தனது மகனை புலனாய்வாளர்கள் என அறிமுகம் செய்து கொண்டவர்கள் சிலரே காரில் ஏற்றிச் சென்றதாக சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின் தாயார் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
வழக்கு விசாரணை முடிவடைந்ததன் பின்னர் நீதிமன்றுக்கு வெளியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனது மகனுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி எமது வீட்டுக்கு காரில் வந்தவர்கள் தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகம் செய்து கொண்டு எனது மகனை (சுவிஸ் குமார்) காரில் அழைத்துச் சென்றனர்.
பின்னர் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஊருக்கு திரும்பி வந்தால் தாக்குதல் மேற்கொள்வார்கள் என்ற பயத்தினாலையே எனது மகன் கொழுப்புக்கு சென்றார்.
எனது மகன் தப்பி செல்ல வில்லை அவருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
சுவிஸ் குமார் தப்பி சென்றது எவ்வாறு ? அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் யாழ் .பொலிஸ் நிலையத்தில் இருந்து எவ்வாறு தப்பிச்சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் குற்ற புலனாய்வு பிரிவி பணிப்பாளருக்கு உத்தரவு இட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது அக் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
மாணவி கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு யாழ்.பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார் என்பது தொடர்பில் பொலிசார் மீது விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என மன்று கோரிக்கை விடுக்க வேண்டும் என நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதன் பிரகாரம் நீதவான் குறித்த நபர் எவ்வாறு தப்பி சென்றார்? தப்பி செல்ல யார் யார் உதவினார்கள்? அல்லது பொலிசாரினால் விடுதலை செய்யப்பட்டால் எந்த சட்டத்தின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டார் , சம்பவம் நடைபெற்ற தினத்திற்கு ஒரு கிழமைக்கு முன்னரும், ஒரு கிழமைக்கு பின்னரும் எவர் எவருடன் தொடர்புகளை பேணினார் போன்றவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவை தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதேவேளை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்களின் ஒரு வருடத்துக்கான விளக்கமறியல் காலம் நாளை மறுதினம் 11 ஆம் திகதி முடிவுறுகின்றது.
இந்த நிலையில் இவர்களது விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு, பிணைச்சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இந்த மனு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படுவதாக அரச சட்டவாதி ஜனாப் சக்கி இஸ்மாயில் மன்றில் தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை 3 மாதத்திற்கு ஒரு தடவையாக ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரச சட்டவாதி தனது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியல் உத்தரவை முதலில் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கான விசாரணை நடத்துவதற்கு சந்தேக நபர்களை மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கு உத்தவிடுமாறும் அரச சட்டத்தரணி மன்றில் கோரினார்.
இதனையடுத்து இந்த வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியல் காலத்தை நீடிப்பதா என்று விசாரணை செய்வதற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை அவர்களை நீதிமன்றில் ஆஜராக்குமாறு அனுராதபுரம் மறியற்சாலை அத்தியட்சகருக்கு மேல் நீதிமன்றநீதிபதி இளங்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.