மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்லாறு துறைநீலாவணை ப.நோ.கூ. சங்கத்திற்கருகில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாற்றில் இடம்பெற்ற தனியார் பஸ் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கோர விபத்தில் 34 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மருதமனையில் இருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட மருதமனையைச் சேர்ந்த கைத் தொலைபேசி முகவரும் இளம் குடும்பஸ்தருமான முகமட் அஸ்பர் மௌலானா (34) என்பவரே இவ் விபத்தில் பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் தலை மற்றும் கை கால் என்பன படுகாயமுற்று அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையியல் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பலனின்றியே உயிரிழந்துள்ளார்.
எதிர்திசையில் இருந்து வந்த தனியார் வஸ்சும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் இவ் விபத்துச் சம்பவித்துள்ளது.
இவ் விபத்துப்பற்றி களுவாஞ்சிக்குடி பொலிசார் உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.