உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கொல்வது மிகவும் எளிதான காரியம் என அவர்களை நேருக்கு நேர் எதிர்த்து தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

டென்மார்க் நாட்டை சேர்ந்த ஜோன்னா பலனி என்ற 23 வயதான இளம்பெண் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2014 நவம்பர் மாதம் சிரியாவிற்கு சென்றுள்ளார்.

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் குர்து இன போராளிகளுடன் சேர்ந்து ஜோன்னா  போராடி வந்துள்ளார்.

இவருடன் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வந்துள்ளார். போராட்டக்களத்தில் இறங்கியதும் ஒவ்வொரு வீரரும் 24 மணி நேரமும் உஷாராக இருக்க வேண்டும்.

ஆனால், ஜோன்னாவுடன் சேர்ந்த அந்த ஸ்வீடன் நபருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால், திறந்தவெளியில் நின்று புகைபிடித்துள்ளார்.

அப்போது, பல மைல்கள் தூரத்திலிருந்து சுடக்கூடிய ‘ஸ்னைப்பர்’ துப்பாக்கி மூலம் சிகரெட் புகையை கண்டுபிடித்து அவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டனர்.

எனினும், நம்பிக்கையையும் தைரியத்தையும் கைவிடாத ஜோன்னா தொடர்ந்து சிரியாவில் தங்கி போராடி வந்துள்ளார்.

ஓராண்டிற்கு பிறகு 15 நாட்கள் விடுப்பில் தாய்நாட்டிற்கு திரும்பிய அவரது பாஸ்போர்ட்டை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதால் தற்போது சிரியாவிற்கு திரும்பாமல், அங்குள்ள கல்லூரி ஒன்றில் அரசியல் மற்றும் தத்துவவியல் பட்டம் பயின்று வருகிறார்.

சிரியாவில் தாக்குதல் நடத்தியது குறித்து ஜோன்னா கூறுகையில், “நான் இடம்பெற்றிருந்த குர்து அணியினரின் தலைமையிலான வீரர்கள்தான் மோசூல் நகருக்கு அருகில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ஒரு கிராமத்தை மீட்டோம்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு தற்கொலைப்படை தாக்குதல் மட்டும் தான் தெரியும்.

நேருக்கு நேராக நின்று அவர்களால் போரிட முடியாது. எனவே, ஐ.எஸ் தீவிரவாதிகளை கொல்வது மிகவும் எளிதான காரியம்.

அதே நேரத்தில், சிரியா அதிபரான ஆசாத்தின் படை வீரர்கள் நன்கு பயிற்சி பெற்றுள்ளதால் அவர்களை வெல்வது கடினம்’ என தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் தங்களின் நிலையை உணர வேண்டும் என்ற நோக்கில் சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கத்தில் இருக்கும் ரக்கா நகரம் சிதைந்து வருவதை அங்குள்ள பெண்கள் இருவர் படம் பிடித்து வெளி உலகிற்கு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply