சிறிலங்காவில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா அனுப்பி வைத்த அவசர நிவாரண உதவிப்பொருட்களை ஏற்றிய ஐஎன்எஸ் சுனைனா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பலில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்களை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவிடம் முறைப்படி கையளித்தார்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் சித்ராங்கனி வகீஸ்வராவும் கலந்து கொண்டார்.
ஐஎன்எஸ் சுனைனா என்ற போர்க்கப்பலில், 25 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.
இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பியுள்ள இந்தியக் கடற்படையின் மற்றொரு கப்பலும் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்புக் குழுக்களையும் கொழும்புக்கு அனுப்பியது இந்தியா
21-05-2016
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிபுணர் குழுக்களையும் இந்தியா கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சுனைனா மற்றும் ஐஎன்எஸ் சுட்லேஜ் ஆகிய கப்பல்களிலும், இந்திய விமானப்படையின் சி-17 போக்குவரத்து விமானத்திலும் இந்தியா உதவிப் பொருட்களையும் மீட்பு அணிகளையும் அனுப்பியுள்ளது.
இரண்டு கப்பல்களும், 30தொடக்கம் 40 தொன் வரையான உதவிப் பொருட்களுடன் கொச்சியில் இருந்து சிறிலங்கா சென்றுள்ளன. இவை இன்று காலை கொழும்பைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், கூடாரங்கள், குடிநீர், மருந்துகள், உடுதுணிகள், மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
மேலும், மீட்புப்படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் சுழியோடிகளும் இந்தக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கையை அடுத்து, வியாழக்கிழமை இரவு இந்த உதவிப் பொருட்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 6 மணிநேரங்களில் இரண்டு கப்பல்களும் தயார்படுத்தப்பட்டன என்று இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண உதவிகளுக்கு இந்தியக் கடற்படை தயார் நிலையில் உள்ளது. அவசர கோரிக்கை விடுக்கப்பட்டால் அனுப்புவதற்காக, கொச்சியில், இந்தியக் கடற்படையின் இரண்டு டோனியர் விமானங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.