ஆறு தசாப்த உரிமை போராட்டத்தால் அமைதியான வாழ்வொன்றை வாழ முடியாத நிலையில் வடமாகாண மக்கள் உள்ளனர்.
ஆயுதப் போராட்டம் 2009 மே 18இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் கூட நிம்மதியாக வாழமுடியாத நிலைமையே தற்போதும் நீடித்துக்கொண்டிருக்கின்றது.
யுத்தம் நிறைவடைந்ததாக அரசாங்கம் அறிவித்து தற்போது ஏழாண்டுகள் கடந்துள்ள போதும் தற்போதும் வடக்கு மக்கள் உளரீதியான அச்சத்துடன் அன்றாடப்பொழுதை நகர்த்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலிருந்து வெளியே வரமுடியாதவர்களாகவுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட இடம்பெற்ற இராணுவ ரோந்துகள், விசாரணைக்கான அழைப்புக்கள், விசேட தேடுதல்கள், புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் போன்றவற்றால் பொதுமக்கள் அச்சமான சூழலில் இருந்தனர். தற்போது அவை கணிசமாக குறைந்திருந்தாலும் முழுமையாக இல்லையெனக் கூறமுடியாது.
அதேநேரம் யுத்தகாலத்திலிருந்த நிலைமைகளிலிருந்து திடீரென ஏற்பட்ட மாற்றத்தால் வடக்கு இளைஞர்கள் குழுக்களுக்கிடையிலான வீதி மோதல்களும், ஏதோவொரு காரணத்திற்காக பழிவாங்கும் செயற்பாடுகளும் அவ்வப்போது அரங்கேறுவதற்கு ஆரம்பித்தன.
அதனைத்தொடர்ந்த காலப்பகுதிகளில் கிறிஸ் பூதம் என்ற விவகாரம் பூதாகரமாகியது. அதுகூட தேர்தலையொட்டிய காலப்பகுதிகளில் எழுந்திருந்தமையை ஆழ்ந்து பார்க்கையில் அவதானிக்க முடிந்தது.
அதன்பின்னரான காலப்பகுதியில் வடக்கில் இளம் சமுதாயத்தினரின் போதைப்பொருள் பாவனை, பாடசாலை மாணவி முதல் வயோதிப பெண்கள் வரையில் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் அதிகரித்தன. இதனால் தமிழ் சமூகத்தின் சாதாரண வாழ்க்கையை நகர்த்துவதில் பலத்த நெருக்கடிகள் ஏற்பட்டன.
பாடசாலைக்கும், தனியார் வகுப்புகளுக்கும் மாணவிகள் செல்கின்றமை, பெண்கள் வேலைத்தளங்கள் உட்பட தமது தேவைகளுக்காக வெளியில் நடமாடுகின்றமை போன்றவை உட்பட பெரும் அச்சமான நிலைமை ஏற்பட்டிருந்தது. அதேநேரம் சிறுவர்கள் மீதான பாலியல் ரீதியான செயற்பாடுகளும் வெகுவாக அதிகரித்திருந்தன.
இவ்வாறான நிலைமைகள் உடன் கட்டுப்படுத்தப்படவேண்டியது அவசியம் என்ற கருத்துக்கள் அரசியல்இ சமூகஇ சமய மட்டங்களிலிருந்து வலுத்தபோது யாழ்.மாவட்ட நீதிபதியாக எம்.இளைஞ்செழியன் நியமிக்கப்பட்டதோடு வடக்கிற்கான பொலிஸ் மற்றும் இராணுவ உயர்மட்டப் பதவிகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அக்குற்றங்கள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன எனக் கூறக்கூடியளவிற்கு நிலைமைகள் மாறியிருந்தன.
எனினும் அண்மைக்காலமாக யாழ்.மாவட்டத்தில் அரங்கேறிவரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்து பதற்றத்துடன் வாழுமொரு நிலைமையே காணப்படுகின்றது.
