‘காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே அதை தட்டி கேக்க
உன்னை விட்டால் யாரும் இல்லையே’
கடந்த சில நாட்களாக சமந்தா இவ்வாறான பாடல்களைதான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாராம். என்னவென்று விசாரித்து பார்த்ததால் சமந்தா திருமணத்துக்கு தயாராகிவிட்டார் என்கிறார்கள்.
காதலில் விழுந்துள்ளதாக அவ்வப்போது வெளியாகிய செய்தியை தொடராக மறுத்து வந்த சமந்தா, தற்போது தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தனக்கு காதல் வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
சமந்தா அளித்த பேட்டியின் விவரம்,
கேள்வி:– யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?
பதில்:– காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன்.
கேள்வி:– திருமண திகதியை முடிவு செய்து விட்டீர்களா?
பதில்:- அது இன்னும் இல்லை. ஆனால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன்.
கேள்வி:– ஒரு இளம் கதாநாயகனை நீங்கள் காதலிப்பதாக கிசுகிசு வந்துள்ளதே? உண்மையா?
பதில்:- உண்மைதான். எனக்கு காதல் வந்து இருக்கிறது. அவரை திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன்.
கேள்வி:- உங்கள் வாழ்க்கையில் வந்த அந்த நிஜ கதாநாயகன் யார்? அவரை உங்களுக்கு பிடித்துப்போக என்ன காரணம்?
பதில்:- அவர் யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன். திருமண திகதியை அறிவிக்கும்போது சொல்வேன். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். நான் விளையாட்டுப் பிள்ளைமாதிரி இருப்பேன்.
எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவேன். கோபம் வந்தாலும், சந்தோஷப்பட்டாலும் அதன் எல்லைக்கே போவேன். எப்படி பேச வேண்டும். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.
ஆனால், நான் காதலிப்பவர் அதற்கு நேர்மாறானவர். அவர் எதையும் யோசித்தே பேசுவார். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார். மிகவும் பொறுமைசாலி. எனக்கு தேவையான விஷயங்கள் இவைதான்.
கேள்வி:- திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா?
பதில்:- சினிமாவை விட்டு விலக மாட்டேன். என் வயதுக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பேன். எனது குடும்ப கௌரவத்தை காப்பாற்றுகிற மாதிரியான வேடங்களை மட்டுமே செய்வேன். நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் கூட திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்.
கேள்வி:- உங்கள் காதல் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கிடைத்து விட்டதா?
பதில்:- எங்கள் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமுகமாக நடக்கும். பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டனர்.
கேள்வி:- நீங்கள் சமூக சேவை பணிகளுக்காக நிறைய பணத்தை செலவிடுகிறீர்களே? அவர் எப்படி?
பதில்:- அவருக்கும் சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. என்னைப்போல் உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது. எனது சமூக சேவை பணிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார்.
இல்லாதவர்களுக்கு உதவும் சேவை குணம் அவருக்கு இல்லாமல் இருந்து இருந்தால், நான் காதலித்து இருக்கமாட்டேன். எனக்கு சமைக்க தெரியாது. ஆனால் அவர் நன்றாக சமைப்பார். அசைவ உணவுகளையும் ருசியாக சமைப்பார்.
எனவே நான் விரைவில் சமையல் கற்றுக்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு சமந்தா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தங்கமகன், தெறி திரைப்படங்களில் சமந்தா குடும்ப பொண்ணா அவ்வளவு அழகா நடித்த போதே சந்தேகம் வந்தது..ம்.. நடக்கட்டும்.. டும் டும்..