மற்ற நாடுகளில் அதிபர் தேர்ந்தெடுக்கும்  முறைக்கும், அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கும்முறைக்கும் என்ன வேறுபாடு என்று அறியும்முன்னர், அமெரிக்க அதிபரின் பொறுப்புகள் என்ன என்று அறிவது அவசியமாகிறது.

இந்தியக் குடியசரின் அதிபரை ஜனாதிபதி என்றழைக்கிறோம். அவர் முப்படைத் தலைவராக இருந்தாலும், நடுவன் அரசு உள்பட மற்ற மாரில அரசுகளைக் கலைக்கும் அதிகாரம் உள்ளவராக இருப்பினும் அவர் அவ்வாறு செய்வதில்லை.

America-2014
இந்தியப் பிரதமரின் பரிந்துரைப்படிதான் அப்படிச் செய்கிறார். தன் விருப்பப்படி முடிவெடுப்பதில்லை. பொதுவாக சிறப்புநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதே அவரது அன்றாட அலுவலாக இருக்கிறது.

வெளிநாட்டுச் சிறப்புநிகழ்ச்சிகளில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு நட்புப்பாலமாக அமைகிறார். பிரிட்டானிய ராணியும் அப்படியே. அவர் பிரிட்டனுக்கு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கும் ராணியாக இருக்கிறார்.

ஆனால், அமெரிக்க அதிபர் அப்படியல்ல. அவர் அமெரிக்க செயலமைப்புத் துறையின தலைவர். உச்சநீதி மன்றத்திற்கு நீதிபதிகளை அவர்மட்டுமே பரிந்துரைக்கமுடியும்.

அதை ஏற்பதற்கோ, மறுப்பதற்கோ சட்டத்துறைக்கு உரிமை உண்டு. அத்துடன், தனது நிர்வாகத்துறைக்கு செயலர்களைத் [Cabinet Secretaries] தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவருக்கு உண்டு.

அச்செயலர்கள் இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அமைச்சர்கள்போலப் பணியாற்றுகிறார்கள். இதுபோன்று மத்திய வங்கித்துறையின் மேலதிகாரியையும் அவரே நியமிக்கிறார்.

இராணுவம், உளவுத்துறை போன்ற பல துறைகள் இவரின் அதிகாரத்திற்கு உட்படுகின்றன.

இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியாவில் பிரதம மந்திரி ஆளும்கட்சித் தலைவர். எந்தக் கட்சி நடுவன் அரசமைக்க அதிகப் பிரதிநிதிகளைப் பெறுகிறதோ, அக்கட்சியின் தலைவரே பிரதமர் ஆகிறார்.

அவரை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். அக்கட்சியே மந்திரிசபை அமைக்கிறது.

ஆனால், அமரிக்க அதிபர் ஒரு கட்சியைச் சேர்நதவராக இருக்கலாம். சட்டப்பேரவை இன்னொரு கட்சியின் பெரும்பான்மை பெற்றோ, அல்லது, சட்டப்பேரவையின் ஒருகிளை மட்டும் அமெரிக்க அதிபரின் கட்சியின் பெரும்பான்மை பலம் பெற்றதாகவோ இருக்கலாம்.

என்ன, குழப்பமாக இருக்கிறதா? இப்பொழுது அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியில் மட்டுமல்ல, புகழ்பெற்ற அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், பில் க்லிட்டன் காலத்திலும் அப்படி நேர்ந்திருக்கிறது!

இப்படி ஆனால் எப்படி ஆட்சி நடத்துவது? அனுசரித்து, ஒத்துப்போய், விட்டுக்கொடுத்து, அதாவது ஒருவர் முதுகை இன்னொருவர் சொறிந்துகொடுத்து ஆட்சி செய்யவேண்டியதுதான்!

அப்படி முடியாதென்றால் சிலசமயம் ஆட்சியில் குழப்பம் மிஞ்சும். அதுவும் நடக்கட்டும், தனிமனிதரோ, பெரும்பான்மையினரோ [பெரும்பான்மை பெற்ற கட்சி] மற்றவரை அடக்குமுறை செய்யாமலிருந்தால் சரி என்பதே அமெரிக்கத் தந்தையரின் நோக்கமாக இருந்த்து.

ஆகையால் அமெரிக்க அதிபர், மக்களால் கிட்டத்தட்ட நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Electoral-College-vs-Popular-Voteஅதென்ன கிட்டத்தட்ட…?

