கொழும்பு வடக்கை அச்சுறுத்தி வந்த பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவனான ஆமி சம்பத் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாக ஆமி சம்பத் இவ்வாறு விஷேட அதிரடிப்படையின் கட்டளை தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.கே.ஆர்.ஏ.பெரேரேவின் ஆலோசனைக்கு அமைய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஆமி சம்பத் எனப்படும் சாமர பொன்சேகா (35 வயது), அவருடன் கைது செய்யப்பட்ட அவரது மனைவி சஞ்ஜீவனீ ஜீவந்தி, ஆமி சம்பத்தின் உதவியாளரான 29 வயதுடைய பிரதீப் குமார சுதர்ஷன ஆகியோரே இவ்வாறு விஷேட அதிரடிப்படையினரால் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்ப்ட்டவர்களாவர்.
நேற்று முன் தினம் மாலை கொம்பனி வீதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனைக்கு தனது மனைவி, உதவியாளர் சகிதம் ஆமி சம்பத் வருகை தந்ததையடுத்து விஷேட அதிரடிப்படையின் உளவுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆமி சம்பத் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2015 பொதுத் தேர்தலின் போது கொட்டாஞ்ச்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்துடன் தொடர்பு உள்ளதாக ஆமி சம்பத் தொடர்பில் குற்றச் சாட்டு உள்ளது.
அத்துடன் அவரது எதிரி பாதாள உலகக் குழுவான தெமட்டகொட சமிந்தவை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தி கொல்ல முற்பட்டமை தொடரிலும் ஆமி சம்பத்தை பொலிஸார் தேடி வந்தனர்.
இதனை விட பல்வேறு கொள்ளை, கடத்தல், கொலை கப்பம் கோரல்களுடன் ஆமி சம்பத்துக்கு தொடர்பிருப்பதாகவும் போதைப் பொருள் வர்த்தகத்திலும் பங்கிருப்பதகவும் கூறப்படும் நிலையிலேயே அவை தொடர்பில் பூரணமாக விசாரணை செய்யும் பொறுப்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன்பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே நேற்று முன் தினம் கைதான ஆமி சம்பத், அவரது மனைவி மற்றும் உதவியாளரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெறுகின்றன.
நேற்று வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஆமி சம்பத்தின் கொட்டுகொட, ரஜவத்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 9 மில்லி மீற்றர் கைத்துப்பாக்கியொன்றும் 14 தோட்டாக்களும் 9 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஆமி சம்பத்திடம் தொடர் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அவனது தொலைபேசி, வங்கிக்கணக்கு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.