வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் நிர்வாண ஓட்டல் ஒன்றை விரைவில் துவங்க இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இயங்கிவரும் பிரபல உணவகம் தீர்மானித்துள்ளது.

தற்கால உணவுப் பழக்கத்துக்கும், சாப்பிடும் வழக்கத்துக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாகிவரும் இந்த ‘பன்யாடி’ ரெஸ்டாரண்ட்டில் மின்சாரம், நவீனகால பீங்கான் தட்டுகள், மேஜைகரண்டி மற்றும் முள்கரண்டிகள் போன்றவை இருக்காது.

மாறாக, மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், மரத்திலான பழங்காலமேஜை, நாற்காலிகளில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில், நவீன செயற்கை மசாலாக்களின் கலப்பில்லாத – இயற்கையான முறையில் விறகு அடுப்பில் சமைக்கப்பட்ட உணவு வகைகளே பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டலுக்குள் கைபேசிகளை கொண்டு செல்லவும், புகைப்படம் பிடிக்கவும் அனுமதி இல்லை. வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் ஆடைகளை களைந்து விடவேண்டும்.

கையில் அளிக்கப்படும் ஒரு சிறு டவலால் உடலை மூடியபடி சென்று தங்களது இருக்கையை அடைந்ததும், அவர்கள் அதையும் களைந்துவிட்டு, முழுநிர்வாணமாக அமர்ந்து தேவையான உணவு வகைகளுக்கு ஆர்டர் அளித்து, ருசித்தும், ரசித்தும் சாப்பிடலாம்.

ஒவ்வொரு மேஜைக்கும் இடையில் மூங்கில் மற்றும் பிரம்பினாலான தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆடைகளை களையாமல் வழக்கம்போல் சாப்பிட விரும்புபவர்களுக்கான தனிப்பகுதியும் இங்கு உண்டு.

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த ஓட்டல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டன் நகரின் எந்த பகுதியில்  இந்த ஓட்டல் அமைக்கப்படவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

எனினும், இதுதொடர்பான மேலும் அதிக தகவல்களை பெறவிரும்பி இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான லண்டன்வாசிகள் ஓட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply