சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில்தான் 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 36 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
ஆர்க்காடு, வானூர், கூடலூர், வால்பாறை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வேட்பாளர்கள் களம் காண உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 15 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் 25 பேர் களத்தில் உள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 378 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.
பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடும் வேளச்சேரி, மாஜி டிஜிபி நடராஜ் போட்டியிடும் மயிலாப்பூரில் தலா 25 பேர் களத்தில் உள்ளனர்.
பெரம்பூர் தொகுதியில் 33 பேர் போட்டியில் உளளனர். வில்லிவாக்கம், ராயபுரம் தொகுதியில் தலா 17 பேர் இறுதியாக களத்தில் நிற்கின்றனர்.
மே 16ம் தேதி தமிழகசட்டசபைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியது. 29ம் தேதி முடிவடைந்தது. இதில் 7,156 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களில் ஆண்களே அதிகம், அதாவது 6358 பேர். பெண்கள் 794 பேர். மூன்றாம் பாலினத்தவர் 4 பேர். வேட்பு மனு பரிசீலனையின்போது 2956 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
4 தொகுதிகளில் பாமக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட ஷாக் சம்பவமும் நடந்தேறியது.
இந்நிலையில் நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் களம் காணும் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்களில், 3 ஆயிரத்து 472 பேர் ஆண்கள். 320 பேர் பெண்கள்.
மூன்றாம் பாலினத்தவர் 2 பேர். வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளான நேற்று மொத்தம், 337 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
சட்டசபைத் தேர்தலில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 684 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 72 ஆயிரத்து 601 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.
சுயேட்சை வேட்பாளர்களுக்கு அவர்களது விருப்பம் மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப சின்னம் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும். ஒரே சின்னத்தை இரு சுயேட்சை வேட்பாளர்கள் கேட்டால், அந்த சின்னம் குலுக்கல் முறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும்.