‘பிரபாகரனின் ஆவி கிளம்பியுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த விசேட இராணுவப் பாதுகாப்பை விலக்குவது எந்தவகையில் நியாயமானது?’ என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு, கிழக்குக்கு சமஷ்டியைப் பெற்றுத் தருமாறு கேட்கின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை விடுக்கின்றது.

தமிழீழமே வேண்டும் என்று ஜெயலலிதா, தேர்தல் பிரசாரம் செய்கின்றார். புலம்பெயர்ந்த தமிழர்களின் செல்வாக்கும் மேற்குலக நாடுகளின் செல்வாக்கும்இ நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (02), நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,

’30 ஆண்டுகளாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை இல்லாதொழித்த நாட்டின் தலைவரான மஹிந்தவுக்கான விசேட இராணுவப் பாதுகாப்பை நீக்கியமை, உலகின் எந்தவொரு நாடும் செய்யாத செயற்பாடாகும்’ என்றார்.

‘மைத்திரி, அமைச்சராக இருந்த காலத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது என, குண்டுகள் துளைக்காத வாகனம் வழங்கி, மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பளித்தார்.

அவர் சென்ற கூட்டங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு வழங்கினார். அவ்வாறானதொரு தலைவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் சேர்ந்து வழங்கும் மரியாதையா இது?’ என்றும் வினவினார்.

‘கிருலப்பனையில் திரண்ட மக்கள் கூட்டத்துக்கு அஞ்சியா அவர்கள் இவ்வாறு செய்தார்கள்? இது தொடர்பில் அவர்களிடம் கேள்வியெழுப்பிய போதுஇ பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமே சாதாரண பொலிஸாரே பாதுகாப்பு பணிக்கென அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மற்றைய தலைவர்களும் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவரும் ஒன்றா? புதிய அரசியல் கலாசாரம் என்கின்றீர்களே, உண்மையில் இதுவா உங்களது புதிய அரசியல் கலாசாரம்? உண்மையான அரசியல் கலாசாரத்தை உறுதிபடுத்துபவர்களாயின், மஹிந்தவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார்.

 

Share.
Leave A Reply