ஆம், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் தற்போது வரையில் கொள்ளை, வாள்வெட்டென தலா ஆறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதோடு பொது மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக அச்சுவேலி, கோப்பாய், நீர்வேலி, சங்கானை, வட்டுக்கோட்டை பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளும் வியாபார நிலையங்களும் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளன.
குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழிப்பறிகளும் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று உடுவில், யாழ்ப்பாணம், கோப்பாய் போன்ற பகுதிகளில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பட்டப்பகலில் பகிரங்கமாக இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை விடவும் வெள்ளிக்கிழமை யாழ். நகரிலுள்ள நான்கு வீடுகளுக்கு தொடராகச் சென்ற கொள்ளைக் கும்பல் வீடுகளுக்கு வெளியே இருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளன.
யாழ்ப்பாணம் மாம்பழச் சந்திக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் காலி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்துள்ளனர்.
அங்கு மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை கறுப்பு துணிகளால் மூடியவண்ணம் வந்த ஆறுபேர் கொண்ட குழுவினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்தை இரும்புக் கம்பிகள் மற்றும் வாள்கள் கொண்டு அடித்து நொறுக்கியுள்ளனர்.
மற்றொரு வீட்டுக்குச் சென்ற இக்குழுவினர் அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளை சேதப்படுத்தி வீட்டின் கதவின் மீதும் கண்ணாடிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல் ஏனைய இரு வீடுகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்ற போதும் தற்போது வரையில் அதனுடன் தொடர்புபட்ட எந்தவொரு நபர் கூட கைது செய்யப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து செல்கின்றன.
இந்நிலையில் அதிகரிக்கும் இந்த குற்றச்செயல்களின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் மாவட்ட நீதிபதி இளஞ்செழியனும் தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதோடு அடுத்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கூறுவதாயின், வீதிச்சண்டித்தனத்தில் ஈடுபடுவோர், 6 மணிக்கு பின்னர் வீதிகளில் கூடும் இளைஞர்கள் சிறைசெல்வதற்கு நேரிடும்.
போதைவஸ்து வழக்குகளில் யாழ்.மன்றில் ஒருவருடமாக பிணை வழங்கப்படவில்லை. பாரிய குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுகின்றது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
பாசையூர் சென். அந்தனிஸ் விளையாட்டரங்கு, புதிய செம்மணி வீதி, கல்வியங்காட்டுச் சந்தி, கோப்பாய் சந்தி, கொக்குவில் சந்தி, சுன்னாகம் சந்தி, யாழ்.இந்துக்கல்லூரி வளாகம், ஆகியவற்றில் சட்டவிரோத ஒன்றுகூடல்களும்,
ரவுடிகள் நடமாட்டமும் காணப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளதால் விசேட கண்காணிப்புக்களை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று ரவுடித்தனம், சமூக சீர்கேடு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஈவிரக்கம் காட்டப்படமாட்டாது என்பதோடு தனிமனிதனை விடவும் சமூக நலனே நீதிமன்றத்திற்கு முக்கியமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.குடாநாட்டுப் பகுதியில் இவ்வாறான இறுக்கமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நீதிபதி பொலிஸாரைப் பணித்துள்ளபோதும், இடம்பெறும் சம்பவங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றபோதும் அவ்வாறான சம்பவங்கள் திடீரென அதிகரித்திருக்கின்றமைக்கான பின்னணி தொடர்பில் சில வினாக்கள் மேலெழுவதை தவிர்க்கமுடியாதுள்ளது.
முதலாவதாக வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் மூன்று பொதுமகனுக்கு ஒரு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சிவில் சேவைக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். அவற்றுக்கு மேலதிகமாக, குற்றவியல், பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் நடமாடுகின்றனர்.
விசேட ரோந்து நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இவற்றுக்கெல்லாம் அப்பால் யாழ்.நகரத்திற்கு வெளியில் இடம்பெற்ற விடயங்களை விடுத்து பார்க்கையில் யாழ். நகரத்தினுள் எவ்வாறு துணிகரமான கொள்ளை மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இரண்டாவதாக வீடுகளில் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. சில இடங்களில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது. கொள்ளையிட்ட வீடுகளில் தம்மைப்பற்றி சாட்சியமளித்தால் விளைவுகள் வேறுவிதமாக அமையும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் பார்க்கையில் இங்கு தனியே கொள்ளையிடுவது மட்டும் நோக்கமல்ல. அதனையும் தாண்டி மக்களை உள ரீதியாக அச்சுறுத்தி வைத்திருக்க வேண்டுமென்ற பின்னணியில் காணப்படுகின்றமை புலனாகின்றது.
மூன்றாவதாக வெளிமாவட்டத்திலிருந்து வந்த மக்களிடத்தில் கொள்ளையோ பறிமுதல்களோ செய்யப்படவில்லை. மாறாக அவர்களையும் அச்சுறுத்திய நிலைமையே காணப்படுகின்றது.
இதன்மூலம் பெரும்பான்மை இனத்தவர்கள், வெளிமாவட்டத்தவர்கள் யாழ்.மண்ணில் காலடி பதிப்பதற்கு உகந்த சூழல் அல்ல என்பதை காட்டுவதற்கு விழைகின்றார்களா அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு முனைகின்றார்களா என்ற வினா எழுகின்றது.
நான்காவதாக ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டியவர்களாகவுள்ள பொலிஸார் வடமாகாணத்திலிருந்து அந்நியப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
இதனால் இவ்வாறான சம்பவங்களை முழுமையாக தடுக்க முடியவில்லையா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.
ஐந்தாவதாக ஏனைய பிரதேசங்களை விடவும் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான வடக்கில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதனால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள இராணுவப்பிரசன்னத்தை குறைக்கும் கோரிக்கைக்கு பதிலொன்றை வழங்க முடியுமென்ற அடிப்படையில் திரைமறைவு நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகின்றது.
ஆறாவதாக உளரீதியாக பல துன்பங்களை அனுபவித்த தற்போது அனுபவித்தாலும் அதனை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாதிருக்கும் மக்களை மேலும் அச்சத்தின் பால் நெருக்கடிக்குள்ளாக்குவதால் அபிலாஷைகள் தொடர்பான கோரிக்கைகளில் அதிக அக்கறை காட்டமாட்டார்கள் என்பதை பின்புலமாக வைத்து இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றனவா என்ற ஐயப்பாடும் உள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியவர்கள் தமது பணத்தேவைக்காக கொள்ளைகளில் ஈடுபடுகின்றார்களா என்ற வினாவும், சினிமா பாணியில் தம்மை சமூகத்தில் ஹிரோக்களாக காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் அடாவடித்தனங்களா என்ற வினாவும் எழாமலில்லை.
இத்தனை ஐயப்பாடான வினாக்கள் அடுக்கடுக்காக எழுகின்ற அதேநேரம் வடக்கில் பண்பாட்டு ரீதியாக வாழ்ந்து வரும் தமிழ் சமூகத்தின் மத்தியில் இத்தகைய நிலைமைகள் எழுகின்றமையானது அந்த இனத்தின் எதிர்காலத்தை மலினப்படுத்துவதற்கே வித்திடுவதாக அமையும் என்பது கண்கூடு.
உரிமை வேட்கை தற்போது வரையில் நிறைவேறாதிருக்கையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக எவ்வளவோ முன்னேற்றங்களை எட்டவேண்டியிருக்கின்ற இனமொன்று இவ்வாறு சீர்குலைந்த நிலைக்குள் சென்றுகொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஆகவே அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், சமயத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர், புத்திஜீவிகள், பெரியோர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தமக்கான சமூகப்பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு சமூக சீர்குலைவை உடன் தடுத்து நிறுத்துவதற்கான இலக்கில் ஒன்றிணைவது அவசரமான அவசியமாகின்றது.
( ஆர்.ராம் )