ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் நேரத்தில் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க சிவில் உடையில் குறிப்பிட்ட இடத்தில் இருந்ததாக விசாரணைகளில் சாட்சியங்கள் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர தெரிவித்தார். முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
அநுர சேனாநாயக்கவை வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டியமை, சாட்சியங்களை அளித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் நேற்று பிற்பகல் கைது செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அவரை கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரீஸ் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்திய போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
2012 மே 17 ஆம் திகதி அதிகாலை வேளையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலிக்கா மைதான மதிலில் மோதிய நிலையில் எரிந்து கொண்டிருந்த தனது காருக்குள் இருந்து வஸீம் தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை கடந்த 2015 பெப்ரவரி 28 முதல் குற்றப்புலனாய்வுப் பிரிவின் மனித படுகொலைகள் தொடர்பிலான விசாரணை பிரிவு முன்னெடுத்துள்ளது.
அதன் படி நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்போதைய நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சரத் சந்திர நீதிமன்றுக்கு இரகசிய வாக்குமூலம் ஒன்றினையும் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் மூன்று நாட்களாக தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அநுர சேனாநாயக்க நேற்று பிற்பகல் குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு குழுவால் கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை வாக்குமூலம் வழங்க புலனாய்வு பிரிவுக்கு சென்ற அவரை பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யு.விக்கிரமசேகர உள்ளிட்ட குழுவினர் கைது செய்தனர்.
இதனையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் புலனாய்வு பிரிவு சிறப்பு வேன் வண்டியில் சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
கறுப்பு கோட் அணிந்து கறுப்பு நிற கண்ணாடி ஒன்றிணையும் அணிந்த நிலையில் வேனில் இருந்து இறங்கிய அநுர சேனாநாயக்க குற்றப் புலனாய்வு பிரிவில் சிறப்பு குழுவினரால் புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்ற அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன் போது அநுர சேனாநாயக்க தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி கோட்டுக்குள் மறைத்துக் கொண்டார்.
இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
குற்றப்புலனாய்வு பிரிவு சார்பாக மன்றில் பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசேகர, மனித படுகொலைகள் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விமலசிறி ரவீந்திர, கூட்டுக் கொள்ளை தொடர்பான விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா உப பொலிஸ் பரிசோதகர் பிரேம திலக்க உள்ளிட்டோர் மன்றில் ஆஜராகினர். சந்தேக நபரான அநுர சேனாநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தலைமையிலான குழுவினர் ஆஜராகியிருந்தனர்.
இதன் போது பீ அறிக்கையை முன்வைத்த பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர பின்வருமாறு நீதிவானிடம் கருத்துக்களை முன்வைத்தார்.
” நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் போக்குவரத்து பொறுப்பதிகாரி, குற்றவியல் பொறுப்பதிகாரி ஆகியோரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பலனாக வஸீம் தாஜுதீன் விவகாரத்தை விபத்தாக காட்டி விசாரணைகளை மேற்கொள்ள இந்த சந்தேக நபர் உத்தரவு பிறப்பித்துள்ளமை உறுதியாகிறது.
இது தொடர்பில் சந்தேக நபரிடம் கடந்த 3 நாட்களாக விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம். வஸீம் தாஜுதீன் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை, சாட்சிகளை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை இவர் மீது நாம் சுமத்த எதிர்பார்க்கிறோம்.
அதனால் விசாரணைகள் தொடரும் நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க நாம் கோருகிறோம்.
விசேடமாக சந்தேக நபர் கைது செய்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விளக்கமறியலில் உள்ளதால் மறியலில் அவருக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்கவும் கோருகிறோம் ” என்றார்.
இதனையடுத்து சந்தேக நபரான அநுர சேனாநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தனது வாதங்களை முன்வைத்தார்.
” எனது சேவை பெறுநர் மீது குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையில் 296, 198, 189 உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் புலனாய்வு பிரிவினரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.
எது எப்படியோ சந்தேக நபருக்கு எதிராக இந்த வழக்கை பொறுத்தவரை புலனாய்வு பிரிவினர் கூறும் காரணங்களுக்கு அமைய குற்றவியல் சட்டத்தின் 296ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்க முடியாது.
சந்தேக நபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு இல்லாத நிலையில் அதனை நியாயப்படுத்தவும் முடியாது. அவ்வாறு புலனாய்வு பிரிவு முன்வைப்பதானது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயற்பாடாகும்.
எனது சேவை பெறுநருக்கு எதிராக கொலை என நம்பப்படும் விடயத்தை விபத்தாக கருதி விசாரணை செய்ய ஆலோசனை வழங்கியமையே புலனாய்வு பிரிவினர் கூறும் குற்றச்சாட்டாகும். இதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனினும் அப்படியே அவர் அதனை செய்திருந்தாலும் கூட குற்றவியல் சட்டத்தின் 296 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்த முடியாது.
அது தொடர்பில் 198ஆவது பிரிவின் கீழ் ஆராயலாம். அரசியல் அமைப்பின் 13ஆவது சரத்தில் கைது, தடுத்து வைத்தல் மற்றும் விளக்கமறியல் ஆகியன சட்டரீதியாக அமைதல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இங்கு சதி முயற்சி என்ற குற்றச்சாட்டு 198 ஆவது பிரிவின் கீழேயே ஆராயப்பட வேண்டும் அதனை 296 ஆவது பிரிவுக்குள் எடுக்கவே முடியாது.
