வடக்கிலும், கிழக்கிலும் கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் இரகசியக் கைதுகள், கடத்தல்களின் பின்னணி குறித்த மர்மங்கள் இன்னமும் முழுமையாக வெளிவராதுள்ளன.
புலிகளின் முன்னாள் தளபதிகள், போராளிகளை குறிவைத்தே இந்தக் கைதுகள் இடம்பெற்று வருகின்றன.
அதிலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் ராம் கடத்தப்பட்டு , 24 மணிநேரத்துக்குப் பின்னர் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அதையடுத்து, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாகவும், பின்னர் அம்பாறை மாவட்டத் தளபதியாகவும் இருந்த கேணல் நகுலன் மற்றும் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த கலையரசன் அல்லது அறிவமுதன் ஆகியோரும் அடுத்தடுத்த நாட்களில் கடத்தப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் போரின் முடிவில் படையினரால் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள்.
மீண்டும் இவர்கள் கைது செய்யப்பட அல்லது கடத்தப்படத் தொடங்கியதையடுத்து. முன்னாள் போராளிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
(தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம்)
சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யும் போது கையாளப்படும் வழக்கமான நடைமுறைகளுக்கு அப்பால் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கின்ற ஒரு போக்கு அண்மையில் வெளிப்பட்டிருக்கிறது.
அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட மனித உரிமைகள் நடைமுறைகள் – 2015 அறிக்கையில் கூட, விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கண்டபடி கைது செய்யப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் ஏனைய வழிகளில் துன்புறுத்தப்படுவதும் தொடர்வதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியான பின்னரும் கூட, அதே பாணியிலான கடத்தல்களும், கைதுகளும் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளைக் குறிவைத்து தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக 33 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெற்றியாராச்சி.
எனினும், சாவகச்சேரி சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை என்றும், விசாரணைகள் முடிந்த பின்னரே, எதையும் கூற முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துக்கும், யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை அம்பாறை வரை முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவதற்கும் இடையில், திட்டமிட்டே ஒரு முடிச்சுப் போடப்படுகிறதா? என்ற சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிலும், புலிகளின் முன்னாள் தளபதிகளான ராம், நகுலன், கலையரசன் ஆகியோரின் கைதுகள், பரவலான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன.
(தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன்)
ஏனென்றால், போர் முடிவுக்கு வந்த போது, இவர்கள் எவரும் முள்ளிவாய்க்கால் களத்தில் இருந்திருக்கவில்லை. அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் இருந்து செயற்பட்டு வந்தவர்கள் இவர்கள்.
போர் முடிந்த பின்னர், இவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட புலிகளை வைத்தே இவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை திருகோணமலையில் வைத்துக் கைது செய்ததாக கூறப்பட்டது.
புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னரும், எஞ்சியிருக்கும் உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் குழப்பும், உளவியல் போர் ஒன்றை இராணுவப் புலனாய்வுப் பிரிவு அப்போதே மேற்கொண்டிருந்தது.
2009 நவம்பர் 27ஆம் திகதி, ராம் மாவீரர் நாள் செய்தியை வெளியிட்டிருந்தார். அப்போதே அவர், இராணுவப் பிடியில் சிக்கியிருந்தார்.
அதுமட்டுமன்றி, ராம், நகுலன் போன்றவர்களை வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவைத்து, பணம் பறிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுப்பதற்காக என்று, இவ்வாறு பணமும் பெறப்பட்டது.
இந்திய வாரஇதழ் ஒன்றின் செய்தியாளர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் அம்பாறைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, புலிகள் இருக்கிறார்கள் என்று நம்ப வைக்கவும் முயற்சிக்கப்பட்டது.
அவர்களால், சொல்லிக் கொடுக்கப்பட்டது போன்று, ஐந்தாவது கட்ட ஈழப்போர் தொடங்கவிருப்பதாக இந்திய செய்தியாளருக்கு ராம் பேட்டி கொடுத்திருந்தார்.
புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்களையும், புலிகளின் ஆதரவாளர்களையும் குழப்பும் வகையில், முன்னெடுக்கப்பட்ட உளவியல் நடவடிக்கைகளே அவை.
போரின் போது, படையினருக்கு எதிராக வைராக்கியத்துடன் போரிட்ட புலிகளின் தளபதிகள் கூட, போருக்குப் பின்னர், படையினரின் சொற்படி ஆடும் பொம்மைகளாக்கப்பட்டனர்.
ராம், நகுலன் போன்றவர்கள் 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகிறவர்களாகவே, இருந்து வந்தனர். அவர்களுடன் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து தொடர்புகளையும் பேணி வந்திருந்தனர்.
நகுலன் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது தாயார் அளித்துள்ள பேட்டிகளில், நீர்வேலி இராணுவ முகாமில் இருந்து மோகன், ரவி என இருவர் அடிக்கடி தமது வீட்டுக்கு வந்து செல்வதாகவும், நகுலனும் நீர்வேலி முகாமுக்கு சென்று வந்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம், இராணுவப் புலனாய்வுப் பிரிவு, இவர்களை வைத்து மீண்டும் ஏதேனும், இரகசிய நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டதா என்ற சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.
ராம், நகுலன் போன்றவர்களை வைத்து இராணுவப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது,
இந்தச் சந்தர்ப்பத்தில், ராம் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும், அவருக்கும் கிழக்கில் சரணடைந்த 600 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பல்வேறு இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் ராம் கைது செய்யப்பட்டதையடுத்து, நகுலன் கைது செய்யப்பட்டதால், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கான வாய்ப்புகள் இல்லாது போயின.
கிழக்கில் சரணடைந்த பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம், நகுலன் 15 வயதான ஒரு சிறுபோராளியாகத் தான் இருந்தார்.
அப்போது அவர், கிழக்கிலும் இருக்கவில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் தான் இவர்கள் இருவரும் இணைந்து கிழக்கில் செயற்பட்டிருந்தனர்.
ஒன்றுடன் ஒன்று இணைந்த சம்பவங்களாக இருக்கும் போது, எங்காவது ஒரு தொடர்பு இருக்க வேண்டும். அவ்வாறாயின், போரின் இறுதிக்கட்டம் அல்லது அதற்குப் பிந்திய விவகாரங்கள் தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், இவர்களின் கைது முன்னாள் போராளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாவிட்டாலும் அதே பாணியிலான கடத்தல்களும், கைதுகளும் இந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்படும் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க தளபதிகள், போராளிகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவு தமது தேவைகளுக்காக பயன்படுத்தியது பற்றிய விடயங்கள், இன்னமும் நீதிமன்றங்களில் நடக்கின்ற வழக்குகளில் இருந்து தெரியவந்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், புலிகளின் முன்னாள் தளபதிகளான ராம், நகுலன் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காகத் தான் கைது செய்யப்பட்டனரா அல்லது இனிமேலும் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைக்காகத் தான் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது போகப் போகத் தான் தெரியவரும்.
-சுபத்ரா-