கடந்த வார இறுதியில் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத்திறந்த மடலில், போர்க் காலத்தில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.
போர் மீறல்கள் தொடர்பாக மகிந்த மீது மங்கள குற்றம் சுமத்தியிருந்த வேளையில், மகிந்த உகண்டாவிற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்தார்.
உகண்டா அதிபர் ஜோவெரி முசவேனியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே மகிந்த உகண்டா சென்றிருந்தார். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் குற்றம் சுமத்தப்பட்ட சூடான் நாட்டின் அதிபர் ஒமார் அல் பசிரும் இப்பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டமை இங்கு முக்கியதொரு விடயமாகும்.
சூடானிய அதிபர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதால், இதில் ஏற்கனவே கலந்து கொண்டிருந்த மேற்குலக நாடுகளுக்கான தூதுவர்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து எழுந்து சென்றனர்.
சூடானிய அதிபருக்கு எதிராக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றானது பிடியாணை பிறப்பித்திருந்தமையே இதற்கான காரணமாகும்.
சூடானிய அதிபர் உகண்டா அதிபரின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட வேளையில், உகண்டா அதிபர் அவரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதன் போது, அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வெளிநாட்டுத் தலைவர்களுடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
உகண்டா அதிபரின் பதவிப் பிரமாண நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு சூடானிய அதிபருக்கு முன்மரியாதை செய்வதற்கான விமானச் சீட்டுக்களை மங்களவே வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மறுபுறம் நோக்குமிடத்து, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்காவின் தற்போதைய அதிபருக்கு உகண்டா எவ்வித அழைப்பும் விடாது மாறாக முன்னாள் அதிபரான மகிந்தவுக்கு அழைப்பு விடுத்த போது இது தொடர்பாக மங்கள அமைதி காத்தமைக்கான காரணம் என்ன?
மகிந்தவிற்கு மங்களவால் விடுக்கப்பட்ட திறந்த மடலில் குறிப்பிடப்பட்டிருந்த போர்க்குற்றங்கள் தொடர்பான மங்களவின் கோட்பாடுகள் இங்கு முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.
இந்த மடலில் மங்கள போர்க்குற்றங்களுக்கு எதிரான விடயங்களைக் குறிப்பிட்டிருந்த அதேவேளையில், மறுபுறத்தே, போர்க் குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்ட மகிந்தவை போர்க்குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்ற உகண்டாவிற்குப் பயணம் செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் வெளியுறவு அமைச்சின் மூலம் மங்கள வழங்கியிருந்தார்.
உகண்டாவிற்குப் பயணம் செய்வது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் வழங்குமாறு ஏன் மகிந்த, வெளியுறவு அமைச்சிடம் கோரியிருந்தார் என்பதே இங்கு கேள்விக்குறியாகும்.
இதன் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே உகண்டா அதிபரின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதாகக் காண்பிப்பதற்காகவே மகிந்த, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் ஆதரவை நாடியிருப்பார்.
மகிந்த, சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தால், உகண்டா அரசாங்கத்தின் பதவிப் பிரமாண நிகழ்விற்கான அழைப்பிதழானது சிறிலங்கா அரசாங்கத்திற்கே அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
இதன் பின்னரே சிறிலங்கா அரசாங்கத்தால் மகிந்த தெரிவு செய்திருக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவேயில்லை.
உகண்டா அதிபரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை மகிந்த தனிப்பட்ட ரீதியாகவே பெற்றிருந்தார். மறுபுறத்தே, உகண்டாவிற்கான தனது பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு மங்களவிடம் மகிந்த கோரியபோது, இவ்வாறானதொரு அழைப்பிதழை வெளிவிவகார அமைச்சுப் பெறவில்லை என மங்கள, மகிந்தவிடம் கூறியிருக்க வேண்டும்.
வெளிவிவகார அமைச்சின் தவறு:
எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தவறின் காரணமாகவே உகண்டா அதிபரின் பதவிப் பிரமாண நிகழ்விற்கான அழைப்பிதழை மகிந்த பெற்றிருந்தார் என அமைச்சின் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏனைய நாடுகளைப் போலவே, உகண்டா அதிபர் பதவியேற்ற போது, சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரி நாட்டின் தலைவர் என்ற வகையில் தனது ஆசிச் செய்தியை உகண்டாவின் புதிய அதிபருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
உகண்டாவின் அதிபர் சர்வதிகாரியா அல்லது இல்லையா என்பதெல்லாம் இதன் பின்னர் தான் பார்க்க வேண்டும். வெளிவிவகார அமைச்சே இந்த விடயத்தை சிறிலங்கா அதிபர் செயலகத்துடன் தொடர்பு கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்.
எனினும் இந்த விடயம் தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சகமானது சிறிலங்காவின் அதிபர் செயலகத்திற்கு எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை.
வெளிவிவகார அமைச்சு புதிய அதிபருக்கான ஆசிச் செய்தியை அனுப்புவது வழக்கமாகும். சிறிலங்கா அதிபரிடமிருந்து எவ்வித ஆசிச் செய்தியையும் பெறவில்லை என்பதால் கோபமுற்ற உகண்டா அதிபர், சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழைப்பிதழை வழங்காது இதற்குப் பதிலாக மகிந்தவிற்கு அழைப்பிதழை அனுப்பியிருந்தார்.
மகிந்த அரசாங்கத்தால் மங்களவின் வெளிவிவகார அமைச்சுப் பதவி பறிமுதல் செய்யப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பின் கல்விப் பிரிவுக்கான ஆலோசகராக சந்திரிக்காவை நியமிப்பது என்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைக்கு மங்கள ஆதரவு வழங்கிய போது அதனை மகிந்த எதிர்த்தார்.
சந்திரிக்கா இவ்வாறானதொரு பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு எதிராக மகிந்தவால் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. மகிந்தவின் இந்தச் செயற்பாட்டை மங்கள எதிர்த்து நின்றார்.
இதுவே இவரது வெளிவிவகார அமைச்சர் பதவி மகிந்தவின் காலத்தில் பறிக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாகும்.
யுனெஸ்கோவின் ஆலோசகராக சந்திரிக்காவை நியமிப்பதற்கு முயற்சித்ததால் தனது வெளிவிவகார அமைச்சர் பதவியை இழந்த மங்கள, மகிந்த தற்போது உகண்டாவிற்குப் பயணிப்பதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கான காரணம் என்ன?
மங்கள முன்னர் ஒரு தடவை மகிந்தவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் தொடர்பான இரகசியங்களை வெளியிட்டிருந்தார். இதேபோன்று மகிந்தவின் உறவினரான ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கவின் ஆயுதக் கையாடல்கள் தொடர்பான தகவல்களையும் மங்கள் முன்னர் வெளியிட்டிருந்தார்.
மகிந்த வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளைக் கொண்டுள்ளார் எனக் கூறிய மங்கள தற்போது உகண்டாவிற்கு மகிந்த பயணிப்பதற்கான விமானச் சீட்டுக்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அத்துடன் ஆயுதக் கையாடல்கள் தொடர்பாக மங்களவால் ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்ட உதயங்கவின் கடவுச்சீட்டையும் மங்களவின் வெளிவிவகார அமைச்சு வழங்கியுள்ளது.
ஆகவே, மகிந்தவை மங்கள பரிகசிக்கிறாரா அல்லது மங்களவை மகிந்த பரிகசிக்கிறாரா என்பது எமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம் – சிலோன் ருடே
மொழியாக்கம் – நித்தியபாரதி