மட்டு. காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கர்பலா பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான சுமார் 38 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான மேற்படி பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காத் தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்கள் இருவரையும் நேற்று 10 செவ்வாய்க்கிழமை வரை 14 விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களான விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்வரும் 24- ஆம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது