நல்லாட்சி அரசுக்கு இது நன்றாக இருக்கின்றதா? எனது இரண்டு பிள்ளைகளுக்கும் இனி என்ன நிலை? கல்வி கற்றுக் கொண்டிருக்கும் அவர்களை நான் எப்படி பாதுகாப்பேன் என இன்று கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளரின் மனைவி கயல்விழி கண்ணீருடன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எனது கணவரை இறுதி யுத்தத்தில் தவறவிட்டிருந்தேன். அப்போது நான் எனது 30 நாள் மகளுடன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துவிட்டேன்.

எனது கணவர் இறந்து விட்டார் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு எனது கணவர் தடுப்பு முகாமில் உள்ளதாகவும் என்னை வந்து சந்திக்குமாறும் தொலைபேசி அழைப்பு வந்தது.

அதன் பின்னர் என்னிடம் இவர் புனர்வாழ்வு பெற்றதற்கான கடிதத்தை தந்ததுடன் நான் இவரை பொறுப்பேற்றுக் கொண்டதாக என்னிடம் கையொப்பம் வேண்டிவிட்டு என்னிடம் எனது கணவரை அன்றும் ஒப்படைக்கவில்லை.

அவர்கள் மட்டக்களப்பில் உள்ள திரி.எம்.எஸ்.என்ற புலனாய்வு அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒரு மாதங்கள் வைத்திருந்த பின்னரே எனது கணவரை என்னிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதன் பின்னர் தொழில் இன்றி மிகுந்த கஸ்டப்பட்டு பனையோலை பின்னும் வேலை செய்து வந்தோம்.

பின்னர் மூன்று மாதங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரில் உள்ள சிற்றூண்டி சாலையினை எடுத்து நடாத்தி வருகின்றோம்.

இந்த நிலையில் எனது கணவரை நல்லாட்சி அரசாங்கம் கைது செய்துள்ளது என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

 

கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலி போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வாம்
03-05-2016

nakulannnபயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகிய விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் கடந்த வாரமளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த மூவரும், முறையாக புனர்வாழ்வு பெறாத நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மூவரையும், மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்றழைக்கப்படும் கலைநேசன் நேற்று காலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மேலதிக விசாரணைகளுக்காக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு அலுவலகத்துக்குக் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டுக்கு வருகை தந்திருந்த பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், தனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றதாக, கலைநேசன் மனைவி கயல்விழி தெரிவித்திருந்தார்.

அத்துடன், இது குறித்து மட்டக்களப்பு மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply