இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம் மீண்டும் வருவார்கள் என்பதுபோலவும், உலகம் நெருப்பால் மூடப்படும் அல்லது இந்த ஆண்டுடன் உலகம் அழியும் என்ற சிலரின் கற்பனை எதிர்வுகூறலைப் போன்றதே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்து.
பிரபாகரன் போன்ற ஒருவர் இனிமேல் தலைதூக்கவே முடியாது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். ஊடகங்களில் கூறுவதைப்போல வடக்கில் குற்றசெயல்கள் அதிகரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் கலந்துகொண்டிருந்த போதே வடமாகாண
ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களைப்போல் எவரும் யுத்த கஷ்டங்களை அனுபவித்திருக்க மாட்டார்கள். இழப்புகள் என்றால் என்ன, வலி என்பது என்ன என்பது பற்றி எம்மைவிடவும் அவர்களுக்கு அதிகம் தெரியும்.
அவ்வாறு இருக்கையில் மீண்டும் ஒருமுறை அவர்கள் யுத்தமொன்று வேண்டும் என்ற எண்ணத்துக்கு ஒருபோதும் வரப்போவதில்லை.
எனினும் அரசியல் வாதிகளுக்கு மீண்டும் மீண்டும் யுத்தம் ஒன்று தேவைப்படுகின்றது. தமது அரசியல் கொள்கைகள் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்றால், அதில் அவர்கள் குளிர்காய வேண்டும் என்றால் அவர்களுக்கு குழப்பம் அவசியமாகின்றது.
அதனால் தான் பிரபாகரன் மீண்டும் வருவார், நாட்டை பிரித்ததுத் தருவார் என்ற கற்பனைக் கதைகளையெல்லாம் கூறுகின்றனர்.
எவ்வாறு இருப்பினும் எதிர்வுகூறல்கள் பல இந்த உலகத்தில் உள்ளது. இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் உலகத்தை காப்பார் என்பதுபோலவும், நபிகள் வருவார் என்பது போலவும் அதேபோல் உலகம் நெருப்பால் மூடப்படும் அல்லது இந்த ஆண்டுடன் உலகம் அழியும் என்றெல்லாம் உலகில் பலர் எதிர்வுகூறி வருகின்றனர்.
அவ்வாறான ஒரு கற்பனை எதிர்வுகூறலைப் போன்றதே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்து.
இவர்களின் கருத்துகளையெல்லாம் உண்மைகள் என நம்பி அவர்களின் பின்னால் மக்கள் செல்லப் போவதில்லை. கூட்டம் சேர்க்கும் இவர்களின் தந்திரத்தை கண்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் இவர்கள் புலிகளை நினைவுகூர ஆட்களை சேர்க்கும் போதெல்லாம் மக்கள் அவர்களுடன் செல்வதில்லை. ஆகவே அவர்களின் அரசியல் கொள்கை அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மாற்றம் ஏற்படாது. வடக்கில் உள்ள ஒருசிலரின் செயற்பாடுகள் தெற்கின் இனவாதத்தை பலப்படுத்தும்.
அதேபோல் தெற்கில் உள்ள ஒருசிலரின் இனவாதம் வடக்கில் இனவாத கொள்கையை பலப்படுத்தும். ஆகவே அவற்றை ஊடகங்களும் பூதாகரமாக்கி விளம்பரத்தை அதிகரித்தவண்ணம் உள்ளன.