தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் தொடர்பாக என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிரணாய் ராயின் கேள்விகளுக்கு சரமாரி ஆங்கிலம், நடுநடுவே தமிழ் என ஏக உற்சாகத்துடன் பதில் அளித்திருக்கிறார் விஜயகாந்த்.
எடுத்த எடுப்பில், “அரசியல் ஒரு சினிமா என்றால்… ஐ யம் ஹீரோ! மை வில்லன் இஸ் கலைஞர்… மை வில்லி இஸ் ஜெயலலிதா. good ah..?” என்று கேட்டு கெத்து ரியாக்ஷன் காட்டி, லைக் எதிர்பார்க்கிறார் விஜயகாந்த்.
அதேபோல், ’கருணாநிதி 90 அபோவ், ஜெயலலிதா 60 எபோவ், மை ஏஜ் ஐ டோன்ட் நோ. ஹார்ட் இஸ் மை ஏஜ். இட் இஸ் வெரி யங்!’ என்றெல்லாம் அமர்த்தலாக பதிலளித்திருக்கிறார்.
’அட… ஆங்கில ஊடக நிருபர்களையே ஆச்சர்யப்படுத்துகிறாரே இவர்’ என்று நமக்கு ஒருவித பெருமிதம் உண்டாகிறது. ஆச்சர்யமாக, கிடுக்குப்பிடி கேள்வி எதையும் எழுப்பாமல், வம்பிழுக்காமல் பிரணாயும் விஜயகாந்தின் பதில்களுக்கு சிரித்துக் கொண்டும், ஆமோதித்தும் பேட்டியை கொண்டு செல்கிறார்
‘நேரில் இவர்களைச் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, ” ஜெயலலிதா திரும்பிக் கொள்வார். ஆனால், கருணாநிதியைப் பார்த்தால் வணக்கம் சொல்லுவேன்.
மரியாதையானவர். அதே சமயம்… எம்.ஜி.ஆரை பார்த்தால் போச்சு. கலைஞரிடம் பேசினால் போச்சு. அவர் பேச்சு மூலம் தனக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வார்!’’ என்கிறார்.
அ.தி.மு.கவுடனான கூட்டணி பற்றிய கேள்வி வந்தபோது, ” நான் பால் விலை ஏறியதைக் கண்டித்து கூட்டணியிலிருந்தே வெளியேறியவன்.
ஃபர்ஸ்ட் டை
ம் ஐ வின் 1 சீட், அடுத்து ஐ 41 சீட் போட்டி. வின்னிங் 29 சீட்ஸ். ஆனா, பால் விலையை ஏத்திட்டாங்க. அதான் கூட்டணியில இருந்து வெளியேறிட்டேன்.
இதோ… இப்போ பால் விலையைக் குறைப்போம்னு சிலர் தேர்தல் அறிக்கைல சொல்றாங்க. அதான் நான் அன்னைக்கே சொன்னேன். அதை யாரும் கண்டுக்கலை!’’ என்றார்.
‘உங்கள் கூட்டணியில் மற்ற கட்சிகள் பலம் குறைந்து இருக்கிறதே..?!’ என்ற கேள்விக்கு, ”அ.தி,மு.க மற்றும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை ‘ஹம்பக்’.
எங்களைப் பார்த்து காப்பி அடித்தது. நாங்கள் வெற்றி பெறுவோம். அவர்களுக்கு என்னைப் பார்த்து பயம். நான் எத்தனை சீட் ஜெயிப்பேன் என்று கேட்கிறார்கள். நான் ஒன்றும் ஜோசியர் இல்லை கணிப்பதற்கு. ஆனால் நான் ஜெயிப்பேன்!” என்று கெத்தாக பதிலளித்துள்ளார் விஜயகாந்த்.
‘நீங்கள் அதிகம் மது அருந்துவதாகச் சொல்கிறார்களே…?’ என்றதற்கு ‘’இட் இஸ் ஓல்டு நியூஸ். மை வொய்ஃப் சேலஞ்சுடு. போன பொங்கலுக்கே சேலஞ்ச் செய்தேன். இன்னும் யாரும் என்னைச் சோதிக்க தயாராக இல்லை!’’ என்றார்.
ஆஹா… விஜயகாந்த் பேட்டிகள் இனி ஆங்கிலத்திலும் களை கட்டும்!