எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் சம்பந்தன் வடக்கில் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
வடக்கில் இராணுவ முகாம்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் அவர் சென்று பார்வையிட முடியும். எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவருக்கான அந்தஸ்தும், முன்னுரிமையும் வழங்கப்படவேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வகையில் வடக்கில் எந்த செயற்பாடுகளும் அமையவில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்தது.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வடக்கின் நிலைமைகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் நாட்டில் முக்கியமான பொறுப்பில் உள்ள ஒருவர். எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவருக்கான மதிப்பையும் அந்தஸ்தையும் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவர் வடக்கில் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
வடக்கில் இராணுவ முகாம்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் அவர் சென்று பார்வையிட முடியும். அதை தவறாக சித்தரித்து அரசியல் ரீதியில் பூதாகரமாக்க வேண்டாம்.
அதேபோல் அவர் அத்துமீறிய வகையில் இராணுவ முகாமுக்குள் சென்றார் எனவும், பாதுகாப்பு விதிகளை மீறி செயற்பட்டார் எனவும் அவர்மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் அவ்வாறு அவர் அத்துமீறிய வகையில் உள்நுழையவில்லை. அவர் பொலிஸ் பாதுகாப்புடன் தான் அங்கு சென்றார்.
முகாமில் இராணுவத்துடனும் அவர் சண்டையிடவில்லை.எனினும் ஒருசாரார் இந்த காரணத்தை வைத்துக்கொண்டு தவறான வகையில் கருத்துக்களை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தமையே இத்தனைக்கும் காரணமாகும்.
வடக்கில் மட்டுமல்ல நாட்டில் எந்த பகுதியில் உள்ள இராணுவ முகாம்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் செல்லவேண்டும் என்றால் அல்லது வேறு அமைச்சர்கள் யாரேனும் செல்லவேண்டும் என்றால் முன்கூட்டியே பாதுகாப்பு அனுமதியை பெற்றால் அது ஆரோக்கியமான விடயமாக அமையும்.
அதேபோல் அவ்வாறு முன்கூட்டியே அறிவுறுத்தல் விடுத்தால் நாமும் பாதுகாப்பு சார் நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்களுக்கான தகவல்களை பெற்றுத்தரக்கூடிய ஆயத்தங்களையும் செய்துகொண்டுக்க முடியும்.
இந்த விடயங்கள் தொடர்பில் நாம் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் எடுத்துரைத்தோம். அவரும் எமது காரணங்களை ஏற்றுக்கொண்டார்.
எவ்வாறு இருப்பினும் இப்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன. அதேபோல் வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சில கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அவையும் உண்மைக்கு புறம்பான கருத்துகள் என்பதை கூறவேண்டும். நாம் நாட்டின் பாதுகாப்பில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
மீண்டும் புலிகள் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் இனவாதம் உச்சகட்டத்தில் உள்ளது. அதற்கும் இனி இடமளிக்க முடியாது.
எவ்வாறு இருப்பினும் வடக்கிலும் தெற்கிலும் தமது அரசியல் சுயலாபங்களை கருத்தில் கொண்டு மக்களை தூண்டிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றை மக்கள் கருத்தில்கொள்ள கூடாது என்றார்.