தமிழக சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழ் மக்கள் குறித்த தேர்தல் உறுதிமொழியினை அக்கறையுடன் நிறைவேற்றுமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்வதாகவும் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை யின் முழுமையான வடிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மே மாதம் 16 நடைபெற்று முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியீட்டி மீண்டும் தமிழக முதல் அமைச்சராகப் பதவியேற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் நாம் நிறைவடைகிறோம்.

தேர்தலின் முன்னர் ஈழத் தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்த பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அவற்றைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கி, இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்குமாறு நாம் கோரியிருந்தோம்.

அந்த கோரிக்கைகள் பின்வருமாறு,

தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும்.

இலங்கை அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக் குற்றவியல் நீதீமன்றம் அல்லது அதற்கு நிகரான அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறையின் ஊடாக விசாரணைக்குட்படுத்தி, பரிகார நீதியின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களுக்குரிய நீதி வழங்கப்பட வேண்டும்.

தமிழ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழ் மக்களின் நலன்கள் அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் பேணப்படுவதை உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் விரும்பும் பட்சத்தில் இரட்டைக் குடியுரிமை நிலையும் (dual citizenship) ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

முதல்வர் ஜெயலிலதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையின் 40வது பகுதியில் ஈழத் தமிழ் மக்கள் குறித்து பின்வரும் உறுதிமொழியினை மக்கள் முன் வைத்திருந்தது.

இலங்கை தமிழர் இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கை தமிழர்கள் முழு சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதன் பயனாக அவர்கள் தங்கு தடையின்றி வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் உறுதி மொழி மூலம் தமிழீழ மக்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள அன்பையும் அக்கறையினையும் வெளிப்படுத்தியதோடு ஈழத் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தமக்கெனத் தனி அரசினை அமைத்திடுவதற்குத் தமிழகம் துணையாக நிற்கும் என்பதனையும் எடுத்துக் காட்டியது.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த தவணை ஆட்சியின் போது ஈழத் தமிழ் மக்களது நிலை குறித்து முக்கியமான தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதற்கு காரணமாக இருந்தவர். இந்த முறையும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் ஜெயலலிதா அவர்கள் அதே அக்கறையுடன் செயற்படுவார் என்பதே எமது எதிர்பார்ப்பு.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தீர்மானங்களையும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களையும் நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படுதல் அவசியமாகும்.

ஈழத் தமிழர் பிரச்சனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் வெறுமனே வெளியுறவுக் கொள்கை சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்க்கப் படாமல் அது தமிழ் நாட்டின் உணர்வுரீதீயிலான உள்நாட்டுப் பிரச்சனையும் கூட என்பதனை முதல்வர் அவர்கள் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பது எமது வேண்டுதல் ஆகும்.

கொழும்புவைத் திருப்திப்படுத்துவதா அல்லது சென்னையின் நிலைப்பாட்டை மதிப்பதா! எனும் கேள்விக்கு சென்னையின் நிலைப்பாட்டை மதிக்கும் தன்மையே மத்திய அரசிடம் மேலோங்கி நிற்கும் நிலையினை தமிழக மக்கள் சார்பில் ஏற்படுத்த வேண்டும். அதனைச் சாதிப்பற்குரிய துணிச்சலும் தமிழக மக்களின் அரசியல் பலமும் ஜெயலலிதா அவர்களிடம் உண்டு.

மீண்டும் பெருவெற்றியீட்டி சாதனை படைத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இவ் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார் எனும் நம்பிக்கையுடனும் தமிழக மக்களதும் தமிழகத்தினதும் மேம்பாட்டுக்கு உழைப்பார் என்ற எதிர்பார்ப்புடனும் அவருக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Share.
Leave A Reply