சில மாநிலங்களில் அதிக மக்கள்தொகை இருக்கலாம், சில மாநிலங்களில் ஒரொரு கட்சி பலம்பெற்று விளங்கலாம். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும், மக்கள் தமது கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். அப்படியானால் எவரை அமெரிக்க அதிபர் என்று ஒப்புக்கொள்வது என்ற கேள்வி எழுகிறது.

ஏன் இந்த வேண்டாத குழப்பம், எப்பொழுது அதிபர் நாட்டுமக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ, அப்பொழுது மொத்த ஓட்டுக்களைக் கணக்கெடுத்து, அதிக ஓட்டுபெற்றவரை அமெரிக்க அதிபராக அறிவித்துவிடவேண்டியதுதானே என்றுதான் நாம் எண்ணுவோம்.

ஆயினும் அமெரிக்கத் தந்தையர் வேறுவிதமாக எண்ணினார்கள். அதன் விளைவால்தான் அதிக வாக்குகள் பெற்ற நான்கு பேர் [ஆன்ட்ரூ ஜாக்ஸன் – 1924, சாமுவேல் டில்டன் – 1876, க்ரோவர் க்லீவ்லான்ட் – 1888, அல் கோர் – 2000] அமெரிக்க அதிபர் பதவிக்கு வரமுடியவில்லை.

அவர்கள் நான்கு பேர்களும் முறையே 44,804, 264,292, 95713, 543,816 வாக்குகல் அதிகம் பெற்றும், ஜான் க்வின்சி ஆடம்ஸ், ருதர்ஃபோர்ட் ஹேஸ், பெஞ்சமின் ஹாரிசன், ஜார்ஜ் புஷ் இவர்கள் அமெரிக்க அதிபர்கள் ஆகமுடிந்தது.

இதென்ன அநியாயமாக இருக்கிறது? மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பல்லவா? அப்படியிருக்க, அதிக வாக்குகள் பெற்ற நால்வருக்கு இப்படியொரு அநீதி எப்படி இழைக்கப்பட்ட்து என்று பொங்கியெழத்தோன்றுகிறதா?

எலெக்டோரல் காலேஜ் என்றழைக்கப்படும் தேர்தல் குழாம் [Electoral College] என்று ஓன்று இருப்பதும், அமெரிக்க அதிபர் அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதும் அதற்குக் காரணம்.

அப்படியானால் மக்களின் வாக்கு என்னவாயிற்று?

அடுத்து அமெரிக்க அதிபர் தேர்தல் முறையான தேர்தல் குழாம் பற்றித் தெரிந்துகொள்வோம்.

6.  தேர்தல் குழாம் [Electoral College]

“தேர்தல்குழாம் என்று ஒரு குழுவை ஏற்படுத்துவானேன், இப்படிப்பட்ட ஒரு குழப்பத்தைத் தோற்றுவிப்பானேன்?  அதிகப்படியான மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒருவரையே அமெரிக்க அதிபர் என்று ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?”

மேற்கண்ட கேள்விகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது நமது மனதில் தோன்றுவது மிகவும் இயற்கையே.  அதில் தவறொன்றுமில்லை.

அப்படித்தான் பலநாடுகளில் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.  அது அமெரிக்கத்தந்தையருக்குத் தெரியாத ஒன்றும் அல்ல.  அப்படியிருந்தும், இப்படியொரு குழாத்தைவைத்தே அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு அவர்கள்வருவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்த்து.

அதற்குமுன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எத்தனை தேர்தல்குழாம் வாக்குகளைப்பெறவேண்டும் என்று பார்ப்போம்.

அவ்வாக்குகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  முதலாவது, ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையைப் பொருத்தது.  இரண்டாவது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிகப்படியாக இரண்டு வாக்குகள் அளிக்கப்படுகின்றன.  அது மக்கள் தொகையைப் பொருத்ததல்ல, நிலையானது.

54440267

எனவே, அமெரிக்காவின்  ஐம்பது மாகாணங்களும், தலா இரண்டு வாக்குகள் பெற்று, மொத்தம் நூறு வாக்குகள் உள்ளன.

இந்த இரண்டு வாக்குகளை மதித்தே, செனட்டில் [ஆட்சிமன்றம் என்ற சொல்லிற்குப் பதிலாக இந்த ஆங்கிலச் சொல்லை இனிமேல் கையாளுவோம்] மொத்தம் 100 செனட்டர்கள் இருக்கிறார்கள்.

செனட்டில் மக்கள்தொகை அதிகமாயுள்ள எந்த மாநிலத்திற்கும் தனி மதிப்பு இல்லை.  அமெரிக்காவிலேயே மிக அதிக மக்கள்தொகையுள்ள கலிஃபோர்னியாவுக்கும் [39,144,818], மிகக்குறைந்த மக்கள்தொகையுள்ள வையோமிங்குக்கும் [586,107] தலா இரண்டு செனட்டர்கள்தான்.

