சிறந்த தனி மனித ஆளுமை என்பது வரலாறாக மாறும். சில இடங்களில் வரலாற்றையும் மாற்றும். இன்று ஒரு தனி மனித ஆளுமைதான் தமிழகத்தில் வரலாற்றை மாற்றி ஒரு புதிய சரித்திரத்தை படைத்துள்ளது.
விமர்சனங்கள், எதிர்மறை தாக்குதல்கள், அவமானங்கள் என எத்தனையோ இடர்பாடுகளை தாண்டி பலமான எதிரிகளுக்கு மத்தியில் ஒரு சாதாரண பெண் சரித்திர சாதனை படைப்பது என்பது எளிதான விடயமல்ல.
இன்று தமிழக முதல்வராக 6 ஆவது முறையாக அரியணை ஏறவுள்ள ஜெயலலிதா தனது வாழ்க்கையில் தாண்டிவந்த படிகற்கள் என்பது அத்தனை எளிதானது அல்ல. சிறுவயதில் இருந்து பல்வேறு சோதனைகளை தாண்டியே இந்நிலையை எட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் என்று அறியப்படும் ஜெயலலிதா பிறப்பில் ஒரு தமிழர் அல்ல. இன்றைய கர்நாடகா மைசூர் சமஸ்தானமாக இருந்த காலகட்டத்தில் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம்–வேதவல்லி இணை தம்பதிகளின் மகளாக1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பிறந்தார்.
அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-–பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தமையால், அவர் சென்னை வந்தார்.
சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில்’ தனது கல்வியை தொடர்ந்தார்.
தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா, சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.
ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். தனது 15 ஆவது வயதில் கல்வியை விட்டு தனது திரைவாழ்க்கையை ஆரம்பித்தார்.
அவர் இயக்குநர் ஸ்ரீ-தரின் “வெண்ணிற ஆடை” என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார்.
அதன் பிறகு, நடிகர் எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தம் பெரும் வெற்றிப்பெற்றதோடு தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக மாறினார். பின் 1980இல்வெளியான “நதியை தேடி வந்த கடல்” என் திரைப்படத்தோடு சினிமாவிலிருந்து விலகினார்.
1981-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மதுரையில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்த தீர்மானித்தார். அதை சிறப்பாக நடத்தி முடிக்கும் பொறுப்பை செய்தி விளம்பரத்துறை அமைச்சராக அப்போது இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார்.
அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன். அதன்பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து அதாவது 1982 ஜூனில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா.
அதன்பிறகு ஜூலை மாதம் சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது. அதற்காக ஜெயலலிதாவை பயன்படுத்தினார். ஜெயலலிதா மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த திட்டத்திற்கு நன்கொடையாக 40,000 ரூபாவை வழங்கினார்.
சத்துணவு திட்டத்தின் மீது ஜெ.க்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவருக்கு சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவிலும் இடம் கொடுத்தார்.
தொடர்ந்து இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர். 1983-இல் கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். இதன் பின்னர் தீவிரமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க.வுக்காக உழைக்க ஆரம்பித்தார். ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் அபார வரவேற்பு கொடுத்து அசத்தினர்.
எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் ஜெ.க்கு வழங்க ஆரம்பித்தனர்.
அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரசாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெ. எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான். ஜெ.விடம் இருந்த பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, ஹிந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டில்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசபா உறுப்பினராக்கினார்.
மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது.
இது ஏற்கனவே ஜெயலலிதாவின் வளர்ச்சியால் பொறுமிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் மேலும் பொறுமலை கிளப்பியது. கட்சியில் எத்தனையோ முக்கியஸ்தர்கள் இருக்கும்போது ஜெ.க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். என்ற புகைச்சலும் கிளம்பியது.
நேரடியாகவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்டினார் வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம். அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர். அவர் வசமிருந்த முக்கியத்துறைகளை பறித்துக்கொண்டு உணவுத்துறையை கொடுத்து அவரை டம்மியாக்கினார். அவரின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
இதற்கெல்லாம் காரணம் ஜெ.,தான் என்று நினைத்து மீண்டும் எஸ்.டி.சோமசுந்தரம் கட்சியையும், ஆட்சியையும் குறை சொன்னார். இதனால் மேலும் கோபமான எம்.ஜி.ஆர். எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெயலலிதாவை பற்றி எம்.ஜி.ஆரிடம் முறைப்பாடு செய்ய எவரும் முன்வரவில்லை. ஆனாலும், அவரின் அசுர வளர்ச்சி மற்றவர்களின் கண்ணை உறுத்தவே செய்தது.இந்நிலையில் எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றியது.
அதுவரை ஜெயலலிதாவை ஓரங்கட்ட நாள் பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு இது வாய்ப்பாக மாறியது. எம். ஜி. ஆர் தொடர்ந்து நோய் தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்த சமயத்தில் எம்.ஜி.ஆரை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜானகி, நெடுஞ்செழியன், போன்ற மிகச்சிலரே அவரின் பக்கத்தில் அனுமதிக்கப்பட்டனர். மறந்தும் கூட ஜெயலலிதாவை அனுமதிக்கவில்லை. இதேவேளை மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது தமிழக சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரிடம் தனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சிக்குள் ஜெயா அதிகாரம் செலுத்துவதில் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் யாரும் விரும்பவில்லை. பலத்த அதிருப்தியில் இருந்தனர். தங்களுடைய அதிருப்தியை எம்.ஜி.ஆரிடம் நேரடியாகச் சொல்லமுடியவில்லை.
தவித்தவர்களுக்கு இது தகுந்த சந்தர்ப்பமாக மாறியது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவைத் தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்பக்கூடாது. ஜெயலலிதாவிற்கு வாய்ப்பே கொடுக்கக்கூடாது ஓரங்கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். அதன் எதிரொலியாக ஜெயலலிதா பிரசாரம் செய்யமாட்டார் என பத்திரிகையில் செய்தி வெளியிட்டனர்.
எம்.ஜி.ஆர் நோயுடன் போராடிக்கொண்டு அமெரிக்காவில் இருந்த நிலையில், பிரசாரத்துக்கு அழையா விருந்தாளியாக, தனியாளாக ஜெயா புறப்பட்டார். தன்னை வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கிறார்கள் என்பது தெரிந்ததும் அதனை உடைத்துக்கொண்டு 1984 டிசம்பர் 3ஆம் திகதி ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா தன் பிரசாரத்தை எம்.ஜி.ஆருக்காக தொடங்கினார்.
தொடர்ந்து பல மாவட்டங்களிலும் இருபத்தியோரு நாட்களுக்குப் பிரசாரம் செய்தார். எதிர்க்கட்சிகள் எம்.ஜி.ஆரின் உடல் நிலை தொடர்பில் தெரிவித்து வந்த எதிர்மறை கருத்துக்களை உடைத்தெறிந்தார். வாக்காளர்களிடம் கேள்வி கேட்டுப் பதில் பெறும் வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டார். இதைத்தான் அ.தி.மு.க. தொண்டர்களும் எதிர்பார்த்தனர். அவர்களும் உற்சாகத்துடன் ஜெயலலிதாவை செல்லுமிடமெல்லாம் வரவேற்றனர்.
எம்.ஜி.ஆர். களத்தில் இறங்காத குறையை ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா ஈடுகட்டியதாகப் பத்திரிகைகள் புகழ்ந்தன.
அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு அபார வெற்றி. 153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.,விற்கு 132 தொகுதிகள் கிடைத்தன. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு 62 இடங்கள் கிடைத்தன.
இந்தத் தேர்தலில் தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். ஜெயலலிதாவாலும், அ.தி.மு.க. தொண்டர்களாலும் மறக்கமுடியாத பிரசாரமாக அது மாறியது. அப்போது அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவிற்கென்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள் என்று ஒரு குழு உருவாக ஆரம்பித்தது.
சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
அந்த நேரத்தில், ஜெயலலிதா தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். தன் மீது பொறாமைப்படுகிறார் என்றும், இனி அவரால் முதல்வராக இயங்க முடியாதென்றும், அதனால் என்னை முதல்வராக்குங்கள் என்றும் பிரதமர் ராஜீவிற்கு தன் கைப்படவே ஒரு கடிதம் எழுதியதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
இதனை ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தினர். எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் இந்த விடயத்தை பக்குவமாக அவரின் காதிற்கு கொண்டு சென்றனர்.
இதைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கு சென்ற எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை கட்சியிலிருந்தும் நீக்குவதற்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
ஆனால், உடனே கட்சியில் இருந்து நீக்கினால் பிரச்சினை ஏற்படக் கூடும் என அமைச்சர்கள் சிலர் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை வழங்கியமையால் ஜெயாவை நீக்கும் முடிவு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே எம்.ஜி.ஆர். மரணமடைந்து விட்டார்.
அந்த நேரம் தான் ஒரு வரலாற்று சம்பவம் நடைபெற்றது. அப்போது இறுதிவரை எம்.ஜி.ஆரின் பூத உடலுக்கு அருகே இருந்த ஜெயலலிதா எல்லோராலும் கவனிக்கப்பட்டார்.
ஆனால், எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் அவர் ஏறியபோது கே.பி.ராமலிங்கத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய அவமானமாக அமைந்த போதிலும் ஜெயலலிதா பிணவண்டியிலிருந்து இழுத்து வீசப்பட்ட காட்சியை தமிழகத்தின் ஆறு கோடி மக்களும் அனுதாபமாக தொலைக்காட்சியில் பார்த்தார்கள்.
இது அவமானத்தை விட மக்களிடம் அவருக்கு அனுதாபத்தை பெற்றுக்கொடுத்தது.
எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து அரசு நிர்வாகத்தை கவனிக்க நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.
தானே முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவதாக நெடுஞ்செழியன் அறிவித்தாலும், அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை முதலமைச்சராக்கப்போவதாக அவர் அறிவித்தார்.
இதனால், அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுடன் இணைந்தார்.
நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ரூட்டி ராமச்சந்திரன் போன்ற ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அண்ணா.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயாவை தேர்ந்தெடுத்தனர்.
இதை ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களில் 98 பேர் ஜானகிக்கு ஆதரவாகவும், 29 பேர் ஜெயாவிற்கு ஆதரவாகவும் இருந்தனர்.
1988 ஜனவரியில் ஜானகி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இரு அணிகளில் ஜானகிக்கு ஆதரவு அதிகமிருந்தாலும் மைனாரிட்டி ஜானகி அரசாகவே அது இருந்தது.
3 வாரத்திற்குள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கத்தவறினால் ஆட்சி கலைக்கப்படும் நிலையே இருந்தது..62 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் ஆதரித்தால் போதும். ஆட்சி பிழைத்துக்கொள்ளும் என்ற நிலை இருந்தது.
ஆனால் காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை. வேறுவழியின்றி தி.மு.க.வின் 20 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ேடார் இறங்கினர்.
அ.தி.மு.க.வின் எந்த பிரிவையும் ஆதரிக்கப்போவதில்லை என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் ஆதரவு தரமுடியாது என்று கை விரித்து விட்டார் கலைஞர் கருணாநிதி.
ஜனவரி 28 அன்று சட்டமன்றம் கூடியதும் ஜானகி- ஜெயா அணிகளுக்கிடையே பெரும் கலவரம் வெடித்தது. ஒலிபெருக்கிகள் உடைக்கப்பட்டன.
பல எம்.எல்.ஏ.க்களின் மண்டை உடைந்து இரத்தம் ஓடியது. கட்சி மாறி வாக்களித்ததால் கட்சி கட்டுப்பாட்டை மீறிய 33 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். ஜானகி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் அறிவித்தார்.
ஆனால், சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக கூறி ஜானகி ஆட்சி வெறும் 24 நாட்களில் கலைக்கப்பட்டது அதன் பின் ஒரு வருடம் ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமுலில் இருந்தது.
1989 ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும், ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது.
இந்த தேர்தல் முடிவில் தி.மு.க. 13 வருட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகியம்மாள் தோல்வியை தழுவினார். அதே நேரம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 33,191 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இந்த தேர்த்ல் தோல்விக்கு பொறுப்பேற்று ஜானகி, தனது பிரிவை ஜெயலலிதா அணியுடன் இணைத்துவிட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கினார். அதன் பிறகே ஒருங்கிணைந்த அண்ணா.தி.மு.க. வின் பொது செயலாளராக ஜெயலலிதா ஆனார். இரட்டை இலை சின்னமும் ஜெயாவிற்கு கிடைத்தது.
இக்காலப்பகுதியில் தமிழக சட்டசபையின் முதல் எதிர்க்கட்சி பெண் தலைமை எனும் பெருமையை ஜெயலலிதா பெற்றார். ஆனால் தி.மு.க. அட்சி பீடத்தில் இருந்த சட்டசபை அவர் பெண் என்பதனால் அங்கீகரிப்பதற்கு பதிலாக அசிங்கப்படுத்தியது. சட்டசபையில் ஜெயலலிதாவின் ஆடைகளை கிழித்து மானபங்கம் ஏற்படுத்தினர்.
சட்டசபையிலிருந்து தலைவிரி கோலத்துடன் வெளியேறிய ஜெயலலிதா மீண்டும் முதல்வராக மட்டுமே இந்த சட்டசபைக்குள் நுழைவேன் என்ற சபதத்துடன் வெளியேறினார்.
