அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட முல்லாஹ் அக்தர் மன்சூருக்கு பதில் ஆப்கான் தலிபான் அமைப்பு புதிய தலைவர் ஒருவரை அறிவித்துள்ளது.
இதன்போது மன்சூர் கொல்லப்பட்டதை முதல் முறை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தலிபான்கள் புதிய தலைவராக மெளலவி ஹைபதுல்லாஹ் அகுன்சதாவை நியமித்துள்ளனர்.
புதிய தலைவரின் பங்களிப்பு குறித்து பெரிதாக அறியப்படாதபோதும் இந்த தேர்வு சர்ச்சைகளற்ற தேர்வாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தலிபான் நிறுவனர் முல்லாஹ் முஹமது ஒமரின் இடத்திற்கு கடந்த ஆண்டு மன்சூர் நியமிக்கப்பட்டபோது தலிபான் அமைப்புக்குள் பாரிய பிளவு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பலுகிஸ்தான் மாகாணத்தில் தனது கார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மன்சூர் மீது கடந்த சனிக்கிழமை வான் தாக்குதல் நடத்தப்பட்டது.
தலிபான் மற்றும் ஆப்கான் அரசுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு அவர் இடையூறாக இருந்து வந்ததாக அமெரிக்கா மற்றும் ஆப்கான் அரசுகள் குறிப்பிட்டன. இதற்கு பதில் தலிபான்களின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
மெளலவி ஹைபதுல்லாஹ் அகுன்சதா ஒரு மத அறிஞர் என்பதோடு தலிபான் நீதிமன்றங்களின் முன்னாள் தலைவர் ஆவர். ஆப்கான் தலிபான்களின் பெரும்பாலான மதத்தீர்ப்புகளின் பின்னணியிலும் இவர் இருக்கிறார்.
45 முதல் 50 வயதக்கு இடைப்பட்டவராக இருக்கும் அவர் ஆப்கான் தலிபான்களின் உப தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.
“ஷூராவின் (உச்ச கவுன்ஸில்) ஏகமனதான முடிவை அடுத்து இஸ்லாமிய எமிரேட்டின் (தலிபான்) புதிய தலைவராக ஹைபதுல்லாஹ் அகுன்சதா நியமிக்கப்பட்டார்.
அவருக்கு சூராவின் அனைத்து உறுப்பினர்களும் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்” என்று தலிபான் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லாஹ் ஒமரின் மகன் முல்லாஹ் முஹமது யாகூப் தற்போதைய துணைத்தலைவர் சிராஜுத்தீன் ஹக்கானியுடன் அந்த அமைப்பின் இணை துணைத்தலைவராக இருப்பார் என்றும் தலிபான் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கர தாக்குதல்களை நடத்திய ஹக்கானி வலையமைப்பின் தலைவராகவே சிராஜுத்தீன் ஹக்கானி அறியப்படுகிறார்.
இந்த குழு குறிப்பாக தலைநகர் காபுலில் மேற்கத்தேய மற்றும் ஆப்கான் இலக்குகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
முல்லாஹ் மன்சூர் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்த 2015இல் தலிபான் அமைப்புக்குள் பெரும் பிளவு ஏற்பட்டது. ஆனால் ஹைபதுல்லாஹ் அகுன்சதாவின் நியமனம் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் தலிபான்கள் பலம்கொண்டிருக்கும் கன்தஹார் பிரதேசத்தில் இருந்து வந்தவர் என்பதாலேயே எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆப்கானின் பலம்மிக்க அரச எதிர்ப்பு சக்தியான தலிபான்கள் கடந்த ஆண்டில் மாத்திரம் ஆப்கானில் நடத்திய தாக்குதல்களில் 11,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்து இருப்பதோடு 5,500 அரச துருப்பினர் மற்றும் பொலிஸார் பலியாகியுள்ளனர்.
1996 ஆம் ஆண்டு ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் 2001 அமெரிக்க படையெடுப்பு வரை அங்கு அதிகாரத்தில் இருந்தனர்.
15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஆப்கானில் அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படையின் சுமார் 13,000 துருப்பினர் அங்கு நிலைகொண்டுள்ளனர். இதில் சுமார் 9,800 அமெரிக்க படையினர் அடங்கும்.