கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரியொருவரிடம் தரக்குறைவாக நடந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச அதிகாரிகள் படையினரிடம் இவ்வாறு தரக்குறைவாக நடந்துக்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது அறிக்கையில்,
திருகோணமலை – சாம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் கிழக்கு மாகாண சபை முதல்வர் நஷீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை அவ மரியாதையாக பேசியமை கண்டிக்கத்தக்கதாகும்.
அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கும்போது இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நடந்துக்கொண்டமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.
இவ்வாறு படையினரை வடக்கு அரசியல்வாதிகள் அவமதிப்பது முதற்தடவையல்ல. சில நாட்களுக்கு முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் அனுமதியின்றி இராணுவப்படை முகாமுக்குள் பிரவேசித்திருந்தனர்.
குறித்த விடயத்தில் தற்போதைய அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அரசாங்கம் அமைதியாக செயற்பட முடியாது. முறையான விசாணையை மேற்கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கெதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.