தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட்டு விலகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்றுமுன்தினம் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இரா.சம்பந்தன் இந்திய பத்திரிகையான த இந்துவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பங்கேற்றிருந்த கும்பமேளா நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்வையடுத்து இந்திய தலைவர்களையும் சந்தித்து சம்பந்தன் எம்.பி. கலந்துரையாடியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட பெரும்பாலான தமிழ் கட்சிகள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இணக்கப்பட்டிற்கு வந்துள்ளன.
அத்துடன், தற்போது இலங்கையில் புதிய அரசியல் சாசனமொன்றை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றது. இதன்போது தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதேவேளை, தமிழ் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 ஆவது வருட தினம் நேற்று முன்தினமாகும். அன்றைய தினமே இந்த செவ்வியினை சம்பந்தன் எம்.பி. வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
13 இற்குள் சமஷ்டியை திணிக்கவே இந்தியா முயற்சி!!: ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் அழைப்புக்கு காரணம் கூறுகிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
16-05-2016
பதின்மூன்றுக்குள் ”சமஷ்டியை” வழங்க வேண்டுமென்பதை திணிக்கவே ஜனாதிபதிக்கும் – சம்பந்தனுக்கும் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்தது என குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, ஜனாதிபதி இந்தியாவையும், பிரதமர் சீனாவையும் சமாளிக்கும் ”ராஜதந்திரத்தையே” அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பா அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டை பிரிக்கும் நிகழ்ச்சி நிரலிலிருந்து இன்னும் இந்தியா விடுபடவில்லை. அதனை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
13 ஆவது திருத்ததிலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை வடமாகாண சபைக்கு பெற்றுக் கொடுப்பதே இந்தியாவின் தேவையாகும்.
இதனூடாக சமஷ்டியை பெற்றுக் கொடுப்பதற்கான அடித்தளத்தை போட்டு பின்னர் படிப்படியாக தமிழீழம் உருவாகும். இதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும், இந்தியாவின் தேவையை திணிப்பதற்குமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனையும் ஒரே நேரத்தில் இந்தியாவிற்கு வரவழைத்தனர்.
இதன் மூலம் இந்தியாவின் தேவைகளை அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் இலங்கையில் நிலை நிறுத்திக் கொள்ளப்படும். சீனாவுடனான இலங்கையின் தொடர்புகளை இல்லாதொழித்து இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கப்படுகிறது.
அதேவேளை அரசாங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினூடாக சீனாவை சந்தோஷப்படுத்தும் அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடாக இந்தியாவை சந்தோசப்படுத்தும் ராஜதந்திரத்தை முன்னெடுக்கின்றது.
இந்த ராஜதந்திரம் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்காது என்றும் டாக்டர். வசந்த பண்டார தெரிவித்தார்.