சிவஞானம் சிறிதரனின் வலதுகரமாக இருந்த பொன் காந்தன் ரெலோ அமைப்பில் இணைந்தது ஏன்?? சிறிதரனைவிட்டு விலகும் சகாக்கள்!!
பலருடைய கண்களுக்குள்ளும் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கண்களுக்குள் இப்போது பலரும் விரல் விட்டு ஆட்டுகிறார்கள்.
இதைக் காலத்தின் விளையாட்டு என்பதா? அல்லது விதியின் கோலம் என்று சொல்வதா? அல்லது இதைத் “தன்வினை தன்னைச் சுடும்“ எனலாமா? அல்லது அவர் விதைத்ததை அவரே அறுக்கும் காலம் கைகூடி வந்திருக்கிறது என்று கூறலாமா?
சிறிதரனுடன் நெருங்கியிருந்த சகாக்கள் அவரை விட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
சிலர் அவருக்குச் சவாலாக மாறியிருக்கிறார்கள். ஒதுங்கியிருப்பவர்களால் உடனடியாகப் பிரச்சினைகள் இல்லை. சவாலாக மாறியிருப்பவர்களால்தான் பிரச்சினையும் தலையிடியும்.
இதில் முக்கியமானவர் பொன் காந்தன். சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளராக இருந்தவர் பொன் காந்தன். சிறிதரனுடைய தேர்தல் வெற்றிகளில் பெரிய பங்காளி. மாவீரர் குடும்பத்தவர்.
தமிழ்த்தேசியத்தின் மீது கொள்கைப் பற்றுறுதியுடையவர். வன்னியின் முக்கியமான கவிஞர். நீண்டகாலமாக ஊடகத்துறையில் செயற்பட்ட அனுபவமுள்ளவர். நல்ல மேடைப்பேச்சாளர்.
கிளிநொச்சியில் குறிப்பிடத்தக்க இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றவர். 2009 க்கு முன்னர், சிறிதரனை விடவும் பொன் காந்தனே மிகப் பிரபலமாக இருந்தவர். சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளராக இருந்தபோது சிறைசென்றவர்.
இப்பொழுது பொன் காந்தனுக்கும் சிறிரனுக்குமிடையில் பெரும் பகை மூண்டிருக்கிறது. இந்தப் பகை நீண்டகாலமாகவே உள்ளே கொதித்துக் கொண்டிருந்து, இப்பொழுதுதான் பகிரங்க நிலைக்கு வந்திருக்கிறது.
அதனால், பகிரங்கமாகவே தன்னுடைய முன்னாள் அபிமானியைப் போட்டுத்தாக்கிக் கொண்டிருக்கிறார் பொன் காந்தன். இணையத்தளங்களிலும் பொன் காந்தனின் முகப்புத்தகத்திலும் இந்தத் தாக்குதலைக் காணலாம்.
பதிலாகப் பொன் காந்தனைப் பற்றியும் சிறிதரனுடைய இணையத்தளங்களில் எதிர்த்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சிறிதரனின் சகோதரர்களால் நடத்தப்படும் லங்காசிறி குழுமத்தின் இணையத்தளங்களான ஜே.வி.பி நியுஸ், தமிழ்வின் உள்ளிட்ட தளங்களில் பொன் காந்தன் விமர்சிக்கப்படுகிறார்.
ஆனால், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே பொன் காந்தன் எடுத்துக் கொண்டாகத் தெரியவில்லை. லங்காசிறி குழுமம் இப்படிப் பல சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு வேண்டாதவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எழுதி வருவதால், அவற்றின் மதிப்பு எவ்வளவு என்று பொன் காந்தனுக்குத் தெரியும்.
ஆகவே இதைப்பற்றித்தான் கவலைப்படவில்லை என்று தன்னுடைய தளத்தில் எழுதியிருக்கிறார்.
இந்த இடத்தில் பொன் காந்தன் இந்த நாட்களில் எழுதியிருக்கும் ஒரு கவிதையை இங்கே மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
இப்போது நான் யூதாஸ்களுக்கு யூதாஸ்
இயேசுவுக்கு அல்ல
நான் இயேசு காலத்தில்
வாழ்ந்து முடித்துவிட்டேன்!
இங்கே யூதாஸ் என்று பொன் காந்தன் விளித்திருப்பது சிறிதரனையே. தன்னுடைய கைது உள்பட பலருடைய கைதுகளுக்குக் காரணமாக இருந்தவர் சிறிதரன் என்று அடித்துக்கூறுகிறார் பொன் காந்தன். இதை முன்னர் வேறு சிலரும் உறுதிப்படுத்தியிருந்தனர்.
பகை வந்தால் பலதும் மாறி விடும். பிறகு எதைப்பற்றியும் எப்படியும் பேசலாம் என்று சொல்லப்படுவதுண்டு. அதைப்போல சிறிதரனின் மீதிருக்கும் கோபத்தின் காரணமாக காந்தன் இப்படியெல்லாம் பழியைச் சுமத்துகிறாரா என்றால், இல்லையில்லை. அப்படியில்லை.
