சிரியாவில் அகதிகள்முகாம் மீது ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
சிரியாவின் 2வது பெரிய நகரமான அலெப்போ மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது. அதை மீட்க சில மாதங்களாக ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
அலெப்போவின் தென்மேற்கு பகுதியான இட்லிப் நகரத்தின் சர்மதா என்னும் பகுதியில் கூடாரங்கள் அமைத்து அகதிகள் தங்கியுள்ளனர்.
இப்பகுதியில் நேற்று சிரியா ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளதுடன், எவ்விதத்திலும் இந்த தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து உள்ளூர் செய்தி சேனல் ஒன்றின் நிறுவனர் கூறுகையில், இரண்டு ஏவுகணைகள் முகாமுக்கு அருகே விழுந்த போது மக்கள் பதற்றமடைந்தனர், தொடர்ந்து அடுத்த கணமே இரண்டு ஏவுகணைகள் முகாமுக்கு உள்ளே விழுந்ததில் கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த நபர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.