ஸ்டார் வோர்ஸ் திரைப்படப் பாத்திரங்களில் ஒன்றான சியூபெக்காவின் முகத்தோற்றத்தைப் போன்ற முகமூடி அணிந்த நிலையில் பெண்ணொருவர் சிரித்த பலமான சிரிப்பு இணையத்தை கலக்கி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த கென்டெஸ் பெய்னே எனும் இப் பெண் வாகனமொன்றின் சாரதி ஆசனத்தில் அமர்ந்த நிலையில், “சியூபெக்கா” முகமுடி அணிந்தவாறு சிரித்த காட்சியை வீடியோவில் பதிவுசெய்துகொண்டார்.
4 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு 4 நாட்களில் 13.5 கோடி தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளன. இரு பிள்ளைகளின் தாயான கென்டஸ் பெய்னே (37) ஸ்டார் வோர்ஸ் திரைப்படங்களின் தீவிர விசிறியாவார்.
இவர் அண்மையில், டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஷொப்பிங் நிலையத்தில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பிய வேளையில் இந்த சியூபெக்கா முகமூடியைக் கண்டாராம்.
இதை அணிந்துகொள்பவர் வாயைத் திறந்தால் கர்ச்சனை ஒலி எழும் வகையில் இந்த முகமூடி தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த முகமூடியை வாங்கிய கென்டஸ் பெய்னே, காரில் இருந்தவாறே அதை அணிந்துகொண்டு சிரித்துப் பார்த்துள்ளார்.
இந்த சிரிப்பு தற்போது அவரை உலகம் முழுவதும் பிரபலமானவராக்கியுள்ளது. நான் இப்படி சிரிப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் கென்டெஸ் பெய்னே.