இவற்றில் உண்மை உண்டு என்று வேறு பலர் அடித்துச் சொல்கிறார்கள்.
“சிறிதரன் தொடர்ச்சியாகவே பல குற்றங்களுக்கும் தவறுகளுக்கும் காரணமாக இருந்துகொண்டிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் அவர் கெட்டித்தனமாக மறைத்துக் கொண்டிருந்தார்.
அதற்கு வாய்ப்பாக அவருக்கு அவருடைய சகோதரர்களின் ஊடகங்கள் கைகொடுத்துக் கொண்டிருந்தன. என்னதானிருந்தாலும் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான் என்பதைப்போல இப்பொழுது எல்லாவற்றின் சாயங்களும் வெளுக்கத் தொடங்கிவிட்டன.
இப்போது உள் வீட்டுச் சங்கதிகளைத் தெரிந்தவர்களே பகிரங்க வெளியில் போர்க்குரலெடுத்து நிற்கிறார்கள்.
இதுவரையிலும் பலருடைய கண்களுக்குள் தன்னுடைய விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தவருக்கு தன்னுடைய கண்களுக்குள்ளே விரல் விடக்கூடியதொரு நிலை வந்தது அதிர்ச்சியே.
சிறிதரனுடைய கதைகளையே பொது நியாயமாகப் பேசி வந்த லங்காசிறி குழுமத்தின் ரகசியக் கட்டுகள் அறுந்து விட்டன.
சிறிதரனுடன் முரண்பட்ட பொன் காந்தன் இப்போது ரெலோ அமைப்பில் சேர்ந்திருக்கிறார்.
இதற்கான சந்திப்புகள் கிளிநொச்சியில் கடந்த வாரங்களில் கிளிநொச்சியில் நடந்திருக்கின்றன. இறுதியாகக் கடந்த 27.04.2016 இல் செல்வம் அடைக்கலநாதன் பொன் காந்தனைக் கிளிநொச்சி மாவட்டத்துக்கான தன்னுடைய இணைப்பாளராகக் கிளிநொச்சியில் வைத்து அறிவித்திருக்கிறார்.
சிறிதரன் சக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்த பங்காளியாக உள்ளார்.
அப்படியிருக்கும்போது அவருடன் இணைந்திருந்த ஒருவர் முரண்பட்டு வருகையில் அவரை எப்படி ஏற்றுக்கொள்வது? அப்படி ஏற்றுக்கொள்ளும்போது அதனால் சிறிதரனுக்கு உண்டாகக் கூடிய அதிருப்திகள் என்பவற்றைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமலே செல்வம் அடைக்கலநாதன் பொன் காந்தனை வரவேற்றிருக்கிறார்.
அதுவும் சிறிதரனின் கோட்டை என்று கருதப்படும் கிளிநொச்சியில் வைத்தே தன்னுடைய இணைப்பாளர் என்ற அறிவிப்பையும் செய்திருக்கிறார் என்பது சாதாரணமானதல்ல.
நிச்சயமாக இது சிறிதரனை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வகுக்கப்பட்டிருக்கும் ஒரு வியுகமே. ஏற்கனவே பலமான ஒரு போட்டியாளராக இருந்த சந்திரகுமாருடன் இந்தப் புதிய எதிராளிகளும் சிறிதரனுக்கு எதிர்த்திசையில் அணிவகுத்திருக்கின்றனர்.
இந்த விடயங்களால் கிளிநொச்சி நகரில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களில் பரபரப்பான – துக்கம் தோய்ந்த உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று தகவல்கள் சொல்கின்றன.
இதற்குக்காரணம், பொன் காந்தன் தான் மட்டும் தனியே விலகிச்செல்லாமல் ஒரு அணியோடுதான் செல்வம் அடைக்கலநாதனைச் சந்தித்திருக்கிறார்.
இது எதிர்காலத்தில் சிறிதரனுக்குப் பலத்த நெருக்கடியைக் கொடுக்கக் கூடியது. ஏனென்றால், பொன் காந்தனைப் பற்றிப் பல சந்தர்ப்பங்களிலும் பொது மேடைகளிலேயே சிறிதரன் சொல்லியிருக்கிறார்.
தன்னுடைய இரண்டு கரங்களில் ஒன்று என்றும் தன்னுடைய வலது கரம் காந்தனே என்றும் சொல்லியிருக்கிறார். இதைப்போல சிறிதரனின் மிக நெருங்கிய சகாவாக இருந்த இன்னொருவர் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளராக இருந்த குகராஜா.
சிறிதரனின் பக்கச் சார்பான நடவடிக்கைகளாலும் அதிகாரச் சட்டங்களாலும் மனம் நொந்து இப்போது ஒதுங்கியிருக்கிறார். இன்னும் பலர் அதிருப்தியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற மேதின நிகழ்வில் கலந்து கொள்ளாமலே சிறிதரன் வெளிநாட்டுக்குப் பயணமாகியிருக்கிறார். இதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.