198 ஆவது பிரிவானது நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஒருவரால் பிணை வழங்க முடியுமான குற்றச்சாட்டுக்களை கொண்டது. எனவே சந்தேக நபருக்கு பிணை வழங்க இந்த நீதிமன்றுக்கு பூரண அதிகாரம் உள்ளது என்பதே எமது வாதமாகும்.
113ஆவது பிரிவில் நீதிவான் ஒருவருக்கு பிணை வழங்க ஏதுவான பிரிவு 198க்குள் அடங்கும் குற்றங்கள் தொடர்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனை, ஆயுள் தண்டனை ஆகிய தண்டணைகளை பெறத்தக்க குற்றம் ஒன்று தொடர்பில் அல்லாது ஏனைய விடயங்கள் தொடர்பில் பிணை வழங்குவது தொடர்பில் எந்த ஆட்சேபனமும் இல்லை.
இந்நிலையில் புலனாய்வு பிரிவு 296ஆவது பிரிவின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக குற்றம் சுமத்துகின்றமை எந்த அடிப்படையில் நியாயமானது என எனக்கு தெரியாது.
ஒருவேளை எனது சேவை பெறுநர் இந்த சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்படின் அவருக்கு அதிகபட்சமாக ஏழு வருட சிறைத் தண்டனையையே வழங்க முடியும்.
அதனால் 113ஆவது பிரிவின் கீழ் சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கு இந்த மன்றுக்கு எந்த தடையும் இல்லை. சந்தேக நபர் புலனாய்வு பிரிவு கோரிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அங்கு வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.
அதனால் அவர் நீதிமன்றை புறக்கணிப்பார் என்ற சந்தேகம் தேவையற்றது. அத்துடன் இப்பொழுது இந்த சந்தேக நபர் அதிகாரமற்ற ஒரு செல்லாக்காசு. அவரால் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும் என நம்பவும் முடியாது.
அதனால் சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு தாழ்மையாக இந்த மன்றை கோருகிறேன்” என்றார்.
இதனையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர பின்வருமாறு வாதிட்டார். இந்த சம்பவமானது அதிகாலை 12.17 மணிக்கும் அதிகாலை 5.00 மணிக்கும் இடையிலே பதிவாகியிருக்கிறது.
அந்த நேர இடைவெளிக்குட்பட்ட அதிகாலை 2.45 முதல் 3.00 மணி வரை சந்தேக நபரான இந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சிவில் உடையில் வேறு ஒரு காரில் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அதனை கண்ணால் கண்ட சாட்சியம் இருக்கிறது.
இது தொடர்பில் தவறான பதிவை இடுவதற்கு நாரஹேன்பிட்டி முன்னாள் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரிக்கும் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரிக்கும் சந்தேக நபர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்துக்கு மறுநாள் கிருலப்பனையில் வைத்து வஸீம் தாஜுதீனின் பணப்பை கிடைத்தும் அது தொடர்பில் விசாரணை செய்ய சந்தேக நபர் தவறிவிட்டார்.
வஸீம் தாஜுதீனின் தந்தையிடம் இது ஒரு விபத்து இது தொடர்பில் மேலதிக விசாரணை தேவையற்றது என தனது அலுவலகத்தில் வைத்து தெரிவித்துள்ள சந்தேக நபர் இறுதியாக வெறி சொரி என கூறி விசாரணையை மூடி மறைக்க ஒத்தாசை வழங்கியுள்ளார்.
சந்தேக நபருக்கு பிணை வழங்குவதால் சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தற்போதும் அவ்வாறு அச்சுறுத்தல் உள்ளது.
முழு நாடும் சர்வதேசமும் இந்த வழக்கை உற்று நோக்கியுள்ள நிலையில் பிணை வழங்குவதால் பொது மக்களிடையே குழப்பம் ஏற்படலாம். எனவே சந்தேக நபருக்கு பிணை வழங்க கூடாது என்றார்.
இதனையடுத்து சந்தேக நபரின் சட்டத்தரணியான அனில் சில்வா அதற்கு ஆட்சேபனம் வெளியிட்டார். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் வாதிகளின் தேவைக்காக அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் குழப்பப்படுவார்களே தவிர வேறு ஏதும் காரணங்கள் இல்லை. இதனை நாம் இப்போதே அவதானிக்கின்றோம். இது ஒரு பழி வாங்கல் நடவடிக்கை என்றார்.
இதனையடுத்து நீதிவான் நிஸாந்த பீரிஸ் தனது முடிவை அறிவித்தார்.
முன் வைக்கப்பட்ட அனைத்து காரணிகள் தொடர்பிலும் எனது அவதானத்தை நான் செலுத்துகிரேன். சந்தேக நபரின் சட்டத்தரணி முன்வைத்த சட்ட ரீதியிலான தர்க்கங்களை கவனத்தில்கொள்கிறேன்.
அதே சமயம் சந்தேக நபர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முன்வைக்கும் விடயங்களும் மிக முக்கியமானவை.
எனவே சந்தேக நபர் தொடர்பில் முன் வைக்கப்பட்ட பினைக் கோரிக்கையை நான் நிராகரிக்கிறேன். அதன்படி அவரை எதிர்வரும் மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கிறேன்.
சந்தேக நபருக்கு சிறையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும், வைத்தியர் ஒருவர் முன் ஆஜர்படுத்தி தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன் என தெரிவித்த நீதிவான் நிஸாந்த பீரிஸ் வழக்கை 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அனுர சேனநாயக்க வெலிக்கடை விளக்கமறியல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.