உகண்டாவின் ஜனாதிபதியாக யொவினி முசவேனி (Yoweni Musaveni) மீண்டும் பதவியேற்றிருப்பது கடந்த வாரத்தில் இலங்கையர்களின் கவனத்தைப் பெற்ற ஒரு நிகழ்வாகிவிட்டது.
உகண்டாவின் ஜனாதிபதியாக இருப்பது யார் என்பதையிட்டு கவலைப்பட வேண்டிய தேவை இலங்கையர்களுக்கு இல்லைத்தான். ஆனால், இலங்கை அரசியலில் ஒரு சர்ச்சைக்குரியவராகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த பதவியேற்பு நிகழ்வுக்கு விஷேட விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தமைதான் பதவியேற்பு நிகழ்வு இலங்கையர்களின் கவனத்தைப் பெற்றுக்கொண்டிருந்தமைக்கு பிரதான காரணமாகும்.
உகண்டாவின் சர்வாதிகாரியாக ஐந்தவது தடவையாகவும் பதவியேற்கும் யொவினி முசவேனி, ராஜபக்ஷவை விஷேட விருந்தினராக அழைத்திருப்பதே சர்ச்சைக்குரிய ஒரு விடயம்தான்.
எதற்காக அவர் ராஜபக்ஷவை அழைத்தார் என்பதும் அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று. அதற்கு மேலாக பல சர்ச்சைகளை இது உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.
தன்னுடைய மகன் யோசித்த ராஜபக்ஷவையும் இந்த நிகழ்வுக்கு அழைத்துச்செல்ல அவர் எடுத்த முயற்சிக்கு நீதிமன்றம் தடை போட்டுவிட்டது.
இப்போது, இந்த நிகழ்வுக்கு ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் சென்று வந்ததற்கான செலவை யார் பொறுப்பேற்பது என்ற சர்ச்சை உருவாகியிருக்கின்றது.
ராஜபக்ஷவுக்கான business class விமானப் பயணச் சீட்டுக்கான பணத்தை (4,25,000) வெளிவிவகார அமைச்சே கொடுத்திருக்கின்றது.
ராஜபக்ஷவுக்கான விமானப்பயணச் சீட்டுக்கான செலவைத் தவிர ஏனைய செலவுகளைப் பொறுப்பேற்க வெளிவிவகார அமைச்சு மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.
தங்குமிடம் உட்பட ஏனைய செலவுகளையும் வெளிவிவகார அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என ராஜபக்ஷ தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளும் பயணங்களுக்கான செலவுகளை மட்டும் வெளிவிவகார அமைச்சு பொறுப்பேற்கும் வழக்கம் இருப்பதாகத் தெரிகின்றது.
மகிந்த ராஜபக்ஷவுடன் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றும் உகண்டா சென்றிருக்கின்றது. இந்தக் குழுவினர் நாளை கொழும்பு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்ச்சையை உருவாக்கிய பதவியேற்பு நிகழ்வு
ராஜபக்ஷ கலந்துகொண்ட முசவேனியின் பதவியேற்பு வைபவம் மிகவும் சர்ச்சைக்குரியதாக அமைந்தமைக்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மோசடிகளுடன் இடம்பெற்ற தேர்தலின் மூலமாகவே அவர் ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவானதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலேயே முசவேனி பதவியேற்றார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டன. எதிரணியினர் அணிதிரள்வதைத் தடுப்பதற்காக பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டன. ஊடகத்தணிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறான ஒரு நிலையிலேயே அவரது பதவியேற்பு இடம்பெற்றது.
31 இதனைவிட சூடானின் ஜனாதிபதி ஒமர் குஸைன் அல் பஷீர் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தமையும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது.
மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களுக்காக இவரைக் கைது செய்வதற்கான வாரன்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது அவர் மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான ஒருவர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதை எதிர்த்து அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய, கனடா நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த நிகழ்வைப் பகிஷ்கரித்தார்கள்.
இதனையிட்டு எந்தவகையிலும் கவலைப்படுபவராக முசவேனி இருக்கவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து அவர் நிகழ்த்திய உரைகூட சர்ச்சைக்குரியதாகவே இருந்தது.
மகிந்த – முசவேனி ஒற்றுமை என்ன?
உகண்டாவின் சர்வாதிகாரியான இடி அமீனை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய முசவேனி, ஒரு சர்வாதிகாரியாகவே உகண்டாவை ஆட்சி செய்து வருகின்றார்.
