வீடொன்றினுள் நுழைந்து பெண் ஒருவரை அவரது 10 மாத குழந்தையுடன் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த, மூவரை கைது செய்துள்ளதாக மீகலேவ பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கமுவ, உஸ்கல சியம்பலன்கமுவ, வீரகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான தாய் ஒருவரே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நேற்றுமுன்தினம் (30) இரவு குறித்த மூவரும், அப்பெண் தனிமையில் வீட்டில் குழந்தையுடன் இருந்தவேளையில், அவரது வீட்டின் கதவை உடைத்து, வீட்டினுள் பலாத்காரமாக நுழைந்து அப்பெண்ணை குழந்தையுடன் கடத்திச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலுள்ள காட்டுப் பகுதிக்குள் உள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண்ணின் கூக்குரல் சத்தத்தைக் கேட்ட அயலவர்கள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்த வேளையில், குறித்த பெண் இல்லாததால், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து மேற்கொண்ட தேடுதலின்போது, குறித்த பெண்ணை மீட்ட பொலிஸார், குறித்த மூவரையும் கைது செய்துள்ளனர்.
அதனை அடுத்து, குறித்த பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற்ற பொலிஸார், மீகலேவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதன் பின் அங்கிருந்து, குருணாகல் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 24,25, 26 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த மூவரும் திருமணமானவர்கள் என்பதோடு, அதில் ஒருவர், திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகவில்லை என தெரியவந்துள்ளது.
கைதான மூவரும் நேற்றைய தினம் (01) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து, அவர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்துமாறு கல்கமுவ நீதவான் நீதிபதி உத்தரவிட்டார்.