பெங்களூர்: மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், இளம் பெண் ஒருவர் மர்ம நபரால் பலாத்காரம் செய்யும் நோக்கத்தோடு தூக்கி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பெங்களூர் பனசங்கரி அருகே அமைந்துள்ளது, கத்ரிகுப்பே. இங்குள்ள பெண்களுக்கான பி.ஜி. ஹாஸ்டலில் தங்கியிருந்து வேலை பார்த்து வருபவர் சமீரா (25-பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் கடந்த மாதம் 23ம் தேதி, இரவு 9.30 மணியளவில் பணியிலிருந்து பி.ஜிக்கு திரும்பியுள்ளார். பி.ஜி ஹாஸ்டலின் மெயின் கேட் அருகே வந்த அவர் தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது பின்புறமாக வந்த ஒரு வாலிபர், திடீரென சமீராவை பின்புறமாக இருந்து கட்டிப்பிடித்து தூக்கினார். மெலிதான தேகம் கொண்ட சமீராவை தூக்கி செல்வது அந்த வாலிபருக்கு எளிதான காரியமாக இருந்தது.
சமீரா நடந்து வந்தபோது கொஞ்ச தூரம் அவரையே ஃபாலோ செய்தபடி வந்த அந்த நபர், சமீரா செல்போன் பேச்சில் கவனம் செலுத்தியதை சாதகமாக்கி கொண்டு அப்படி தூக்கி சென்றார்.
இவ்வாறு திடீரென தன்னை ஒரு நபர் தூக்கி செல்வதை உணர்ந்த சமீரா, கத்தி கூச்சலிட்டார். ஆனால் அந்த வழியாக சென்ற சில பொதுமக்கள், இவருக்கு உதவி செய்யவரவில்லை.
சமீராவின் செல்போன், கைப்பை போன்றவை அதே இடத்தில் கிடந்தன. எனவே தன்னை பலாத்காரம் செய்யும் நோக்கிலேயே அந்த நபர் தூக்கி சென்றிருக்க வேண்டும் என்பதையும், எனினும், கத்தி கூச்சலிட்டதை கேட்டு யாராவது காவல்துறைக்கு தகவல் கொடுத்திருப்பார்கள் என்ற பயத்தில், அந்த நபர் தப்பியோடியிருக்க கூடும் என்றும், சமீரா சந்தேகித்தார்.
சிசிடிவி காட்சிகள் இருப்பினும் போலீசில் புகார் அளிக்க பி.ஜி உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததால் இந்த விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட்டுவந்தது. ஒருவழியாக தாமதமாக இதுகுறித்து பி.ஜி. உரிமையாளர் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காமிராவில் பெண்ணை அந்த நபர் தூக்கி செல்லும் காட்சி பதிவானது தெரியவந்தது. குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.