பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் விதியினை நாளை அல்லது மறுநாள் வரும் போது பார்க்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வருகின்ற விசாரணைகளின்படி நாமல் ராஜபக்ஷ பணம் மறைக்கப்பட்ட இடம் மற்றும் அவருடை அரண்மனை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியின் போது ஊழல், மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் மக்கள் முன்னிலையில் முழங்கால் இடச்செய்யவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மஹிந்தவின் பாதுகாப்பு இன்றுடன் நீக்கப்படுகிறது
02-05-2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு இன்றைய தினத்துடன் நீக்கப்பட உள்ளது.
மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 102 இராணுவ உத்தியோகத்தர்களும் அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு இராணுவத் தலைமையகத்திற்கு சமூகமளிக்குமாறு குறித்த இராணுவ உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பேரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மஹிந்தவின் பாதுகாப்பு இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு அமைச்சு எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை, மஹிந்தவின் ஊடகப் பிரிவே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வாய்கால் அமைக்க வழியில்லை எவ்வாறு பாலம் அமைப்பது? நாமல்
இந்த அரசாங்கத்தால் ஒரு வாய்காலை கூட அமைக்க முடியாத நிலையில் எவ்வாறு இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
வெளிநாட்டு கடன்களை கட்டுப்படுத்துவதாக கூறி வற் வரியை உயர்த்தியுள்ளது. மேலும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கப்போவதாக கூறுகின்றது.
சர்வதேசத்திடம் இருந்து 1085 பில்லியன் ரூபாவை கடனாக பெற்ற இந்த அரசாங்கத்தால் எவ்வித பாலமோ அல்லது வாய்க்காலோ அமைத்ததாக தெரியவில்லை.
மேலும் கிருலப்பனையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. அம்பாந்தோட்டையில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கின்றோம். அவர்களுக்கு நாம் உதவுவதை யாராலும் தடுக்க முடியாது.
இந்த அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைப் பற்றி கதைத்துகொண்டிருக்கின்றதே தவிர நடைமுறையில் ஒன்றையும் செய்வதில்லை என்றார்.
சு.கவை பிளவுபடுத்த ஐ.தே.க சதி: மஹிந்த
02-05-2016
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை பிளவு படுத்துவதற்கு, ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவங்சவுடன் இணைந்து சிறைக்கு செல்வதற்கும் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால் கிருலப்பனையில் நடத்திய மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தன்னுடைய மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தன்னுடைய சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கைது செய்யப்படுவதற்கான ஆபத்துக் காணப்படுகின்ற போதிலும், மக்களின் உரிமைகளுக்காகப் போரிடுவதிலிருந்து விலகிச் செல்லப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருப்பதாகத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் வாழ்வு முழுவதிலும், ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்து வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்தோடு, அந்தக் கட்சியுடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஏதும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.
‘இன்றைக்குப் பின்னர், எங்களோடு நெருக்கமாக உள்ளவர்களுக்கெதிராக வழக்குகள் பதிவாகும். தயாராக இருக்குமாறு நாமலிடம் சொல்லியுள்ளேன். கோட்டாபயவையையும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.
நானும் சிறைச்சாலைக்குச் செல்லவேண்டியேற்படலாம். ஆனால், நான் ஆயிரம் தடவைகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டாலும், மக்களுடனான எனது ஒற்றுமை, எப்போதும் முறியடிக்கப்படாது’ எனத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, தனது குடும்பத்துக்கெதிராக, பொய்யான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முன்வைப்பதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ். மிஹின் லங்கா ஆகியன, நட்டம் ஈட்டுவதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், அவை, செயற்பாட்டு இலாபத்தை ஈட்டுவதாகத் தெரிவித்த அவர், நாட்டில் காணப்படும் நிதி நெருக்கடி தொடர்பாக, அமைச்சரவையையும் நாடாளுமன்றத்தையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிழையாக வழிநடத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
‘எனது காலத்தில், வெளிநாடுகளில் கடனாகப் பெறப்பட்டது, 12 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதில் 4 பில்லியன் டொலர், போர்ச் செலவுகளாகும்.
இந்த அரசாங்கம், 7.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களைப் பெற்றுள்ளது. இதன்காரணமாகமே நாடு, இன்று நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.