1986 இல் பதவிக்கு வந்த முசவேனி, 2001 இல் அரசியலமைப்பில் திருத்தம் ஒன்றைக்கொண்டுவந்தார். இதன்மூலம் ஜனாதிபதி ஒருவர் இரு பதவிக்காலத்துக்குத்தான் ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற சரத்து மாற்றப்பட்டது.
எத்தனை பதவிக்காலத்துக்கும் அதிகாரத்திலிருக்கலாம் என தனக்கேற்றவாறு அரசியலமைப்பை முசவேனி மாற்றிக்கொண்டார். இது 2010 ல் மகிந்த ராஜபக்ஷ தன்னுடைய பதவிக்காலத்தை நீடிப்பதற்காகக் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தத்தை ஒத்தது.
இதனைப் பயன்படுத்தி மூன்றாவது முறையாக அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றபோதுதான் 2015 ஜனவரி 8 ஆம் திகதி தேர்தலில் ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார்.
30தன்னுடைய பதவிக்காலத்தில், குறிப்பாக போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் சர்ச்சைக்குரிய உலகத் தலைவர்கள், குறிப்பாக சர்வாதிகாரிகள் என முத்திரை குத்தப்பட்டவர்களுடன் உறவுகளை நெருக்கமாக்குவதில் ராஜபக்ஷ அதிகளவு அக்கறை காட்டினார்.
அமெரிகா மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிராக இந்தத் தலைவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடும் அதற்குக் காரணம். அந்த வகையில்தான் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கேணல் கடாபியுடன் மகிந்தவின் உறவுகள் அமைந்திருந்தன.
இதனைவிட, மனித உரிமை மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் விவகாரத்தில் ஜெனீவாவில் இலங்கை எதிர்கொண்ட நெருக்கடிகளின் போதும் இந்த நாடுகளே தமக்குக் கை கொடுக்கும் என்பதையும் ராஜபக்ஷ உணர்ந்திருந்தார்.
தன்னுடைய பதவிக்காலத்தில் சர்வாதிகார நாடுகள் என மேற்கு நாடுகளால் ஒதுக்கப்பட்டிருந்த இது போன்ற நாடுகளுக்கு ராஜபக்ஷ விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பதுடன், அவற்றுடனான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும் அக்கறை காட்டினார்.
இலங்கைக்கு ஆதரவாக நின்ற உகண்டா அரசு
இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என மேற்கு நாடுகள் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கு இந்த நாடுகளின் தயவை அவர் நாடிச் சென்றார்.
ஜெனீவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டுவந்த போது இந்த நாடுகள்தான் இலங்கையுடன் நின்றன. உகண்டாவைப் பொறுத்தவரையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக அது இருந்துள்ளது.
உண்டாவின் தயவை மகிந்த நாடிய போது, அதனை விருப்பமுடன் முசவேனி ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் உள்ளது. சர்வதேச சமூகத்தின் முன்பாக ஊழல் மோசடிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருந்த உகண்டாவுக்கு நேச நாடுகள் சிலவற்றையாவது உருவாக்கிக்கொள்வது தேவையாக இருந்தது.
292012 மார்ச்சில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறவிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உகண்டாவுக்கு மேற்கொண்ட விஜயம்தான் இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தியது.
பீரிஸின் விஜயத்தைத் தொடர்ந்து உகண்டாவின் ஜனாதிபதி முசவேனி தன்னுடைய மனைவி சகிதம் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வந்தார்.
ராஜபக்ஷவுடனும் அவரது ஆட்சியாளர்களுடனும் பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவான அவர் மேற்கொண்டார். மகிந்தவும் முசவேனியும் ஒரே விதமான அக்கறையைக் கொண்டவர்கள் என இதன்போது இராஜதந்திர வட்டாரங்கள் விமர்சித்திருந்தன. இதனைத் தொடர்ந்து ராஜபக்ஷவும் உகண்டாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த உறவுகளின் உச்ச கட்டமாக உகண்டா தலைநகர் கம்பாலாவில் இலங்கைக்கான உயர் ஸதானிகராலயம் ஒன்றை ராஜபக்ஷ அமைத்தார்.
ஜெனீவாவில் உகண்டாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டே இந்த உயர் ஸ்தானிகராலயம் அமைக்கப்பட்டது.
2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த தூதரகத்தை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் ஆராயப்பட்டது. இதனை வைத்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பதுதான் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு
இந்தப் பின்னணியில்தான் மகிந்த ராஜபக்ஷவுக்கான அழைப்பு முசவேனியால் விடுக்கப்பட்டது.
– சபரி