகளுக்கு இணங்க அமையும் வண்ணம் திருத்தப்பட்டாலொழிய அச்சட்ட மூலம் தொடர்பில் எச் செயலும் செய்ய வேண்டாம் எனப்பணித்தல் வேண்டும்.
82 (5) அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டைத் திருத்துவதற்கான அல்லது அரசியலமைப்பை நீக்குவதற்கும் மாற்றீடு செய்வதற்குமான ஒரு சட்டமூலம் அதற்குச் சாதகமாக அளிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை (பாராளுமன்ற) உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் (சமுகமளிக்காதோர் உட்பட) மூன்றில் இரண்டுக்கு குறையாததாக இருப்பதுடன் 80ஆம் 79ஆம் பிரிவுகளின் கீழ் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க ஜனாதிபதியின் அல்லது சபாநாயகரின் சான்றுரை (Endorsed) அதன் மீது எழுதப்பட்டும் இருந்தால் சட்டமாக வருதல் வேண்டும்.
82 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு முரணாக எது எவ்விதம் இருப்பினும் (சில சட்டமூலங்கள் மக்கள் தீர்ப்பினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்) அவை எவையென்றால். (அ)
1. இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயக சோசலிசக்குடியரசாகும் என்பதோடு இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசு என அறியப்படுதலும் வேண்டும்.
2 இலங்கை குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும்.
3. இலங்கை குடியரசில் இறைமை மக்களுக்குரியதாகவும் பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும். இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும்.
4. இலங்கை குடியரசின் தேசியக் கொடி (அரசியலமைப்பின் இரண்டாம் அட்டவணையில் குறித்து வைக்கப்பட்டிருக்கும்) சிங்கக் கொடியாக இருத்தல் வேண்டும்.
5. இலங்கை குடியரசின் தேசிய கீதம் சிறி லங்கா தாயே என்பதாக இருத்தல் வேண்டும்.
6. இலங்கை குடியரசின் தேசிய தினம் பெப்ரவரி நான்காம் நாளாக இருத்தல் வேண்டும்.
7. இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு அதற்கிணங்க 10ஆம் 14(1) (2)ஆம் உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாய் இருத்தல் வேண்டும்.
8. ஆள் ஒவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராய் இருத்தற்கான அல்லது மேற்கொள்ளுவதற்கான சுதந்திரமுட்பட சிந்தனை செய்யும் சுதந்திரம் மனச்சாட்சியை பின்பற்றும் சுதந்திரம் மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதலும் வேண்டும்.
9. ஆள் எவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்துதல் ஆகாது.
ஆ. விடயத்திற்கேற்ப ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அல்லது பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்கு திருத்துவதற்கான அல்லது நீக்குவதற்கான அல்லது மாற்றீடு செய்வதற்கான சட்டமூலமானது அதற்கு ஆதரவாக அளிக்கப்படும் 2/3 பங்கு பாராளுமன்ற அங்கத்தவர்களால் நிறைவேற்றப்பட்டும் மக்கள் தீர்ப்பினால் அங்கீகரிக்கப்பட்டும் ஜனாதிபதியினால் சான்றுரை எழுதப்பட்டால் மட்டுமே சட்டமாக வருதல் வேண்டும்.
அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டைத் திருத்துவதற்கான அல்லது அரசியலமைப்பை நீக்குவதற்கும் மாற்றீடு செய்வதற்குமான ஒருசட்டமூலமாக இல்லாமல் அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டுடன் ஒவ்வாததாக விடுக்கின்ற ஒரு சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரலாம்.
இதன்பொருள் என்னவெனில் அரசியலமைப்பை நீக்குதல், மாற்றீடு செய்தல், அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டை திருத்துதல் இல்லாமல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருமங்களை நிறைவேற்றத் தேவையான சட்டமூலம் ஒன்றை அமைச்சரவை விசேட பெரும்பான்மையினால் 2/3 நிறைவேற்றப்படவேண்டும் என தீர்மானித்து உயர்நீதிமன்றமும் தீர்மானிக்கும் இடத்து அதனை சட்ட மாக்கலாம் என்பதேயாகும். தேவையானால் தான் ஆக்கிய அச்சட்டத்தை அரசு பின்னர் நீக்கலாம்.
மேலே கூறிய 82, 83 ஆம் உறுப்புரைகளின்படி அரசியலமைப்பில் மாற்றம் செய்வதானால் 2/3 பங்கு பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஆதரவும் மக்கள் தீர்ப்பும் அவசியம் என்பது பெறப்படுகிறது.
அது தவிர, அரசியலமைப்புடன் தொடர்பு இல்லாத வேறு விசேட தேவைகளுக்காக விசேட சட்டங்கள் இயற்ற வேண்டுமானால் 2/3 பங்கு பாராளுமன்ற அங்கத்தவர்களது ஆதரவு அவசியம் என்ற விதியும் எமது அரசியலமைப்பில் உள்ளது.
ஒரு பாராளுமன்றம் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளலாமா? என்ற வினா அரசியல் சாஸ்திரத்தில் எழுகிறது. அதற்கு விடை இல்லை என்பதாகும்.
நடைமுறையில் உள்ள பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றி பின்வரும் பாராளுமன்றங்கள் அச்சட்டத்திற்கு உட்பட்டே ஆட்சிபுரிய வேண்டும் என்று கேட்கமுடியாது. அதேபோல் முன்னைய பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் அவை இயங்க தேவையில்லை. ஆயினும் எந்த பாராளுமன்றமும் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக சட்டங்களை இயற்ற முடியாது.
மேற்படி பண்புகளே 82,83, 84 ஆம் பிரிவுகளில் காணப்படுகிறது. 2/3 பங்கு பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஆதரவும் மக்கள் ஆதரவும் இருக்குமாயின் அரசியலமைப்பு விதிகளை மட்டுமல்ல அரசியலமைப்பையே மாற்றமுடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் அமைப்பில் காணப்பட்ட சில முன்னேற்றமான அம்சங்கள்
I. அரசியலமைப்பு பேரவை
பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டிய அரசியலமைப்பு பேரவை இருத்தல் வேண்டும்.
1. இரண்டு உப ஜனாதிபதிகள்
2. பிரதம அமைச்சர்
3. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
4. பாராளுமன்ற அவைத் தலைவர்
5. அரசியலமைப்புசார் அமைச்சர்
6. முதலமைச்சர்கள் கூட்டவையின் தவிசாளர்
7. உயர் நீதிமன்றத்தின் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற இரு நீதிபதிகள். இவர்கள் பிரதம நீதியரசரின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவர்.
அரசியலமைப்பு பேரவையின் தவிசாளர் பதவி இரண்டு உப ஜனாதிபதிகளினாலும் உப ஜனாதிபதி ஒவ்வொருவரும் தவிசாளராக ஒரு தடவையில் ஆறு மாதங்களைக் கொண்டதொரு காலப் பகுதிக்கு பதவி வகிக்க வேண்டிய வகையில் சுழற்சி முறையில் வகிக்கப்படுதல் வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இரண்டு உப ஜனாதிபதிகள் ஏன் என்ற கருத்து இரண்டு உப ஜனாதிபதி என்ற கருத்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலமான ஜே.ஆர். காலத்திலும் எழுந்தது. சிறுபான்மையினருக்கும் ஆட்சித் துறையில் பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அது எழுந்தது.
இது சம்பந்தமாக அரசியல் ரீதியாக ஆலோசிக்கப்பட்டது. காலஞ்சென்ற நீதியமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகமும் காலஞ்சென்ற வெளிநாட்டு அமைச்சரான ஏ.சி.எஸ். ஹமீட் டும் இப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று பலர் விரும்பினர். ஆனால் பின்னர் இப்பதவிகள் சிருஷ்டிக்கப்படவில்லை.
இக்கருத்து சந்திரிகா பண்டாரநாயக்க காலத்திலும் இருந்தது என்பது அவரது அரசியலமைப்பு திட்டத்தில் அப்பதவிகள் குறிக்கப்பட்டது எனலாம். உண்மையில் இரு சிறுபான்மை இனத்தவருக்கும் ஆட்சித் துறையில் பங்களிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அது கைவிடப்பட்டது.
II. பிராந்திய சபைகளை ஸ்தாபித்தல்
இலங்கை பின்வரும் பிராந்தியங்களாக பிரிக்கப்படல் வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
தலைநகரமான கொழும்பு ஆள்புலம் மேற்குப் பிராந்தியத்தின் பாகமாக அமையும்.
இப்பிராந்திய சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அப்பிராந்தியங்களுக்கு தத்துவங்களை மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் என கூறப்பட்டது.
மேற்படி ஸ்ரீல. சுந்திரக் கட்சியின் அரசியல் அமைப்பு சீர்திருத்தம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்பட்டிருப்பின் இனப்பிரச்சினைக்கு அது ஒரு விடிவெள்ளியாக இருந்திருக்கும்.
புதிதாக நிறைவேற்றப்படவிருக்கும் அரசியலமைப்பில் இலங்கை மாநிலங்களாக, பிராந்தியங்களாக, மாகாணங்களாக பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் என்பதற்கு முன்னோடியாக வட மாகாண சபை தனது ஆலோசனையை முன்வைத்துள்ளது.