அது போலவே 1991 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக சட்டசபைக்குள் நுழைந்தார். கருணாாநிதி என்ற ஒரு மிகப்பெரிய தலைவரை தனியாளாக நின்று ஜெயிப்பது என்பது அத்தனை எளிதல்ல. ஜெயலலிதா ஜெயித்தார். இதுதான் அவரது ஆளுமை.
ஆனால் துரதிஷ்ட வசமாக அவரது முதலாவது முதல்வர் பருவம் ஆரோக்கியமான அரசியலாக அவருக்கு மாறவில்லை. மாறாக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமந்து கொண்டு பதவியை அடுத்த தேர்தலில் இழந்தார். ஆனால் 2002, 2011, 2014, 2015 என தொடர்ந்து தேர்தலில் வெற்றிப்பெற்று முதல்வராகினார்.
2014 ஆம் ஆண்டு சொத்துகுவிப்பு வழக்கில் அவருக்கு சிறைத்தண்டணை வழங்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்தார்.
இத்தோடு அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக விமர்சனம் வந்தது. ஆனால் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால் அவர் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு மிகபெரிய வெற்றிப்பெற்று சட்டசபை உறுப்பினராக தெரிவானதோடு மீண்டும் முதல்வராகினார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த 15 ஆவது தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தனித்து போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் அவர் தோல்வியை தழுவுவார் என்று பல கருத்து கணிப்புகள் கூறின. தமிழகத்தை கடந்த வருடம் புரட்டிப்போட்ட வெள்ள பாதிப்பு, தமிழகத்தில் இம்முறை களமிறங்கிய 6 முனை போட்டியென்பன அ.தி.மு.க.வை சாய்த்து விடும் என்று பலரும் ஆருடம் கூறினர்.
அவரது விசுவாசியான ஓ. பன்னீர் செல்வம் கூட அவருக்கு எதிராக யாகங்கள் நடத்தியதாக கூறப்பட்டது. தி.மு.க. கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, மக்கள் நலக் கூட்டணியில் வைகோ, பிரேமலதா, திருமா போன்ற பலமான தலைமைகள் பிரசாரத்தில் இறங்கினர். ஆனால் அ.தி.மு.க.வில் பிரசாரம் செய்ய கூட ஆள் இல்லை. ஜெயலலிதா மட்டுமே உள்ளார்.
அதுவும் அவர் மக்களை சந்திப்பதில்லை. இந்நிலையில் அவர் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்து ஆட்சியை பிடிக்க முடியுமா என பலமான விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்கள், டி.வி, விளம்பரங்கள் என்பன அ.தி.மு.க வுக்கு எதிராக இருந்தன. ஆனால் அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி மீண்டும் அரியணை ஏறியிருக்கிறார் ஜெ.
தமிழக மக்களின் அம்மா என்று தன்னைத் தானே கூறுகிறார். பணத்தை வாரி இறைத்து விட்டார், இலவசங்கள் அறிவித்து ஊழல் செய்கிறார் என்று தொடர்ந்தும் இவருக்கு எதிராக விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.
அப்படி கூறிய ஒருவராலும் பணத்தை தாண்டி மக்கள் மனதை வெல்ல முடியவில்லை என்று தேர்தல்முடிவு கூறிவிட்டது .
உண்மையில் அரசியலுக்கு வரும் எல்லோரும் காமராஜராக இருப்பதில்லை. ஆர்வக்கோளாரில் ஆரம்பகாலத்தில் ஜெயலலிதா ஏதேனும் தவறு இழைத்து இருக்கலாம்.
அது உண்மையா பொய்யா என்பதை சட்டம் பார்த்துக்கொள்ளும். ஆனால் அவரை மக்கள் மக்களின் முதல்வராக ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
அவருக்கு முன்பு இன்று பல சவால்கள் உள்ளன. தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஒரு பலமான எதிர்க்கட்சி அமைந்துள்ளது. இதுவே ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய சவால்தான். பார்க்கலாம் தொடர்ந்து ஜெ. எப்படி ஜெயிப்பார் என்று.
எது எவ்வாறாயினும் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு மறுபடியும் ஆட்சிக்கு வந்தது எம்.ஜி.ஆரினால் மட்டுமே நடத்த முடிந்த சாதனை என்று கூறப்பட்டதை தற்போது ஜெ. முறியடித்துள்ளார். இது நிச்சயமாக சாதாரண விடயம் அல்ல. ஜெயலலிதா என்ற ஆளுமையின் அசாத்தி யமான திறமையே.
-குமார் கருணா-