கிளிநொச்சியில் உண்டாகியிருக்கும் நெருக்கடிகள் அவருக்கு அசௌகரியத்தைக் கொடுத்திருக்கின்றன என்பது ஒன்று.
மருதனார் மடத்தில் தமிழரசுக்கட்சி நடத்துகின்ற மேதினத்தில் கலந்து கொள்வதாக இருந்தால் எதற்காகக் கிளிநொச்சி மேதின நிகழ்வைப் புறக்கணித்தார் என்ற கேள்வி எழும் என்பது இன்னொன்று.
இவை இரண்டுக்கும் அப்பால், மே 02 திங்கட்கிழமை கிளிநொச்சியில் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் நடக்கவுள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி மற்றொன்று.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் வழங்கலைப்பற்றிப் பதில் சொல்ல வேண்டும். இரணைமடுத்தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கான ஒப்புதலைப் பற்றிப் பேச வேண்டும் என்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தந்திரோபாயமாக நாட்டை விட்டே அகன்றிருக்கிறார்.
ஆனால், இதெல்லாம் சிறிதரனுக்குப் பின்னடைவையே தரும் விசயங்களாக உள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குளைப் பெற்ற ஒருவர் இப்படிச் சடுதியாக நெருக்கடிகளைச் சந்திக்கவும் இறங்கமுகமான நிலைமைகளை எதிர்கொள்ளவும் வேண்டியிருந்தது ஏன்? என்ற கேள்வியே பலருடைய தலையிலும் உள்ளது.
சிறிதரன் அரசியலுக்குப் புதியவர். 2009 இல்தான் சிறிதரனின் அரசியல் வாழ்வு ஆரம்பம். அதற்கு முதல், 1990 இல் சில மாதங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தாலும் அந்த இயக்கத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பியிருந்தார். இதற்காகப் புலிகளிடம் தண்டனையைக்கூடப் பெற்றிருக்கிறார். பிறகு ஆசிரியப்பணியாற்றினார். புலிகள் தோற்கடிக்கப்பட்டபிறகே சிறிதரன் அரசியலில் கால் வைத்தார்.
புலிகள் செயற்பட்ட காலத்தில் (2004 இல்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலைப் புலிகளே தயாரித்திருந்தனர். அப்பொழுது வன்னியில் இருந்த பலருடைய பெயர்களையும் அந்தப்பட்டியலில் புலிகள் இணைத்திருந்தனர்.
சொலமன் சூ சிறில், கனகரத்தினம், சிவநேசன் போன்றோர் இந்தப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், சிறிதரன் என்றொரு பெயரை அப்பொழுது யாரும் சிந்தித்திருக்கவேயில்லை.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் யுத்தம் நடந்த காலத்தில் சிறிதரன் புலிகளின் பிரதேசத்தை விட்டு நீங்கி கொழும்பிலும் வவுனியாவிலுமாகத் தங்கியிருந்தார்.
யுத்தத்திற்குப்பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மூலமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்டு அறிமுகமாகினார்.
2010 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் முதற் தடவையாக தெரிவு செய்யபட்டிருந்தார். மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியடைந்திருந்தார்.
அப்படி வெற்றியடைந்த சிறிதரன் புலிகளின் தொடர்ச்சியாகத்தானே செயற்படுகிறேன் என்றமாதிரியான ஒரு தோற்றப்பாட்டைக் காண்பிக்கத் தொடங்கினார்.
இதற்கான உபாயங்களை வகுத்துக் கொண்டார். இதற்காக போரின்போது காயமடைந்த மாற்றுவலுவுடையோரையும் பெண்கள் அமைப்புகளையும் தன்னுடைய உதவித்திட்டங்களின் மூலமாகக் கவர்ந்தார்.
ஆனாலும் பாரபட்சமான நடவடிக்கைகளாலும் அதிகமாக உணர்ச்சிவசப்படும் நிலையினாலும் பலருடைய உறவையும் இழக்கத்தொடங்கினார்.
மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னுடைய கதைகளையே கேட்க வேண்டும் என்ற அதிகாரத் தொனி அவரிடமிருந்து பலரையும் விலக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.
பகிரங்கமாகவே ஆட்களைப் பேசுவது. தரக்குறைவாக நடத்துவது என இந்த மாதிரியான காரணங்களால் பலரும் மனம் நொந்து விலகியிருக்கிறார்கள்.
இதில் எதிர்த்துத் தலையெடுத்திருப்பது பொன் காந்தனே. இனி என்ன நடக்கும் என்பதை இனி வரும் நாட்கள்தான் சொல்ல வேண்டும். அந்த நாட்களைத்தான் சிறிதரனும் எதிர்பார்த்திருக்கிறார். மக்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
– கா. சிங்கராஜா