அது தொடர்பாக எதிர்ப்புக்கள் கட்டாயம் எழும். ஆயினும் இவற்றைப் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தற்போதைய அரசும் எதிர்க்கட்சிகளும் முயற்சி எடுத்து வருவது பாராட்டத்தக்கது.
அரசுக்கு 2/3 பங்கு பாராளுமன்ற ஆதரவு கிடைக்கும். மக்கள் தீர்ப்பும் சாதகமாக கிடைக்கும் என்பது உண்மையென்றாலும் எதிராளிகளையும் அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி சகலரும் ஏகோபித்த வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது. இதற்கான அடித்தளம் 2016 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இடப்பட்டது.
பாராளுமன்றமானது அரசியல் நிர்ணய சபையாகவும் மாற ஏகமனதாக உடன்பட்டதே அதுவாகும். இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆற்றிய உரை முக்கியமானது. அவ்வுரையில் அவர் கூறியதாவது :
“பாராளுமன்றத்தால் ஆலோசிக்கப்படவிருக்கும் அரசியல் அமைப்பு சம்பந்தமான வரைவை ஆக்குவதற்கு சகல பாராளுமன்ற அங்கத்தவர்களும் ஏகமனதாக ஒருமித்து அரசியல் நிர்ணய சபையாக தமது கடமையில் ஈடுபட முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது.
மக்களின் விருப்பை நிறைவேற்ற சகல மக்களினதும் பிரதிநிதிகளினதும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என நான் நினைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
எல்லோரும் இவ்வுரையை வரவேற்றனர். ஆகவே ஆரம்பம் சுமுகமாய் இருந்ததால் முடிவும் சுமுகமாக இருக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
இலங்கை ஒரு ஜனநாயக குடியரசு நாடாகும். ஆகவே, சகலரும் தமது கருத்தை முன்வைக்க உரிமையுடையவர்கள். அவர்கள் தமது கருத்துக்குமாறாக கருத்தை வைக்கிறார்கள் என்று காழ்ப்புணர்ச்சியில் தவிர்ப்பதோ குறைகூறுவதோ கூடாது.
எல்லோரும் ஒத்துழைத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க முனைய வேண்டும். இன்றைய சூழல் தவறின் மீண்டும் ஒரு யுகம் ஏற்படும் என நினைத்து பார்க்கவும் முடியாது.
ஆகவே பொறுமையுடன் மக்களும் அரசியல் கட்சிகளும் பொதுநலன் விரும்பிகளும் தமது கருத்தை தெரிவிக்க வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றால் அது மணக்காது என்று கூறக் கூடாது.
இன்று என்ன செய்ய வேண்டும்?
இன்று இலங்கையில் நிலவுகின்ற நல்லாட்சியும் சக வாழ்வும் தொடர்ந்தும் நிலவ வேண்டுமானால் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் ஆகியோர் தங்கள் முழு மனதுடன் இந்நாடு எமது நாடு என்ற எண்ணத்தை கொள்ள வேண்டும்.
சகல இன மக்களும் தங்களது பிரதேசத் தலைவர்களுடன் இணைந்து தமது பகுதிக்கு தலைமைத்துவம் வழங்க இடம் கொடுக்க வேண்டும். அரசியல் அமைப்பில் இக் கருத்து உள்வாங்கப்பட வேண்டும். இதன் மூலம் சமஷ்டி முறை ஒன்று உருவாகும் என சிலர் கருதுவதுண்டு. இது தவறாகும்.
இலங்கையில் இனங்களுக்கு இடையே ஒரு பிழையான கருத்து நிலவுகிறது. நாங்கள் அல்லது எங்களது இனம் ஒரு காலத்தில் அழிந்து போக நேரிடும் என்பதுவே அது ஆகும். இதன் காரணமாகவே பெரும்பான்மை மக்கள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மறுக்கிறார்கள்.
இதனை அரசு பிழையென காட்ட வேண்டும். தற்போதைய அரசு ஓரளவு இதனை செய்து வருகின்றது. அதற்கு அமைய அரசியலிலும் செய்யப்பட வேண்டும்.
மாகாண சபைகளை அமைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை இலங்கை இந்தியாவுடன் இணைந்து எடுத்தபோது இனப்பிரச்சினைக்கு அது முடிவு கட்டும் என நினைத்தது.
ஆயின் அப்பிரச்சினையுள்ள வடக்கு, கிழக்கு மட்டுமல்ல நாட்டின் எல்லாப் பகுதிக்கும் மாகாண சபையை அமைக்க அரசு நடவடிக்கையை எடுத்தது.
ஏனெனில் வட, கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் அரசியல் நிலையை கருத்தில் கொண்டே அத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டது எனலாம்.
