பொது எதிரணி என அழைக்கப்படும் மஹிந்த அணியின் மேதினக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனை லலித் அத்துலத் முதலி மைதானத்தில் நடைபெற்றது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினப் பேரணியானது இன்றைய தினம் கொழும்பு நாரஹேன்பிட்டி பார்க்வீதியில் அமைந்துள்ள சாலிக்கா மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பென்மன்ட் வீதியினூடாக கிருலப்பனை சந்தி ஐ லவல் வீதியினூடாக லலித் அத்துலத்முதலி மைதானத்தை வந்தடைந்தது.
”மக்கள் போராட்டத்திற்கு உயிர் கொடுக்கவும், மக்கள் விரோத ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக ஒன்றிணைவோம் ” என்ற தொனிப்பொருளில் இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டு எதிரணியின் இந்த மேதின பேரணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சி.பி. ரத்னாயக்க, பவித்திரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அழுத்கமே, ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க, நாமல் ராஜபக்ஷ உள்ளடங்களாக பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதனுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகம்மன்பில, தினேஸ் குணவர்தன, விமல் வீரவம்ச உள்ளிட்டோரும், முன்னாள் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியிலிருந்து வருகைதந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்திரளான மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படங்களை ஏந்தியவாறும்,
அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டனர்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக மகாஜன எக்சாத் பெரமுன, லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிச மக்கள் முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன.
அத்துடன் தொழிற்சங்க கூட்டு ஒன்றியம், இலங்கை தொழிலாளர் சம்மேளனம், ஸ்ரீ லங்கா வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கம், அரசசேவை மற்றும் தொழிற்சங்க கூட்டிணைந்த சங்கம், இலங்கை அளவை உதவியாளர் சங்கம், அகில இலங்கை அரச சாரதியினர் சங்கம், அரசாங்க பொது சேவை சங்கம், புகையிரத சேவை சங்கம், லங்கா தொழிலாளர் முன்னணி, பொது வைத்திய அதிகார சங்கம் ஆகியன பங்குபற்றியிருந்தன.
ஊர்வலத்தின் இறுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்.