2005 இல் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நாட்டையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனதும், தனது குடும்பத்தினதும்   சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டு வந்து, தன்போன்ற  கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை ஓரங்கட்டத் தொடங்கிய பின்னரே, தான் நாட்டையும் கட்சியையும் பாதுகாப்பதற்காக அவரை எதிர்க்கத் தொடங்கியதாக ஒரு பிரச்சாரத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்க நடாத்தி வருகின்றார்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகிந்தவைத் திட்டுவதையே தனது வழமையாக்கியும் கொண்டிருக்கிறார் சந்திரிக. ஆனால், சந்திரிக கூறுவது உண்மையல்ல, அது  முற்றுமுழுதான பொய் என்பதை அவரது சாகாவும், இன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அதாவது, 2005இல் மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருந்த நேரத்திலேயே சந்திரிகா, மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்திருக்கிறார் என்ற விடயத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரி.

அண்மையில் காலியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி மைத்திரி, 2005இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக மகிந்த போட்டியிடுவதை சந்திரிக முற்றிலும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

இருந்த போதிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தான் மகிந்தவின் நியமனத்தை முற்றுமுழுதாக ஆதரித்ததுடன், மகிந்தவின் வெற்றிக்காக  இதயசுத்தியுடன்  இறுதிவரை பாடுபட்டதாகவும் மைத்திரி கூறியிருக்கிறார்.

siri_2713782fஇந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மைத்திரி அங்கு மேலும் கூறுகையில், “முன்னாள் ஜனாதிபதி சந்திரிக, மகிந்த 2005 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை.

மகிந்த வெற்றி பெறுவதை விட ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவதையே அவர் விரும்பினார்.

மகிந்தவை ஆதரிக்க வேண்டாம் என அவர் என்னைக் கேட்டபோது, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த நான் விம்மலுடன் அந்த அறையைவிட்டு வெளியேறினேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரி இந்த உண்மையை உடைத்ததுடன் மூலம், சந்திரிகவுக்கு மகிந்த மீது உள்ள தீராத கோபத்துக்குக் காரணம், நாட்டின் மீதும் சுதந்திரக் கட்சியின் மீதும் அவர் கொண்டுள்ள பற்றுத்தான் காரணம் என்ற அவரது பிரச்சாரம் பொய் என்பது நிரூபணமாகின்றது.

இது ஒருவகையில், 2005இல் மகிந்த ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெற்றது ஏறக்குறைய 1990இல் ஆர்.பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றதற்கு ஒப்பானது.

அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தனது அரசின் பிரதமராக இருந்த பிரேமதாச தனக்குப் பின் ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை.

ஆனால் ஜே.ஆரின் ஒரேயொரு மகன் ரவி ஜெயவர்த்தன ஜனாதிபதி வேட்பாளராவதற்குத் தகுதியற்று இருந்ததால், வேறுவழியின்றி பிரேமதாசவின் நியமனத்தை ஆதரிக்க வேண்டிவந்தது.

அதேபோல, சந்திரிகவுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தும் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் இருக்காததால், வேறுவழியின்றி தனக்குப் பின் மகிந்தவுக்கு வேண்டாவெறுப்பாக வழிவிட வேண்டி இருந்தது.

அவர் அப்படி மகிந்தவையிட்டுப் பயப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, சந்திரிகவின் தகப்பன் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவுடன்    சேர்ந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய ஸ்தாபக உறுப்பினர்களில் மகிந்தவின் தந்தை டி.ஆர்.ராஜபக்சவும் ஒருவர் என்றபடியால், அந்தச் செல்வாக்கால் கட்சியினர் மத்தியில் மகிந்தவுக்கு செல்வாக்கு ஏறபட்டுவிடும் என்பது.

இரண்டாவது காரணம், சந்திரிக போல அல்லாது மகிந்தவின் பிள்ளைகள், சகோதரர்கள், மாமன் – மச்சான் -மச்சாள் என மகிந்தவின் ஒரு பெரிய குடும்பப் பட்டாளமே சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்தது.

எனவே, ஒருகால் மகிந்தவிடம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி போய்விட்டால், அது என்றென்றும் நிரந்தரமாகிவிடும், அதன் பின்னர் தனது பிள்ளைகள்  அரசியலுக்குத் தயாராகும் போது, ராஜபக்ச வம்ச குடும்பத்திடமிருந்து பண்டாரநாயக்க வம்ச  குடும்பத்துக்கு கட்சியின்  அதிகாரத்தை மீண்டும் எடுப்பது  இயலாததாகப் போய்விடும் என சந்திரிக அஞ்சியமை.

அதன் காரணமாகவே 2005இல் மகிந்த ஜனாதிபதி வேட்பாளராவதை தூரநோக்குடன் சந்திரிக எதிர்த்திருக்கிறார் என்பது தெளிவாகின்றது.

அதனால்தான் காத்திருந்து திட்டமிட்டுக் காய்நகர்த்திய சந்திரிக, மேற்கத்தைய சக்திகளின் ஆதரவு, மைத்திரியை கட்சியை விட்டு உடைத்தெடுத்தமை, ரணிலின் ஒத்துழைப்பு என்பன மூலம் மகிந்தவின் ஆட்சிக்குக் குழிபறித்தார்.

இங்கு அவர் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல், பிரச்சினையை தனது குடும்பத்துக்கும், மகிந்தவின் குடும்பத்துக்கும் இடையிலான அதிகாரப் போட்டியாகப் பார்த்ததின் விளைவாக, தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக வர வேண்டும் என்ற கணக்கில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், இலங்கை மக்களின் மீது ஓர் ஏகாதிபத்திய சார்பு, பிற்போக்கு ஆட்சியை சுமத்துவதற்கு வழி ஏற்படுத்திவிட்டுள்ளது.

சந்திரிக, ஆரம்பத்திலிருந்தே மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட்டார் என்ற விடயத்தை ஜனாதிபதி மைத்திரி திடீரென ஏன் பகிரங்கப்படுத்தினார் என்ற கேள்வி பலருடைய மூளையைக் குடைய ஆரம்பித்துள்ளது.

அதுபற்றி இரண்டு ஊகங்கள் நிலவுகின்றன. ஒன்று, சந்திரிகவின் தொடர்ச்சியான மூர்க்கத்தனமான மகிந்த எதிர்ப்பால், கட்சித் தலைவராக இருந்தும் மைத்திரியால் சுதந்திரக் கட்சியை இன்னமும் கூடத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் இருப்பதுடன், கட்சி பிளவுபடும் நிலையும் உருவாகி இருப்பது.

இரண்டாவது, மைத்திரி இரண்டாவது  தடவையாக தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தனது பதவியேற்பு வைபவத்தில் சொல்லியிருந்தாலும், எல்லோரையும் போலவே பதவியில் அமர்ந்ததும் அதைத் தொடர எழும் ஆசை மைத்திரிக்கும் ஏற்பட்டிருப்பது.

அத்துடன் மகிந்தவிடமிருந்து பதவியை மைத்திரியிடம் கைமாற்றுவதற்கு சந்திரிக வழி வகுத்திருந்தாலும், அது தனது பிள்ளைகள் அரசியலுக்கு வரும் வரையிலான ஒரு இடைக்கால ஏற்பாடு என்பதை மைத்திரி புரிந்து கொண்டிருப்பது.

இந்த விடயங்களால் மைத்திரிக்கும் சந்திரிக்கவுக்கும் இடையிலான உறவுகள் முன்புபோல நல்லாக இல்லை என்ற அரசல் புரசல்களான கதைகள் அரசியல் அரங்கில் உலா வருகின்ற   நேரத்தில்தான், மைத்திரியின் காலி பேச்சு வெளிவந்திருக்கிறது.

மைத்திரி தனது இலக்கை மகிந்தவை விட்டு சந்திரிகவை நோக்கித் திருப்பியிருக்கிறரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வானவில், வைகாசி 2016

Share.
Leave A Reply