ஏன் இப்படி வகுக்கப்பட்டிருக்கிறது?

மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலம் [கலிஃபோர்னியா] தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தான்விரும்பியவண்ணம் சட்டமியற்றக்கூடாது என்றுதான்.  மக்கள்தொகை குறைவான மாநிலங்களின் உரிமையும் இவ்விதமாகப் பாதுகாக்கப்படும் வண்ணம் அமெரிக்கத்தந்தையர் வழிவகுத்துவைத்தார்கள்.

பிரதிநிதிசபையில் மொத்தம் 435 பேர் இருக்கிறார்கள்.  ஆகையால் அவர்களுக்கு 435 வாக்குகள். இந்த வாக்குகளின், அதாவது பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாறாது.

ஆனால், மக்கட்தொகை மாற்றத்தை அனுசரித்து, ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகளின் எண்ணிக்கைகளும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னாலும் மாற்றப்படும்.

இத்துடன், ஒருங்கிணைந்த [Federal] அரசின் கீழுள்ள வாஷிங்டன் டி.சி [டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா]க்கு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கென்று 3 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 538 அரசியல்குழாம் வாக்குகளில் குறைந்தபட்சம் 270 வாக்குகள்பெற்றால்தான் அமெரிக்க அதிபர் ஆகமுடியும்.

அமெரிக்க அதிபரையும், துணை அதிபரையும் எப்படித் தேர்ந்தெடுப்பது என்று அரசியல் அமைப்பின் இரண்டாவது பிரிவு சொல்கிறது.  அதில் சில மாறுதல்கள் பன்னிரண்டாவது திருத்த்த்தில் செய்யப்பட்டன.

அமெரிக்க அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்படலாம்?  அதை இரண்டாம் பிரிவின் ஐந்தாம் துணைக்கூறு [Clause] தெரிவிக்கிறது.

“No Person except a natural born Citizen, or a Citizen of the United States, at the time of the Adoption of this Constitution, shall be eligible to the Office of President; neither shall any Person be eligible to that Office who shall not have attained to the Age of thirty five Years, and been fourteen Years a Resident within the United States.”

இயற்கையாகப் பிறந்த குடிமகனாகவோ, இந்த அரசியல் அமைப்பு [எழுதப்பட்ட] காலத்தில் குடிமகனாகவோ இல்லாதவர் [அமெரிக்க] அதிபர் பதவிக்கு தகுதியானவர் அல்லர்;. மேலும், முப்பத்தைந்து வயதை அடையாதவரும், பதினான்காண்டுகள் ஒருங்கிணைந்த மாநிலங்களின் குடியிருப்பாளராக இல்லாதவரும் அத்தகுதி இல்லாதவரே.

அரசியல்குழாத்தை அமைத்ததின் முதல்நோக்கத்தைப் புரிந்துகொண்டோம்.  இனி அரசியல் குழாத்தின் வாக்குகள் எப்படி பெருவாரி வாக்குகளிலிருந்து மாறுபட்ட விளைவை உண்டாக்கும் என்று நோக்குவோம்.

***   ***   ***

தொடரும்..

ஒரு அரிசோனன்

மூலம்: https://tamizhtharakai.wordpress.com

அமரிக்காவில் மக்களுக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமை வழங்கப்பட்டதேன்?? (அமெரிக்க [அதிபர்] அரசியல் — 2)

அமெரிக்க [அதிபர்] தேர்தல்/அரசியல் — (பகுதி-1)

குறிப்புகள்:

[1]   http://americanhistory.about.com/od/uspresidents/f/pres_unpopular.htm

John Quincy Adams who lost by 44,804 votes to Andrew Jackson in 1824

Rutherford B. Hayes who lost by 264,292 votes to Samuel J. Tilden in 1876

Benjamin Harrison who lost by 95,713 votes to Grover Cleveland in 1888

George W. Bush who lost by 543,816 votes to Al Gore in the 2000 election.

[2]   http://www.shmoop.com/constitution/article-2-section-1.html

[3]  http://constitution.laws.com/12th-amendment

[4]   இந்த உட்பிரிவின் சொற்றொடர், அமெரிக்க அதிபராகும் தகுதிக்கு குறைந்தபட்சம் அமெரிக்காவில் பதினான்கு ஆண்டுகள் வசித்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையையும் விதிக்கிறது.

Share.
Leave A Reply