புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சரியாக அணுகப்படவில்லை என்பதுடன் அதனை சரியாக அணுகுவதற்கும் அதற்காக குரல் கொடுப்பதற்கும் ஜனநாயக தன்மையுடைய மாற்று தலைமைத்துவத்தை வழங்குவதற்காகவே புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என புதிதாக தமிழ் மக்கள் மத்தியில் உதயமாகியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்த ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியெனும் புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தி ஓசன் ஹோட்டலில் இடம்பெற்றது.
இன்று காலை நடைபெற்ற இந்த புதிய கூட்டணி அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் குறித்த 10 கட்சிகளின் தலைவர்களும் ஒன்று கூடி ஊடகங்களுக்கு தமது நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தினர் இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், இலங்கை அரசு மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் நியாயத்தையும் தெளிவுபடுத்தி அதற்கான தீர்வை பெற்று கொடுக்க சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பிரயோகிப்பதும் தமது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தமிழ் மக்களின் முன்னுரிமைக்குரிய பிரச்சினைகளான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வு, காணமல் போனோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, தோட்ட தொழிலாளர்களது சம்பள உயர்வு போன்றவற்றுக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்க அரசுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதும், அதற்கான வெகுஜன விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதும் தமது இலக்கு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கூட்டணியில், தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலை அமைப்பு, தமிழ் மக்கள் அமைப்பு, ஈழப் புரட்சி அமைப்பு, சர்வதேச இந்து குருமார் சங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, ஸ்ரீரெலோ, ஜனநாயகத்திற்கான மறுசீரமைப்பு அமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 10 அமைப்புகள் மற்றும் கட்சிகள் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.