இதனால் மருந்து கட்ட வேண்டிய இடம் ஒன்று இருக்க உடல் முழுவதும் மருந்தை கட்டுவது போல் அரசு மாகாண சபை இலங்கை முழுவதற்கும் கொண்டு வந்தது. இவ்விடயத்திலேயே பிழை நடந்தது.
இனப்பிரச்சினை வடக்கு, கிழக்கில் இருக்க அதனை தீர்க்க இலங்கை முழுவதற்கும் மாகாண சபையை கொண்டு வந்தது. இதனால் இனப்பிரச்சினையின் தன்மையை உணராமல் அரசு செயல்பட்டது எனலாம்.
ஆகவே புதிய அரசியலமைப்பில் இப்பிரச்சினையை தனியான பகுதிக்கான விசேட பிரச்சினையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். வட கிழக்கு தனியான பிரச்சினையை கொண்ட பகுதி என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
காணி மற்றும் பொலிஸ் உட்பட பல அதிகாரங்கள் வட கிழக்கு பகுதிகளுக்கு அமையப் போகிற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். மற்றைய பகுதிகளுக்கு வழங்குகின்ற அதிகாரத்திற்கு சமமாகவே வட, கிழக்குக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கருதக் கூடாது.
யுத்தம் முடிந்து பல வருடங்களாகியும் இன்னும் வட கிழக்கில் சில இடங்களில் சட்டத்தின் மகிமையையும் சமாதானத்தின் பலனையும் மக்கள் அனுபவிக்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதை அப்பகுதியை நேரில் பார்ப்பவர்கள் அறிவர். இதற்கு தேவை என்னவென்றால் சட்டமும் ஒழுங்கும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதாகும். ஆகவே இதனையும் அரசு ஆலோசனைக்கு எடுக்க வேண்டும்.
தொகுப்புரை
இலங்கைக்கு மீண்டும் ஒரு அரசியலமைப்பு அவசியம் என்பதை சகலரும் ஏற்றுக் கொள்கின்றனர். அவசரத்திலும் அரசியல் கட்சிகளின் கொள்கையிலும் திளைத்திருக்கும் கட்சிகள் தம் இஷ்டம்போல் அரசியலமைப்பை ஆக்கியதே அவை பிழைபடுவதற்கு காரணமாயிருந்தது.
1972ஆம் ஆண்டு முக்கூட்டு அரசாங்கம் தனது சமத்துவ கொள்கையின் அடிப்படையில் சில நல்ல உறுப்புரைகள் அடங்கிய அரசியல் அமைப்பை உருவாக்கிய போதும் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முறையில் அரசியல் அமைப்பை உருவாக்கவில்லை. இதனால் சில குறுகிய காலமே அவ் அரசியலமைப்பு உயிர் வாழ்ந்தது.
1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு மக்கள் மத்தியில் இருந்து அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆலோசனைகளையும் கருத்தையும் பெறாமல் புத்திஜீவிகள் என அழைக்கப்பட்ட அரசியல்வாதிகளையும் சட்டத் தரணிகளையும் உள்ளடக்கிய குழு தயாரித்த அரசியல் அமைப்பையே அறிமுகப்படுத்தியது.
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பை விட இது பல வழிகளிலும் முன்னேற்றம் உள்ளதாக இருந்தபோதும் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கவில்லை.
அத்துடன் சர்வாதிகார ஆட்சிக்கும் வழி வகுக்கக் கூடியதாயமைந்தது. சர்வாதிகார ஆட்சியிலேயே அவ் அரசியல் அமைப்பின் நன்மைகளை காணலாம் என்ற கருத்து ஒன்றும் உள்ளது. மக்களின் வாக்குரிமையையே புறக்கணித்து பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தையே அரசியல் அமைப்பு நீட்டியது.
அத்துடன் 19 திருத்தங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. மேலே கூறிய அரசியலமைப்புகளில் உள்ள குறைகள் மீண்டும் ஏற்பட இடம் கொடுக்கக் கூடாது.
இன்று அமையப் போகும் அரசியல் அமைப்பு அவ்வாறு அமையாமல் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என மக்களது அபிப்பிராயத்தை அறிந்தும் சகல துறையினரின் அபிப்பிராயத்தை கேட்டும் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியும் வழிகாட்டல் குழுக்களையும் அமைத்து ஓர் அரசியல் அமைப்பு வரைபை உண்டாக்க போவதால் முன்னைய அரசியல் அமைப்புக்களை விட முன்னேற்றமுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயின் அரசியல் களத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் அரசில் இணையாமல் வெளியிலிருப்பதாலும் அரசில் அனுபவமில்லாதவர்களே முன்னணியில் இருப்பதாலும் இனப்பிரச்சினைக்கு தேவையான அரசியல் அமைப்பொன்றை உருவாக்க முடியுமா என்பதே எல்லோர் மனசிலும் எழும் கேள்வியாகும்.
பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.