சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர் சுவிஸ் 6,000 பிராங் 8 லட்ச ரூபாயை சாலையில் தவறவிட்டதை தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக ஒரு பெண்ணின் நேர்மையான குணத்தால் அவரது பணம் முழுவதும் அவருக்கு திரும்ப கிடைத்துள்ளது.
சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Walenstadt என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் கடந்த 11ம் திகதி காலை 9 மணியளவில் ஷொப்பிங் சென்றுள்ளார்.
ஷொப்பிங் அனைத்தையும் முடித்துவிட்டு புறப்பட்டபோது, 6,000 பிராங்க்(8,89,403 இலங்கை ரூபாய்) அடங்கிய அவரது பணப்பையை தவறுதலாக விட்டு வீடு சென்றுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு அங்கு வந்த பெண் ஒருவர் பணப்பையை எடுத்து அதனை சோதனை செய்தபோது 6,000 பிராங்க் பணம் இருந்துள்ளது.
மேலும், அதில் பணத்தின் உரிமையாளர் புகைப்படம், வீட்டு முகவரி என எந்த தகவல்களும் இல்லாததால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்ற அந்த பெண் பணப்பையை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
பெண்ணின் நேர்மையை கண்டு வியந்த பொலிசார் அவரை வெகுவாக பாராட்டினார்கள்.
பணப்பையில் பணத்தை தவிர எந்த தகவல்களும் இல்லாததால், அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறியுள்ளனர்.
பின்னர், பணம் தொலைந்த இடம், நேரம் உள்ளிட்டவைகளை அளித்து பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளனர்.
பணம் தொலைந்த நாளிலிருந்து 3 மாதத்திற்குள் உரிமையாளர் பணத்தை பெற்றுக்கொள்ளாவிட்டால், சுவிஸ் சட்டப்படி அதனை கண்டெடுத்த அப்பெண்ணிற்கு முழுப்பணமும் சென்றடையும் என விளம்பரம் செய்துள்ளனர்.
பணம் காணாமல் போய் 2 கிழமைகள் நிறைவடைந்துள்ள நிலையில் பணத்தை தவறவிட்ட அந்த நபர் நேற்று காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.
மேலும், பொலிசாரிடம் பணம் தொடர்பான உண்மை தகவல்களை அவர் அளித்ததால் முழு பணத்தையும் பொலிசார் ஒப்படைத்தனர்.
இதுமட்டுமில்லாமல், பணத்தை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்த அந்த பெண்ணிற்கு 600 பிராங்க்(88,958 இலங்கை ரூபாய்) சன்மானம் வழங்கி பொலிசார் பாராட்டியுள்ளனர்