நடிகை சமந்தாவின் காதலர், நடிகர் நாகசைதன்யா என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

காதல் திருமணம்
சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர், இளம் கதாநாயகனை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே சித்தார்த்துடன் சமந்தா இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. தற்போது சமந்தா சினிமாவில் தீவிரமாக நடித்ததுடன் சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

நாக சைதன்யா
இந்த நிலையில்தான் திருமண அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார். காதலன் யார் என்ற விவரத்தை திருமண தேதியை தெரிவிக்கும்போது வெளியிடுவேன் என்றும் சமந்தா கூறினார்.

இதை தொடர்ந்து அவர் காதலிப்பவர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டது. பேஸ்புக், டுவிட்டரில் பல்வேறு நடிகர்களின் பெயர்கள் யூகங்களாக பரவியது.

சமந்தா காதலிக்கும் நடிகர் நாகசைதன்யா என்று தெலுங்கு பட உலகினர் தற்போது உறுதிபடுத்தி உள்ளனர். நாகசைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

தமிழில் வெற்றிகரமாக ஓடிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் தெலுங்கில் எடுத்த போது அதில் நாகசைதன்யாவும் சமந்தாவும் ஜோடியாக நடித்தனர்.

காதலை வளர்த்தனர்
படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். நட்சத்திர ஓட்டல்களில் ஜோடியாக விருந்து சாப்பிட்டார்கள்.

திருமண தகவலை சமந்தா வெளியிட்டதும் நாகசைதன்யாவுக்கு டுவிட்டரில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Share.
Leave A Reply