அரசியல் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்படுகிறது. அந்தவகையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்குள் போட்டி போட்டுக்கொண்டு கூட்டணிகளை அமைத்து களத்தில் இறங்கியுள்ளன.
வழமையான கூட்டணி கட்சிகளுக்கு மாறாக மக்கள் நல கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா என்பன ஒன்றாக சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளன.
அதேபோல ஆளும் அ.தி.மு.க. தனக்கு கீழே உள்ள சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தனது கூட்டணியை அமைத்துள்ளது. இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போலவே தி.மு.க. இம்முறையும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது.
இதேபோல பா.ம.க., பா.ஜ.க, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
இந்நிலையில் அண்மையில் தினமலர் பத்திரிகையும் நியூஸ் 7 தொலைக்காட்சி சேவையும் இணைந்து தமிழகமெங்கும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளன.
இதேவேளை தமிழகத்தை பொறுத்த வரையில் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க., தி.மு.க. என்பன மாறி மாறி ஆட்சி பீடம் ஏறியுள்ளன.
அதிலும் முதல் 5 வருடங்கள் தி.மு.க. என்றால் அடுத்த 5வருடங்கள் அ.தி.மு.க என்பது எழுதி வைக்காத கோட்பாடாகவே இருந்து வந்துள்ளது.
அதனால் தற்போது அ.தி.மு.க.வின் 5 ஆண்டு ஆட்சிக் காலம் முடிவடைகிறது எனவே மீண்டும் ஆட்சிக்கு தி.மு.க. வரும் என பலரும் கருதுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் மிக பெரிய பழமையான செல்வாக்கு மிக்க கட்சிகளில் ஒன்றாக தி.மு.க.விளங்குகின்றது.
தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரையும் வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டெம்பர் 17, 1949இல்கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ரொபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது.
அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கறுப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி. மு. க. வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
ஆயினும் இக்கட்சி தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது.
1956 இல் தேர்தலில் போட்டியிட்டது. 1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது.
1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தி.மு.க. வில் பின்னர் பொருளாளராக எம்.ஜி.ஆர். இணைந்தார்.
1967-இல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.
1967 பெப்ரவரி 6-ஆம் திகதி அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார்.
அவர் தான் உயிரிழக்கும் வரை 1969 பெப்ரவரி 3 ஆம் திகதி வரை தமிழக முதல்வராக ஆட்சியில் இருந்தார்.
அண்ணாவின் மறைவையடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும் அப்போதைய கல்வியமைச்சர் நாவலருக்கும் (நெடுஞ்செழியன்) இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நாவலர் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நாவலர் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார்.
1969இல் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பின் மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார்.
1972 அக்டோபர் 14ஆம்திகதி அக்கட்சியில் பெரும் பிளவு உண்டானது. அக் கட்சியின் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார்.
1975 ஜுன் 25 ஆம் திகதி இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31ஆம் திகதி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது.
1977 ஜூலை 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது.
இதனையடுத்து தி.மு.க.வின் கூட்டணி வாழ்க்கை ஆரம்பமாகியது. 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது.
ஆயினும் எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்குக்கு முன்பு தி.மு.க.வினால் எழுந்து நிற்க முடியவில்லை.
1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயற்பட்டன. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. ஈழத் தமிழர் போராட்டம், ஆதரவு ஹிந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது.
1983 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் தி.மு.க.வினால் ஆட்சி பீடம் ஏறுவது என்பது வெறும் கனவாக மட்டுமே இருந்துள்ளது. ஆயினும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1987 டிசம்பர் 24ஆம் திகதி மறைந்ததையடுத்து , அ.தி.மு.க. வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் என்பன தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்தன.
எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற தி.மு.க. 1991 ஜனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
ஆயினும் 1991 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. அரசு ஆதரவு தெரிவிப்பதாகவும் இந்திய அரசின் ரகசியங்களை வெளியிடுவதாகவும் தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டது.
இதனையடுத்து 1991 மே 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனையடுத்து கட்சியில் மீண்டும் பிளவு உருவாகியது. 1993 ஆம் ஆண்டு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆயினும் அடுத்த தேர்தலில் 1996 ஏப்ரல் 27இ-ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றிப்பெற்று ஆட்சிபீடம் ஏறியது.
ஆனால் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது.
பின்னர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.
இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.காங்கிரஸின் மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.
ஆனால் இக்கால பகுதியில் தமிழக வளர்சிக்கு தி.மு.க செய்த பணிகளை சேவைகளை விட தமது குடும்பத்துக்காக செய்த சேவைகளே அதிகம் என குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இக்கால பகுதியில் தி.மு.க.வின் அமைச்சரவையில் இருந்தவர்கள் அனைவரும் கருணாநிதியின் மகன்மார்களும் பேரப்பிள்ளைகளுமே.
தயாநிதி மாறன்அழகிரி, கனிமொழி, உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக இருந்ததோடு, தமிழகத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழி மாறன் சகோதரர்கள் மற்றும் ராஜா உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இலவச தொலைக்காட்சிகளை கருணாநிதி வழங்கியதே அவர்களது தொலைக்காட்சி சேவைகளை விஸ்தரிப்பதற்காக என்று கூறப்படுகிறது.
அத்தோடு தொலைக்காட்சி கடந்து அவர்களது சன் குழுமம் திரைப்பட தயாரிப்புகளிலும் முக்கிய பங்கு வகித்தது. கோடிக்கணக்கான பணத்தை திரைப்படங்களில் முதலிட்டதோடு ஏனைய தயாரிப்பாளர்களுக்கு இது பெரும் பாதக நிலையை உருவாக்கியது.
இவை அனைத்துக்கும் மேலாக 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் தி.மு.க. முக்கிய பங்கு வகித்தது.
யுத்தம் தீவிரம் அடைந்து கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதனை தடுப்பதற்காக கருணாநிதி எந்த முயற்சியையும் எடுக்க வில்லை.
அவர் நினைத்திருந்தால் தமது பதவிகளை துறந்து ஆட்சியையே மத்திய காங்கிரஸுக்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் கருணாநிதி அதனை செய்யவில்லை.
வெறும் உண்ணாவிரத நாடகம் மட்டுமே ஆடினார். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மீண்டும் அமைச்சு பதவிகள் சுகபோகங்கள் என்பதனை அடுத்த தேர்தலிலும் தொடரலாம் என்றெண்ணிய கருணாநிதி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
தமிழகம் மட்டும் அன்றி உலக தமிழர்களினாலும் தமிழின துரோகியாக கருணாநிதி பார்க்கப்பட்டார். இதனையே தேர்தலில் ஏனைய கட்சிகள் தமது ஆயுதமாக எடுத்தன.
இதன் வெளிப்பாடு அடுத்த தேர்தலில் படுதோல்வியடைந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க.எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் கூட இழந்தது.
அத்தோடு அழகிரி, ஸ்டாலினுக்கு இடையில் குடும்ப பிரச்சினை உருவாகி கருணாநிதி அழகிரியை தனது மகனே இல்லையென கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டார்.
அத்தோடு மத்தியில் ஆட்சி மாற்றம், ஸ்பெக்ரம் ஊழல் என்பன தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவையே தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கியுள்ளார்.
இதற்கிணங்க தேர்தலை குறிவைத்து மு.க. ஸ்டாலின் கடந்த வருடமே களத்தில் நேரடியாக இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.
இதற்கெனவே ஒரு குழுவினை அமைத்து அதன் மூலம் நமக்கு நாமே என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்தார்.
இந்த திட்டத்திற்காக மக்களை கவரும் வகையில் ஸ்டாலின் தனது நடை உடை பாவனையை மாற்றினார்.
இதுவரைகாலமும் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்த அவர் கலர் கலரான உடைகளுக்கு மாறினார் இதன் மூலம் மக்களை அவர்களது இருப்பிடம் தேடி சென்று சந்தித்தார்.
சாதாரண தெருக்கடையில் தேநீர் குடித்து, சாப்பிட்டு சாதாரண மக்களோடு மக்களாக பஸ்ஸில் பயணித்தார், கிரிக்கெட் விளையாடினார், சைக்கிளில் சுற்றினார்.
இவை அனைத்தையும் அவருடன் சென்ற ஒரு குழுவினர் ஒளிப்பதிவு செய்து தொலைகாட்சிகளில் ஒளிபரப்பினர். அதேபோல பத்திரிகை உட்பட அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி பேசப்பட்டது. இவை அனைத்தும் இந்த தேர்தலில் கை கொடுக்கும் என்ற அபார நம்பிக்கையில் அவர் செயற்பட்டார்.
ஆனால், இதனை சிறு பிள்ளை விளையாட்டு என நகைச்சுவை செய்ய யாரும் தவற வில்லை. ஸ்டாலின் ஒரு காமெடியன் இது நகைச்சுவையான விடயம் என்று அவரது அண்ணன் அழகிரியே விமர்சித்தார். ஆனாலும் ஸ்டாலின் வெள்ளம் தமிழகத்தை புரட்டி போடும் வரையில் தனது நமக்குநாமே திட்டத்தை கைவிடவில்லை.
இந்நிலையில் சொத்துக் குவிப்பில் ஜெயலலிதா சிறைக்கு சென்றது. தமிழக வெள்ளம் என்பனவற்றை தமக்கு சாதகமாக பயன் படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர தி.மு.க. முனைகிறது.
ஆனால் தனித்து தம்மால் அ.தி.மு.க. வை இலகுவில் வீழ்த்த முடியாது என்பதனை அறிந்து கூட்டணிக்கு முயற்சித்தனர். விஜயகாந்தை கூட்டணிக்கு இழுப்பதற்கான அவர்களது முயற்சி தோல்வியை தழுவியது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் 3 ஆவது அணியாக விஜயகாந்த் மாறிவிட்டார். இதனால் மீண்டும் காங்கிரஸுடனேயே தி.மு.க. கூட்டணி வைத்துவிட்டது.
தமிழகத்தை பொறுத்த வரையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை பாரிய செல்வாக்கினை அரசியல் களத்தில் செலுத்துகின்றது. அதுவும் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற தமிழின படுகொலையை அவர்கள் அத்தனை இலகுவில் மறக்கமாட்டார்கள்.
நேற்றுமுன்தினம் கூட மாணவர்கள் பிரசாரத்துக்காக தமிழகம் வருகை தந்த சோனியா காந்திக்கு எதிராக பாரிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தேர்தல் பிரசாரங்களில் அனைவரும் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தங்கள் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
அத்தோடு காங்கிரஸ் மாநில தலைவர் இளங்கோவன் எதனை பேசினாலும் அது சர்ச்சையாகவே போகின்றது. அவரது அரசியல் நாகரிகத்தை கேள்விக் குறியாக்கும் வகையிலேயே அவரது பேச்சுக்கள் அமைந்துள்ளன.
அரசியல் சாணக்கியம் கொண்ட கருணாநிதி கூட்டணிகளை அமைப்பதில் வல்லவர் என்பது கடந்த கால அரசியலை திரும்பி பார்த்தால் அனைவருக்கும் புரியும். சாதிப்பதற்கு வயதோ உடல் குறைபாடுகளோ ஒரு குறைபாடல்ல.
ஆனால், தி.மு.க. தலைவர் தனது 93 வயதிலும் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்று முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது , இளைய தலைமுறைக்கான அரசியல் வாய்ப்பை இழக்கச் செய்யும் என்பதனால் இதனை வரவேற்பவர்களை விட மூஞ்சையை சுழிப்பவர்களே அதிகம்.
தமிழகத்தை பொறுத்தவரையில் பரம்பரையாக ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் தன்மை தற்போது மாறிவிட்டது. இளைய சமுதாயம் சிந்தித்து வாக்களிக்க தொடங்கிவிட்டது.
இது நிச்சயமாக இத் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும். அத்தோடு தி.மு.க. வின் ஆட்சி பீட கனவிலும் தாக்கம் செலுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.