உளுந்தூர்பேட்டை: சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ அல்லது யாரிடம் இருந்தும் பணம் வாங்கவோ மாட்டேன் என உளுந்தூர்பேட்டை பரிக்கல் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வகையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ100 கோடியை எட்டுகிறது.
புதுபுது வியூகங்கள்
அத்துடன் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் உணவுப் பொட்டலங்களுக்குள் பணம் வைத்து கொடுப்பது, பணத்துக்கு பதிலாக பெட்ரோல் போடுவதற்கான டோக்கன்கள் கொடுப்பது என புதுபுது வியூகங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
உளுந்தூர்பேட்டையில்…
பிரதான கட்சிகளான ஆளும் அதிமுக, திமுக தான் இத்தகைய பார்முலாக்களை கடைபிடிப்பதாக தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டார்.
சாமி சிலை முன் உறுதிமொழி
அப்போது தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன் என சாமி சிலை முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக தேமுதிகவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் படத்துடன் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படியும் ஒரு பரபரப்பு
வந்தது சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகள் பிரியும் வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ மூலம் ரூ1,500 கோடி பணத்தை அதிமுக மேலிடம் கொடுத்ததாக பரபரப்பான புகார் கிளம்பியிருந்தது.
இதற்காகத்தான் அவர் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி தேமுதிகவுடன் கூட்டணி வைத்தார் எனவும் கூறப்பட்டது. இதே குற்றச்சாட்டை விஜயகாந்தின் வலதுகரமாக இருந்து அவரிடம் இருந்து பிரிந்து வந்த சந்திரகுமாரும் ஊடகங்களில் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.