பதினைந்து கோடி ரூபாய் அரச சொத்துகளை நஷ்டப்படுத்தியமை, தனது பாதுகாப்பிற்கு 160க்கும் அதிகமான பொலிஸாரை நியமித்தமை மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தில் இலங்கை இராணுவத்தை பாதுகாப்பிற்கு நியமித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிடம் பாரிய ஊழல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று நான்கு மணிநேர விசாரணைகளை நடத்தியுள்ளது. ரக்னாலங்கா எவன்கார் விவகாரம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இன்று காலை 9 மணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷவிடம் சுமார் நான்கு மணிநேரம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது பிரதானமாக அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த பதவிக்காலத்தில் தனது தனிப்பட்ட பாவனைக்காக பாதுகாப்பு தரப்பின் ஹெலி விமானங்களை பாவித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 15 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விசாரணைகளின் போது மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.