கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் கடும் சவாலுக்கு, மத்தியிலும் தொடரும் என்று மீட்பு பணிகளில் ஈடுபடும் படையினருக்கு தலைமைதாங்கும் அதிகாரி தெரிவித்தார்.
இந் நிலையில் அரநாயக்கவில் இதுவரை 20 பேரின் சடலங்களும் மேலும் 20 பேரின் உடற்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் அரநாயக்க பகுதியில் காணாமல் போன 132 பேரை தேடும் பணிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினராலும் விசேட அதிரடிப் படையினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரநாயக்க பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை சாமபுர என்ற மலையிலிருந்து ஏற்பட்ட மண் சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதையுண்டு போயின.
சிறிபுர, எலங்கபிட்டிய மற்றும் பல்லேபாகே ஆகிய கிராமங்களே இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஏற்பட்ட இந்த மண்சரிவில் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக மண்ணில் புதையுண்டன.
அத்துடன் 280 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன .
இந்நிலையில் இந்த மூன்று கிராமங்கள் மீதும் ஏற்பட்ட மண்சரிவில் 170 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டு போன நிலையில் 28 பேரின் சடலங்களும் 20பேரின் உடற் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரநாயக்க பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளன. இப்பகுதிகளில் இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஆனால் எக்காரணம் கொண்டும் தற்போதைக்கு மீட்புப் பணிகளை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று மீட்பு பணிகளில் ஈடுபடும் படையினருக்கு தலைமைதாங்கும் அதிகாரி தெரிவித்தார்
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் கடும் சவாலுக்கு மத்தியிலும் தொடரும் .
தற்போதைக்கு மீட்புப் பணிகளை நிறுத்தும் எண்ணம் இல்லை. ஆனால் கடும் சவால்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. மழை பெய்யும்போது பணிகளை நிறுத்திவிட்டு மீண்டும் ஆரம்பித்து நடவடிக்கையை முன்னெடுக்கின்றோம் என்றார்.
சாமபுர மலையிலிருந்து தொடர்ந்தும் மண்திட்டுகள் சரிந்துவந்துகொண்டிருப்பதனால் மீட்பு பணியாளர்கள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் கடந்த சனிக்கிழமை சாமபுர மலையிருந்து பாரிய மண்சரிவு ஏற்பட்டிருந்தது. எனினும் இந்த அனர்த்தத்தில் எவருக்கும் சேதம் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று கிராமங்களில் ஏற்பட்ட மண் சரி வில் சிக்கிய 1100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 1100 க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.