கேகாலை பெலிகல்ல ஹத்தாகொட, தரங்கஹவ பிரதேசத்தில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது கணவரை பொல்லால் தாக்கி கொலை செய்ததோடு தனது இரு பிள்ளைகளையும் கணவரது சடலத்துடன் சேர்த்து வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த கொடயலாகே பிமேரத்ன என்ற 47வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தம்பதியினரிடையே அடிக்கடி இவ்வாறு சண்டை சச்சரவு இடம்பெற்று வந்துள்ளதாகவும் அதிகமான சந்தர்ப்பங்களில் குறித்த பெண் தனது கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாகவும் உயிரிழந்த நபரின் சகோதரி தெரிவித்துள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் மேற்படி தம்பதியினரிடையிலான வாய்த்தர்க்கம் நீண்டு சென்றதில் ஆத்திரமடைந்த பெண், பொல் ஒன்றினால் அவரது கணவனை தாக்கியதால் அவர் விழுந்துவிட்டதாகவும் பின்னர் தனது ஐந்து மற்றும் மூன்று வயதான பிள்ளைகள் இருவரையும் வீட்டிலடைத்து விட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஐந்து வயதான மகன் பொலிஸாரிடம் சாட்சியமளித்த போது, தனது தாயின் தாக்குதலில் கீழே வீழ்ந்த தந்தையை தானும் தம்பியும் சேர்ந்து எழுப்பிப்பார்த்த போது அவர் எழும்பாததால் அவரை அப்படியே விட்டு விட்டோம் எனவும் பசியெடுத்த வேளையில் வீட்டினுள் இருந்த வாழைப் பழத்தை உண்டதாகவும் அச்சிறுவன் தெரிவித்தார்.
இவ்வாறு தனது தந்தையின் சடலத்துடன் மேற்படி சிறுவர்கள் இருவரும் சம்பவ தினமான கடந்த 19 ஆம் திகதியில் இருந்து நேற்று வரை தனிமையில் இருந்ததாக தெரிவித்தனர்.
சடலத்தினை மீட்ட பொலிஸார் அதனை கேகாலை பொது வைத்தியசாலைக்கு மரண பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கேகாலை பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கைது செய்யும் நோக்கில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.