இந்தியாவில் இருப்பதால் நாம் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்லலாம், எவ்வித தடையும் இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் அந்த எண்ணத்தை சற்று நேரம் தள்ளி வைத்துவிட்டு, இக்கட்டுரையைப் படித்து பாருங்கள்.
ஏனெனில் இந்தியாவின் சில இடங்களுக்கு இந்தியர்களுக்கே அனுமதி இல்லை என்பது தெரியுமா? ஆம், இந்த இடங்களுக்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி நுழைய கூட விடமாட்டார்கள்.
இங்கு அப்படிப்பட்ட அந்த இடங்களைக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்…
யூனோ-இன் ஹோட்டல் – பெங்களூரு
இந்த ஹோட்டல் ஜப்பானிய மக்களுக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டது. மேலும் இந்த ஹோட்டலில் தங்கியுள்ள பார்வையாளர்களின் இந்திய நண்பர்கள் வேண்டுமானால் அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது இந்த ஹோட்டல் இனப் பாகுபாடு பற்றிய குற்றச்சாட்டுகளால் பெங்களூரு மாநகராட்சி குழுவினரால் மூடப்பட்டுவிட்டது.
இலவச கசோல் கஃபே – கசோல்
கசோலில் உள்ள இந்த காபி கடையில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டவர் அதுவும் அவர்களது பாஸ்போட்டைக் காண்பித்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும் இந்த காபி கடை இஸ்ரேலிய பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டதாம்.
வெளிநாட்டவருக்கான பீச் – கோவா
ஆம், நீங்கள் படித்தது உண்மை தான். கோவாவில் உள்ள சில கடற்கரைகளில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டினர் மட்டுமே இந்த கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும். இதற்கு காரணம் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக என்றும் உரிமையாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே கோவாவின் சில கடற்கரைகளில் உங்களை அனுமதிக்கவில்லை என்றால் ஆச்சரியப்படாதீர்கள்.
லாட்ஜ் – சென்னை
இந்த லாட்ஜ்ஜின் பெயர் ஒரு சில காரணங்களால் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த லாட்ஜ்ஜின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு பலகை, இந்தியர்களை மிகவும் இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த குறிப்பிட்ட லாட்ஜ் வெளிநாட்டினருக்கு அதுவும் பாஸ்போர்ட் இருந்தால் தான் அனுமதி உண்டு. தற்போது இந்த லாட்ஜ் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
புதுச்சேரியின் சில கடற்கரைகள்
கோவாவைப் போன்றே, புதுச்சேரியில் உள்ள சில கடற்கரைகளுக்கு வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதிலும் போர்ச்சுகீசிய மற்றும் பிரெஞ்சு கட்டிடக்கலை அங்குள்ள அழகிய கடற்கரையை ஒட்டி புடைசூழ உள்ளன. இதனால் நிறைய வெளிநாட்டினர் புதுச்சேரிக்கு வருகைத் தருவார்கள்.